Sonntag, März 30, 2008

நமது மக்கள்...

சிங்களச் சினிமா முன் வைக்கும்"பிரபாகரன்" விமர்சகர் இரதன் வழிக் கருத்துச் சுதந்திரமாகிறது!

//புலம் பெயர் தமிழ் வாழ் மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் மீது, எழுப்பப்பட்ட
அராஜகம் புதியதல்ல. சபாலிங்கம் படுகொலை, தேடக நூல் நிலைய எரிப்பு, உயிர்நிழல்
லக்சுமி வீட்டில் இலக்கிய சந்திப்பு ஆவணங்கள் சூறையாடல், தாயகம் ஆசிரியர் மீதான
தொடர்ச்சியான மிரட்டல்கள் போன்ற பல சம்பவங்களை குறிப்பிடலாம். இன்றும் இவை வேறு
வேறு வடிவங்களில் தொடர்கின்றன. துசார பீரிசுக்கு தனது கருத்தை தமிழ் மக்கள் மீது
வைப்பதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு. இது பற்றிய விமர்சனங்களுக்கும் முழுமையான
சுதந்திரம் உண்டு. ஆனால் படத்தை வெளியிடவிடாமல் தடுப்பது கருத்துச்
சுதந்திரத்துக்கு எதிரான விடயம்
.//-துசார
பீரிஸ் மீதான தாக்குதல் - கருத்துச் சுதந்திரத்தை மீறும் போலி உணர்வுகள் : ரதன்
(கனடா)

தேசம் நெற்றில் கருத்தாடும் ரதன் "பிரபாகரன்" படத்துக்கு-கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்துவிடலாம்.உலக அரசுகளும்,இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவச் சர்வதிகார அரசும் தமிழ் பேசும் மக்களின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாக விரிந்துகிடக்கும் போராட்டத்தைப் புலிகளே தொடர்ந்து நகர்த்தும் அரசியலில்"பிரபாகரன்"என்ற தனிநபர்சார்ந்த பிரச்சனையாகக் குறுக்கியும்விடலாம்.கரும் புலிகள்-குண்டு கட்டி மூளைச் சலவை செய்து வெடித்துத் தொலையவும் விடலாம்.ஆனால்,இன்றைய இலங்கையின் அரசியல் நிகழ்வுகளுக்கு-இனவாத அழிப்பு யுத்தத்துக்குத் தமிழ் மக்களின் தவறான போர் உத்தியா காரணம்?அல்லது,பிரபாகரன் எனும் மனிதர்தம் சர்வதிகாரத்தனமான ஒடுக்குமுறை அராஜக அரசியலா காரணமாக இருக்கிறது?தமிழ் பேசும் மக்களின் பிணங்கள்மீது ஏறி நின்று அரசியல் செய்யும் பல்வேறுவகைகப் பண்புகளைக்கொண்ட தமிழ்க் குறுங்குழு அரசியல் முன் வைத்திருக்கும் "மக்கள் நலன்" போன்றுதான் இதுவுமொரு(பிரபாகரன் சிங்களச் சினிமா) "கருத்துச் சுதந்தரம்"-ஜனநாயகப் பண்பு?

தமிழ் இளைஞர்கள் கரும் புலியாவதற்கும்,பாலஸ்தீனத்தில் தற்கொலைக் குண்டுதாரியாகும் ஆறுவயதுப் பாலகனுக்கும் இடையில் உறவுறும் அரசியல் போக்கு-அதன் தன்மை மற்றும் இருப்பு எதன் பொருட்ட நிகழ்கிறது?இத்தகைய அரசியலின் தொடர்ச்சி இன்றைய ஈராக்கிய அவலத்துக்கும் அதன் அழிவுக்கும் காரணமாகும் உலகத்தில் நாம் வாழ்ந்தபடி,தற்கொலைத் தாக்குதல் மற்றும் கரும் புலிகள் குறித்த "பிரபாகரன்"படம்-கருத்துச் சுதந்திரம் என்ற கோதாவில் தமிழ் மக்களின்மீது சிங்கள மற்றும் உலகப் பாசிச அரசியல் கட்டவிழ்க்கும் அராஜக அரசியலை மறுக்கும் அல்லது குறுக்கும் போக்கிலிருந்து இத்தகைய அழிவுகளைத் தொலைத்த கருத்துச் சுதந்திர வாதமாக இருக்க முடியாது.சிங்கள-உலக அரசியல் நகர்வு தமிழ்பேசும் மக்களின் உயிர்களோடு விளையாடும் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு பாலஸ்தீனத்துப் போராளியை நாம் ஈழத்திலும் காணத்தக்கதாகவே இருக்கும்.தன் முன்னால் சிதைக்கப்பட்டத் தனது குடும்பத்தைச் சுவராக நினைத்திருந்த பிஞ்சு உயிர்க்கொடிக்கு என்ன ஆதாரம் தொடர்ந்து இருக்கிறது, அது உலகத்தில் தொடர்ந்து தனது உயிரைப் படர்ந்துகொள்வதற்கு?பாரி மன்னன் அங்கே,பிரபாகரன் உருவத்தில் வருவதாக அது கனாக்காண வைக்கப்படுவதற்கு எந்த அரசியல் காரணமாக இருக்கிறது?மேலும்,மேலும் தொடர் தாக்குதல்களாலும் உயிர்க் கொலைகளாலும் அடக்கப்படும் அரசியலை-போரை இலங்கை அரசின் பின் நின்று இந்தியா தொடரும்போது அதன் தொடர் இயக்கத்தால் புலிகள் என்பவர்கள் போராளிகளைத் தமது அரசியல் சார்ந்து தொடர்ந்து தகவமைக்க முடியும்.இங்கே, புலிகள் என்பது இன்னொரு புதிய ஆளும் வர்க்கத்தின் வரவைச் சொல்வதற்கான குறியீடாகவே நாம் முன் வைக்கிறோம்.அங்கே பிரபாகரன் என்பவரைத் தொடர் குறியீடாக்கும் அரசியல் மக்களைத் தமது பக்கம் வைத்திருக்கும் ஒரு வியூகத்தின் இன்னொரு பகுதிதான்.இதைவிட்ட மற்றைய பகுதியான சிங்கள ஒடுக்கு முறையின் தொடர் மனித மறுப்பே தற்கொலைப் போராளிகளின் மனதிடத்தை நிலைப்படுத்துவதாகும்.


என்றபோதும்,அரச வன்கொடுமை இராணுவத்துக்கு எதிராக மக்கள் உயிர்வாழ்வுக்காகக் குரல் கொடுக்குக் கூடிய சூழலை-அவர்களின் ஜனநாயகத் தேவைகளை நிவர்த்தி செய்தபடி,தமிழ் மக்களின் சுய கெளரவத்துக்கான அரசியலை அனுமதித்தபடி இலங்கை அரசு இத்தகைய படங்களை எடுக்கலாம்.அன்றி இத்தகைய நிலைமைகளை உருவாக்குவதற்கான முன் நிபந்தனைகளைக் கொண்டியங்குவதற்கானவொரு கலகக் கருத்தியலை இலங்கைச் சிங்களக் கலைஞர்கள் முன்வைக்கலாம்.இவையெதையும் நோக்காகக்கொண்டியங்க மறுக்கும் கலை வடிவங்களின் பின்னே இயங்கும் அரசியல் மகிந்தாவினதும் அவரது குடும்பத்தினதும் பொல்லாத அரசியலுக்கு முண்டு கொடுப்பதோடு நின்றுவிடுபவையல்ல.மாறாக,இவை கொண்டியங்கும் தளம் உலகப் பொருளாதார ஆர்வத்தோடு நமது போராட்டத்தருணங்களை இணைத்து, நம்மை மேலும் அடிமையாக்க முனையும் ஏகாதிபத்தியங்களின் முகமூடி "மனிதாபிமானம்"எனும் கபட அரசிலை நமக்குள் விதைப்பதுதான்.இன்றோ,இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு தமிழ் இனத்தைப் பூண்டோடு நசுக்கி-ஒடுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தையே பாழ்படுத்திய ஒரு அரசு,இப்போது அதன் கருத்தியல்தனமான போராட்ட முனைப்பில்-தந்திரத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை அணுகுகிறது.ஏதோ பிரச்சனையே பிரபாகரன் எனும் தனிநபரால் ஏற்பட்டது-நடைபெறுகிறதென்ற "பேமானி"கருத்தியலை இங்கு எவரும் முன்வைக்கத் தேவையில்லை.இலங்கையில் இனங்களுக்கிடையிலான மூலதன வளர்ச்சி மிகப் பெரும் முரண்பாடுகளாக விரிகின்றன.இது, இனத்துவ அரசியலால் இன்னொரு இனத்தின் பொருளாதார ஆர்வங்களைக் கிள்ளியெறிய முனைந்தபோது தவிர்க்க முடியாது முழுமொத்த இனங்களையுமே பாதிக்கும் அரசியல் அராஜகமாக மாறி,இன்று மிகப்பெரும் இனவழிப்பாகத் தொடர்கிறது.இங்கே,பிரபாகரனோ அல்லது மகிந்தவோ போனாலும்-மரணித்தாலும் பிரச்சனை இருந்துகொண்டேயிருக்கும்.

நடைமுறைசார்ந்து, மக்களின் பிரச்சனைகளை ஜனநாயகப் பண்புகொண்ட இனவாதமுகமற்ற பொருளாதார வியூகங்களால் தீர்க்க முனையாத பாசிசச் சிங்கள அரசானது இன்று தமிழ் மக்களின் உரிமைகளை-வாழ்வியல் மதிப்பீடுகளை மட்டும் தகர்க்கவில்லை.மாறாகத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையுஞ் சிதைத்து,அவர்களின் பல்லாயிரக்கணக்கான உயிர்களை வேட்டையாடி வருகிறது!இத்தகைய அராஜகத்தனமான அரசியலை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களையே வேட்டையாடும் சிங்கள அரசியல் முன்னெடுப்பிலிருந்தபடி தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பிரபாகரனுக்கூடாகப் பார்க்க முனையும் மிகக் குறுகிய பார்வைகளைச் சிங்களப் புத்திஜீவிகளே சிங்கள அரசசார்பாக முன்வைக்கும்போது, இங்கே நாம் மிகவும் குறுகிய மனதோடு அனைத்தையும் புலிப்"பாசிசம்"சார்ந்து அணுகுகிறோம்.

இது மிக அவலமானது.

இன்றைய உலக அரசியல் நகர்வில் என்றுமில்லாதவாறு இலங்கை கவனம் பெறுகிறபோது அங்கே இலங்கையர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாக அன்னிய அரசுகள் முன்வந்துவிடுகின்றன.இந்திய அரசியலுக்கோ அன்றி அமெரிக்க அரசியலுக்கோ நமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியுமென்றால் இத்தகைய பிரபாகரன் படமும் அவசியமற்றது.இது குறித்துக் கருத்துச் சுதந்திரமென ஓலமிடுபவர்கள் இலங்கையில் எத்தனையோ பத்திரிகையாளர்களைக் கைதுபண்ணியபோது-அடைத்துச் சித்திரவதை செய்தபோது அதற்கான குரலைப் பலமாகப்பதியவில்லை!

இன்றும், சிறையில் வாடும் ஜசிகரன் மற்றும் வளர்மதியென்ற அவர்தம் துணைவியார் குறித்து என்ன நிலைப்பாட்டை இந்தக் கருத்துச் சுதந்திரம் கொண்டிருக்க முடியும்?அல்லது பூசாவிலும் மற்றும் இலங்கையின் கொடூரச் சிறைச்சாலைகளிலும் பல பத்தாண்டுகளாக வாடும் தமிழ் இளைஞர்கள் குறித்து எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க முடியும்?

இது குறித்தான மதிப்பீடுகளை எவர் முன்வைக்கும்போது அதையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிரானதென அப்பப்ப வேட்டையாடப்படும் ஊடகவியலாளரின் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் இலங்கைப் பாசிச அரசின் அட்டூழிய அரச நகர்வை நிறுத்தி, இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளை-சுயநிர்ணயவுரிமையை அங்கீகரித்து இலங்கையில் இனப்பிரச்சனைக்கு அரசு தீர்வு முன்வைத்து ஆத்மார்த்தமாக நகர்வைச் செய்யும்போது பிரபாகரன் என்ற தனிநபரின் சேடம் இழக்க ஆரம்பிக்கும்.ஆனால்,அதை மறுத்துப் பிரபாகரனின் இருப்புக்குத் தீனிபோட்டு இலங்கையில் புரட்சிகரமான நகர்வுகளைப் பூண்டோடு நசுக்கும் தந்திரத்தை உலகமும்,இலங்கை அரசும் செய்துவரும்போது"இந்தப் பிரபாகரன்"படத்தின் வருகைக்குள் நிலவும் அரசியல் சாணாக்கியம் என்ன?


நமது மக்கள் கரும்புலியாவதும்,குண்டுகளைப் பொருத்தி வெடித்துச் சாவதும் யாரினால் ஏற்பட்டது?

இத்தகைய நடவடிக்கைகளின் பின்னே உந்தித் தள்ளப்படும் ஒடுக்குமுறைச் சிங்களப் பாசிச அரசியல் தானும்-உலகமும்சேர்ந்து தீர்மானிக்கும் பொருளாதார நகர்வுகளாக முன் தள்ளும் குறுகிய இனவாத அரசியலின் உற்பத்தியே இத்தகைய "கரும் புலி மற்றும் குண்டுதாங்கும் போராளிகள்"வருகைக்கான அரசியல்.இத்தகைய அரசியலை மேன் மேலும் இருப்புக்கிட்டு,தமிழ்பேசும் மக்களை மிகக் கவனமான ஓரங்கட்டுவதும் அவர்களை இலங்கைக் குடியரசிலிருந்து மெல்ல வெளியேற்றுவதும் இலங்கை அரசியல் வரலாற்றின் தொடர்கதைதான். கூடவே, வந்தேறு குடிகளாக்குவதும் சிங்கள அரசியலின் மிகத் தெளிவான நோக்கு.இத்தகைய அரசியல் வியூகத்தை மிக இலகுவாக அங்கீகரித்த உலக-இந்தியப் பொருளாதார ஆர்வங்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை இலங்கைக்குள் நிறுவ முனையுந்தருணத்தில் பிரபாகரன் போன்ற தலைவர்களின் வருகையும் இருப்பும் நிகழ்கிறது.இந்த அவலமிக்க-சூழ்ச்சிமிக்க அரசியல்-பொருளாதார நலன்களின் பின்னே இலங்கையின் புரட்சிகரமான வரலாற்றைத் தொட்ட வியூமானது எப்பவும் இலங்கையை மிகவும் பிரச்சனைக்குரிய தேசமாகவே தென்கிழக்காசியாவில் பார்க்கப்பட்டு வருகிறது.

புலிகளின் அரசியல் என்பதும்,அவர்கள் சார்ந்தியங்கம் சமுதாயத்தின் அரசியல் என்பதும் பெரும்பாலும் வெவ்வேறானதெனினும் அத்தகைய அரசியல் விருத்தியானது முழுக்கமுழுக்கத் திட்டமிட்ட சிங்கள இனவாதத்தினதும் அதன் ஆளும் வர்க்கத்தினதும் திசைவழியிலானவொரு அரசியலைப் பிரதானமாகக்கொண்டே வெளித் தள்ளப்பட்டது.இலங்கையின் அரசியல்-பொருளாதார ஆர்வங்களை வெறுமனவே இலங்கை ஆளும் வர்க்கத்தோடு பொருத்திவிட்டுப் பார்க்க முடியாது.இலங்கைத் தரகு முதலாளித்துமானது எப்போதும் இந்தியத் தரகு முதலாளிகளோடு இணைந்த பொருளாதார முன் நிபந்தனைக்களைக்கொண்டியங்குவதற்கான காரணமானது வெறும் மூலவளங்களோடு சம்பத்தப்பட்டதல்ல.மாறாக, வளர்ந்துவரும் இந்திய நுட்பவியல்சார்ந்த ஆற்றல் மற்றும் நிதியீடு சம்பந்தமான ஆளுமை மேலும் புவிசார் அரசியலோடு இவை இணைந்தே எமக்குள் பிரதிபலிக்கிறது.இலங்கைச் சிங்களச் சமுதாயமானது இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தைவிடத் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தோடு மிகவும் நெருங்கிய உறவைக்கொண்டியங்குகிறது.இதை மிகத் தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழ் நாட்டுப் பெரு முதலாளிகளும் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட தமிழ்நாட்டு ஆட்சியை அலங்கரிப்பவர்களுமே!இங்கே,நிலவும் முரண்பாடுகள் அல்லது தமிழ்சார்ந்த கோசங்கள் யாவும் ஒரு கட்டத்துக்குமேல் நகராது-நசுக்கப்படும்.இதை மிக உணர்ந்தவர்கள் ஜே.வி.பி. என்ற கட்சியே.இவர்கள்தான் அப்பப்ப இந்தியப் பொருட்களை நிராகரிப்போமென அறைகூவலிடுகிறார்கள்.இது ஒருவகையில் தமிழ்நாட்டு முதலாளிகளின் அரசியலைச்(தமிழ்நாட்டரசியல்) சம நிலைப்படுத்தும் தந்திரமாகும்.சிங்களத் தேசம் இந்தியப் பொருள்களை நிராகரிக்கும் பட்சத்தில் பாதிகப்படும் பெருவணிக மாநிலம் நிச்சியம் தமிழ்நாடாகத்தான் இருக்கும்.

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வியூகங்கள் பெரும் பகுதி இந்தியத் தொழிலாளர்களின் கடினமான எதிர் நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்தே தீர்மானமாகிறது.இந்தியத் தருகு முதலாளியத்துக்கு அச்சமூட்டும் பெரும் திரளான உழைக்கும் வர்க்கத்தின் வர்க்கவுணர்வுமிக்க திரட்சியின் புரட்சிகரமான பாத்திரத்தை விளங்கிக்கொண்ட இந்தியப் "பார்ப்பனிய"ஒடுக்குமுறை ஜந்திரம் இன்றைய உலகப் பல்தேசியக் கம்பனிகளின் பொருளாதாரக் கூட்டு உற்பத்தி-இலாபவேட்கை-மூலதன மற்றும் குறை ஊதியம் சார்ந்த அரசியலுக்கு இடைஞ்சலாகவே இலங்கையின் ஈழத்துக்கான போராட்டத்தை இனங்காண்கிறது.இங்கே,பிரபாகரன் என்பவர் இத்தகைய அச்சத்தை இல்லாதாக்கும் அரசியலுக்கு அவசியமாகவிருந்த அன்றைய காலங்கள் இன்றையப் புறநிலை மாற்றங்களோடு இல்லாமற் போகிறது.எனவே,பிரபாகரன்சார்ந்து தமிழ்மக்களின் பிரச்சனைகளை-அவர்களது உயிர்வாழ்வுப் போராட்டத்தைக் குறுக்க முனையும் கருத்தியல்சார் நடவடிக்கைகளில் இன்றைக்கு அன்னியவுலகம் மிக முனைப்பாக இருக்கிறது.இத்தகைய அரசியலினது வெளிப்பாடே சிறார்களைப் போராளியாக்கும் முறைமைகளுக்கு எதிரானதொரு அரசியலாகவும் இத்தகைய ஏகாதிபத்தியங்களால் முன்னெடுக்கப்படுகிறது.தத்தமது அரசியல் மற்றும் இராணுவ-மூலவளத் தேவைகளுக்கேற்றவாறு நமது அரசியல் வாழ்வைத் தீர்மானிக்க முனையும் இன்றைய உலகப் போக்குகளுக்கெதிராக நாம் கருத்திடுவதற்குப் பதிலாகப்"பிரபாகரன்"படத்துக்கான கருத்துச் சுதந்திரம் என்றபடி நகர்வதுகூட ஒரு வகையில் நமது பிரச்சனைகளைப் பிரபாகரனுக்கூடாகக் குறுக்க முனையும் திட்டமிட்ட புரிதல்தான்.

இது குறித்து ரதன் மிகவும் பொறுப்புணர்வோடு பதில் தந்தே தீரணும்.அது சாத்தியமற்றதென்றால் இவ் விமர்சனம்-கருத்துச் சுதந்திரக் கூவல்கள் எல்லாம் இலங்கைப் பாசிச அரசுக்குச் சார்பானதாக்கும் முயற்சியின் தொடர்ச்சியே என்பது எம் வாதம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.03.2008

1 Kommentar:

Anonym hat gesagt…

உங்கள் கருத்துக்கு ஒரு Good
எதிர்பார்ப்புக்கு ஒரு குட்டு :)