"உலகத்தின்-அமெரிக்காவின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"
என்ற கோசம், இலங்கையில் ஒரு இனத்தைப் பழிவாங்கவும்,யுத்தத்தின் மூலம் நாதிகளற்று
அடிமைகளாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.இஃது, அவ்வினத்தின்
அடிமைத்தனத்துக்குப் பின் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களைச் சிங்களப்
பெருந்தேசிய வாதத்துக்குள் திணித்து இன-அடையாள அழிப்பில் முடிவடைவதில்
முடியும்."
இலங்கை அரசு சொல்லும் யுத்தம்சார் சித்தாந்தம்-அரசியல்,"அமைதிக்கானது,சமாதானத்துக்கானது,ஜனநாயகத்துக்கானது"என்பது உண்மையானதாக இருக்க முடியுமா?
இக்கேள்விக்குப் பதிலளிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை!
புலிகளது தவறான போராட்டத்தின் முடிவில் தத்தளிக்கும் தமிழ்பேசும் மக்களை அடியோடு மொட்டையடிக்கும் அரசியலைப் பலர் முன்னெடுக்கும்போது-அந்தப் பலருள்,இந்தியாவும் ஏகாதிபத்திய உலகமும் மட்டுமல்ல அவைகளைத் தாங்கிப்பிடிக்கும் நாமுமே காரணமாக இருக்கின்றோம்.அந்நியர்களுக்கு அடியாட்படையாக மாறிய புலிகள், எங்ஙனம் தமிழ்பேசும் மக்களை அழிவு யுத்தத்துக்குள் திணித்தாகளோ-அதையே நியாயமாக்க முனையும் இன்றைய அரசியல்,சித்தாந்தங்களை வெற்றிகொள்வதும் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்கு முன்நிபந்தனையான அவசியமே.இந்நோக்கில் சிங்கள அரசினது இன்றைய கோசத்தினூடாக(பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் மற்றும்,"நாம் இலங்கையர்" என்ற தேசிய இனத்தைக் கடந்து வேறொரு தேசிய இனம் "இலங்கையில்" இல்லையெனும் மறைமுகச் சிந்தாந்தம்) சிலவற்றைப் பார்ப்போம்.
சமீபத்தில் இலங்கையானது மேற்குலகத்தினவர்கள்தம் நலனுக்கான மூலவளக்கொள்ளை யுத்தத்துக்கான முகமூடி அரசியற் கருவூகங்களான "அமைதி,சமாதானம், ஜனநாயகம்" எனும் உளவியல் கருத்தாக்கங்களது புனைவுகளோடு தமிழர்கள்மீது யுத்தஞ் செய்வதைப் புலிகள்மீதான யுத்தமாகக் காட்டி,அதை பயங்கரவாதத்துக்கு எதிரானதாகச் சொல்கிறது.இலங்கை அதிபர் மகிந்தாவினது உரைகளில் இத்தகைய கருத்துக்கள் மேலும் போரைத் திறம்பட முன்னெடுப்பதற்காக எப்போதும் காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கையில் பொதுவாகவே ஜனநாயகத்துக்கான அரசில் சூழலோ அன்றி அத்தகைய அரசியலை முன் தள்ளும் பொருளாதார உற்பத்திச் சூழலோ இல்லை.எனினும்,இந்தக் குறைவிருத்திச் சமுதாயமான இலங்கைச் சமுதாயத்தில்,நிலவுகின்ற இராணுவ மையவாத அரசியல் போக்குகள் மற்றும், நிலவும் புத்தமதவாதத் தத்துவப் பேரவா,சிங்களப் பொற்காலத்தை மீளக்கட்டுவதில் இனவழிப்பை பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடாகக் காட்டப்படுகிறது.உலகத்தினது அதே பாணியிலான கயமைப் போரை, இலங்கையும் முன்னெடுப்பதற்கு மிக அவசியமான உலகச் சூழல் என்றுமே நிலவிவருகிறது.இத்தகைய சூழலை பெரும்பாலும் உலகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொதுமைப்படுத்தும் மேற்குலகமும் அமெரிக்காவும், நேட்டோ எனும் ஏகாதிபத்திய இராணுவவாதக்கூட்டுத்தலைமையோடு அகிலமெங்கும் மறைமுகமான உலகயுத்தத்தை நடாத்திவருகிறது.அமெரிக்காவின் புதிய அதிபரும் மேற்குலக நாடுகளது தலைவர்களும் அவ்கானிஸ்த்தானுக்கு மேலும் படைகளை அனுப்புவது குறித்து உடன்படுகிறபோது அங்கே, வலிந்துருவாக்கப்படும் யுத்தச் சூழல் மேலும் உலகத்தின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தமது காலடியில் போட்டு நசுக்குவதற்கானவொரு அரசியல் ஆதிக்கத்தை அவர்களுக்கு வழங்குகிறது(இந்த உலகத்திடம்தாம் தமிழர்கள் கையேந்திப் பிச்சை எடுக்கப் புலிகளது போராட்டம் வழிவகுத்துள்ளது இன்று).
இதே பாணியிலான சிங்கள அரசியல்-இராணுவ வியூகத்துக்கு இலங்கையில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பு ஒரு அவ்கானிஸ்த்தானாகவோ அன்றி ஈராக்காகவோ இருக்கிறது.இலங்கை அரசுக்கு தார்மீகரீதியாக எவருமே எதிர்ப்புக்கூற முடியாதளவுக்கு இந்த யுத்த பூமி-அதாவது,அவ்கானிஸ்த்தான் அதனது உள் நாட்டுக்குள்ளேயும்,அதன் அரச ஆதிக்கத்துக்குள்ளும் இருப்பதால் இலங்கையது எந்த வகை இராணுவ அழிப்பு யுத்தத்தையும் உலகம் கைகட்டியே பார்க்க முடியும்.இது,இலங்கையின் மிக யதார்த்தமானவொரு அரசியல் வெற்றியை இலங்கைக்கு வழங்கிய சந்தர்ப்பம் 11-செம்டம்பருக்குரிய அரசியல் தெரிவோடு உருவாகிறது.இங்கே,இலங்கை தன்னை இனவாத அரசு என்ற தளத்திலிருந்து விடுவித்தபடி,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தைத் திசைவழியாகத் தெரிவதற்கும் இந்த உலகங்களது பொருளாதார நோகத்தின் யுத்த வியூகமே அச்சொட்டான உதாரணமாக இருக்கிறது.சிறுபான்மை இனங்களது தார்மீக உரிமைகளுக்கான எந்தவகை அரசியல் முன்னெடுப்பையும் ஆளும் சிங்களப் பெருந்தேசியவாத அரசு மிகச் சுலபமாகப் பயங்கரவாதமாகச் சித்தரிக்க முடிகிறது.இது,வருங்காலத்தில் இலங்கையின் இனங்களுக்கிடையிலான பரஸ்பரவுறுவுகளைப் குழிதோண்டிப் புதைத்துவிட்டு,பெரும்பான்மைச் சிங்களவினத்தோடு கலந்து வாழும் இலங்கைத் தேசியத்தைப் பேசமுனையும்.இது,மேற்குலங்கங்களில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த-இன்றும் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு நேர்ந்த அதே அரசியல் பலவீனத்தை-தற்கொலையை இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு மேலும் அழைத்துவரும்.
இன்று,மேற்கு நாடுகளின் பொருளாதார இலக்குக்கும்,நீண்டகால அரசியல் ஸ்த்திரத்துக்கும் இத்தகைய தேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த பல் தேசிய இன-மத மக்களுக்கும் ஒரே தெரிவான கலத்தல்-கலந்து வாழுதல் எனும் இந்த வாதம் அவர்களது எதிர்கால இருப்பை அழிப்பதற்கும் பாரம்பரிய பண்பாட்டு வேர்களை நசுக்குவதற்காகவுமான அரசியல் கோரிக்கையே(இதை, ஜேர்மனிக்கு வந்த துருக்கிய இனம் சரியான தெரிவோடு உடைப்பதில் இலக்காக இருக்கிறது இங்கு).இதை,இலங்கை அரசு இன்றைய பொருளாதாரப் போக்குகளுக்கமைய புதிய உத்வேகத்தோடு"நாம் இலங்கையர்"எனும் கோசத்தின் வாயிலாக "கலந்து வாழுதல்" எனும் கருத்தாக்கம் சிங்களப் பொற்காலத்தின் மறுவார்ப்பாக மேலெழவுள்ளது.இலங்கையின் இன்றைய அரசியல் கோசத்தை மிகக் கவனமாக விளங்க முற்படாத சிறுபான்மை இனங்களது அரசியலானது மேலும் இராணுவவாதக் கண்ணோட்டத்தோடு நகர்வதில் எந்த நியாயவாதமும் இல்லை.இலங்கையினது புரட்சியை வற்புறுத்தி சிறுபான்மையினங்களின் சுயநிர்ணயவுரிமைகளை அங்கீகரிக்காத போக்குகள் அல்லது அடக்கிவாசித்தல் சாரம்சத்தில் இலங்கையினது இன்றைய வியூகத்துக்கு பலமானதாகவே இருக்கும்.இன்று,இலங்கையில் அமைதி,சமாதானம்,ஜனநாயகம் அவசியமெனினும் இவைகளை முகமூடியாக்கித் தமது அரசியல் பிழைப்புக்காக கோசமிடும் தமிழ் அரசியல் வாதிகள்-குறிப்பாக,டக்ளஸ்,புலித்தளபதி கருணா,பிள்ளையான்,மற்றும் ஆனந்தசங்கரி போன்ற மக்கள் விரோத அரசியலாளர்கள் இலங்கை அரசினது அடுத்த கட்ட-மேற்கூறப்பட்ட-நகர்வுக்கு அண்மையாகவே இருக்கின்றார்கள்.
இலங்கையில் ஜனநாயகம்,அமைதி,சமாதானம் அவசியம்.ஆனால்,இனங்களுக்கிடையிலான அவர்களது சுய கௌரவத்துக்கான உரிமைகளை இவற்றுக்காக கழுவேற்றி எவரும்அமைதி,சமாதானம்,ஜனநாயகம் மீள் உருவாக்கஞ் செய்துவிட முடியாது.போலித்தனமான அரசியல் கோசங்கள் இலங்கையில் இனங்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைத்துப் பிழைப்புவாத அரசியலாக மாறுவது அந்தந்தவினங்களது இருப்பையே அழிப்பதில் முடியும்.இதை வெல்வதற்காகவேனும் தமிழ்பேசும் மக்களது உண்மையான அரசியல் தெரிவு தமது சுயநிர்ணயத்துக்கான அரசியலைவிடாப்பிடியாக நடாத்துவதே சரியானது.இதுவே,இலங்கையில் மற்றைய இனங்களது சுயநிர்ணயவுரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கானவொரு முன் நிபந்தனையாக இருக்கிறது.இதைப் புலிகளதுவழி போராட்டத்தால் பறிகொடுத்த நிலையில் மீளவும், இந்தச் சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை,அரசியல் போராட்டமாக விரிவுறவேண்டியுள்ளது.இதை, மறுத்தொதுக்கும் தமிழ் அரசியல்-ஜனநாயகக் குழுக்கள் மெல்ல இனங்களுக்கிடையிலான பரஸ்பரவுரிமைகளை மறுத்து, "வல்லவன் வைத்ததே சட்டமெனும்" போக்கில் இலங்கையில் சிங்களக் குடிகளே பூர்வீகக் குடிகளெனும் மகாவம்சத்துக்கு ஒத்திசைவான அரசியலை முன்னெடுப்பதாக அமையும்(இக் கருத்தைப் புலிவழிப் புரியவேண்டாம்.புலிகள் பேசுவது,செய்வது அனைத்தும் வியாபாரத்தனமானது-அது,டீலில் தமது வர்க்க நலனுக்கிசைவாகத் குறுந்தேசியவாதத்தை முன்னெடுத்து வருவது).
அகில உலகத்துக்கான சோசலிசமோ அல்லது ஓரு குறிப்பிட்ட நில எல்லைக்குட்பட்ட சோசலிசப் போராட்டமோ இனங்களது உரிமைகளை இல்லாதாக்கும் பெருந்தேசிய வாதத்தைத் தெரிவுகளாக்க முடியாது.இலங்கையர் எனும் கோசம் எப்போது இலங்கையில் வாழும் இனங்களது சுயநிர்ணயத்தின் இருப்போடு மட்டுமே சாத்தியமாகும்.இதுவன்றி பேசப்படும் இலங்கையர்கள் எனும் அரசியல் கோசம் சாரம்சத்தில் பெருந்தேசியவாதச் சிங்கள மேலாதிக்கத்தின் மறைக்கப்பட்ட வடிவமே.
11 செம்படம்பருக்குப் பின்பான காலம் அமெரிக்க-ஐரோப்பிய நவலிபரல்களுக்கானவொரு காலமாகும்.அவர்களது பொருளாதார முன்னெடுப்புகளுக்கு இந்தப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அவசியமான பற்பல சாதகங்களைத் தகவமைத்துக்கொடுக்கிறது.இதன் காரணமாக அவ்கானிஸ்தானையோ அன்றி ஈராக்கையோ அல்லது எல்லை கடந்து பாகிஸ்தானின் இறைமையையோ அவர்களால் மீறமுடிகிறது.இதற்கான அரசியல் மற்றும் இராணுவ உரிமைகளை இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான எனும் மாய அரசியல் ஏற்படுத்திக்கொடுக்கிறது.இதனால் தங்குதடையின்றி மூலவளங்களைக் கொள்ளையடிப்பதற்கும்,பங்கு போடுவதற்கும் அவசியமானவொரு கூட்டணி தவிர்க்கமுடியாது ஏற்படகிறது.இந்தக் கூட்டணி இப்போது ஜீ-20 எனும் அமைப்பு வடிவத்தை முன்னெடுக்கும்போது இலங்கையின் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற கோசம் இலங்கையில் சிறுபான்மை இனங்களை வேட்டையாடுவதற்கும்,அவர்களை மேலும் அரசியல் அநாதைகளாக்கித் தம்மோடு கலப்படையவைக்கும் "நாம் அனைவரும் இலங்கையர்"எனும் சிங்கள அபிலாசையாக விரியும்.
இலங்கையின் அரசியல் தெரிவுகளுக்கு, மிக யதார்த்தமான உலகப் பொருளாதாரச் சூழல் நெருக்கமாக அண்மித்து வருகிறது.இதைப் பெரும்பாலும் மிகச் சரியாகக் கையாளும் இலங்கை அரசு,சிங்களப் பௌத்தமதப் பொற்காலத்தை மீட்டெடுப்பதில் பெரும் அவாக்கொண்டுள்ளது.இஃது, மிகச் சாதாரணமான அரசியல் சொல்லாடல்களின்வழி-அதாவது,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்,இலங்கையர்,மற்றும் கலப்புறதல் அல்லது ஒன்றித்தல் எனும் கோசங்களின் வழி அடையப்படக்கூடியதே.கடந்தகால மேற்குலக யுத்தங்களின்வழி இத்தகைய ஒற்றையினவுருவாக்கம் வலுவாக வெற்றியளித்தது.இது,பல் தேசியவினங்களை முற்றாக அழித்து, ஒரு தேசத்தினது ஆளும் வர்க்கத்தினது மொழியைப் பண்பாட்டை அனைத்து மக்களுக்குமான பண்பாடாகவும்,மொழியாகவும் ஆக்கிக் கொண்டது.இலங்கை போன்றவொரு சிறிய தேசத்தில் இது மிக இலகுவாகச் செய்து முடிக்கப்படக்கூடியது.புலிகளது அப்பட்டமான விதேசியப் போராட்டத்தால் இன்று இந்த ஆபத்து நம்மை நெருங்கி வருகிறது.இதைப் பூண்டோடு அறுப்பதற்கு தடைகள் என்ன என்பது அவசியமான கேள்வியாக மேலெழ வேண்டும்.
இத்தடைகள் பற்பல வடிவத்திலுள்ளன:
1: புலிகளது விதேசியவாதம்,
2:புலிகள் கற்பித்த துரோக அரசியல்,
3:புலிகளைச் சுற்றிய இயக்கவாத அரசியல் மாயை,
4:புலி எதிர்ப்பு ஜனநாயக அரசியல்(உதாரணம்:டக்ளஸ்,புலித்தளபதி கருணா-பிள்ளையான் வகை அரசியல் தெரிவு)
5:புரட்சிகர முற்போக்குச் சக்திகள் எனும் வடிவிலள்ள புலிப் பினாமிகள்(உதாரணம்:சேரன் அவரது மைத்துனன் விக்கி,சிவகுமார், பாலகுமார்,மு.திருநாவுக்கரசு,சிவத்தம்பி மற்றும் புலம் பெயர் சூழலில் மாற்றுக் குழுக்களாகக் கருத்தாடும் ரீ.பீ.சீ.வானொலி,இன்னும்பல முற்போக்கு முகமூடிகள்.)
6: அடையாளத்தை மறுத்து,பின்-முன் நவீனம் பேசும் முகமூடிகளாக இருந்து இனங்களுக்கிடையிலான சுயநிர்ணயக் கோரிக்கைகளை வெறும் செல்லாக் காசாகக் கருத்துக்கட்டும் எதிர்ப்புரட்கரச் சக்திகள்.
இத்தகைய தடைகளை எங்ஙனம் வெற்றிகொண்டு,இலங்கையில் இனங்களுக்கிடையிலான பரஸ்ப்பர நட்புறவோடுகூடிய உரிமைகளுக்கான போரை முன்னெடுப்பது?
சுயநிர்ணயத்தை வலியுறுத்தி, அதை முன் நிபந்தனையாக வைத்துப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத் திட்டம் அவசியமாகிறது.இங்கே,இலங்கை அரசுதாம் முதலாவதும்,பிரதான எதிரியென்பதும்,அதன் இன்றைய அரசியல் சித்தாந்தத்துக்கு உலகு தழுவிய பலமும் ஒத்துழைப்பும் உண்டென்பதும் அவசியமாகப் புரியப்படவேண்டும்.புலிகளது தவறான வழிகாட்ல்களால் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தோல்வியில் முடிவடைகிறது.இது,இன்னொரு வடிவத்தில் மேலெழுவது அவசியம்.அதைச் சாதிப்பதற்கான போராட்டத்திசையமைவுக்குச் சுத்த இராணுவவாதமோ அன்றிப் பழையபாணி இயக்கவாத அறிவோ எப்போதும் உடன்பாடானது அல்ல.
நாம் பற்பல உலகத்துக்குள் வாழ்கிறோம்.எனினும்,உலகம் இப்போது ஒரே திசைவழியில் தன்னை அடையாளம் காட்டுகிறது.இது,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும்போது அதை இலங்கையிலிருந்துமட்டுமல்ல மேற்குலக நாடுகளிலிருந்தும் அம்பலப்படுத்திப் போராடவேண்டும்.இங்ஙனம் போராட முடியாது அரசுசாரா அமைப்புகளுக்குக் காவடி தூக்கி இலங்கையில் ஜனநாயகத்தை அமைதியை,சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது, சாரம்சத்தில் ஒற்றைத்துருவ ஒழுங்கமைப்பில் உலகத்தை வேட்டையாடும் ஏகாதிபத்தியத்தின் அரச ஆதிக்கமுடைய அடியாட்கள் தாம்சார்ந்த இனத்துக்குள் மற்றைய இனங்களை முடக்கும் அரசியலுக்கு உடந்தையாக இருப்பதே.அதை மிக நேர்த்தியாகப் புலிகளின் தளபதி கருணா-பிள்ளையான்,டக்ளஸ் போன்றோர் செய்து முடிக்கின்றார்கள்.
இன்று,இந்த ஜீ-20 கூட்டினது பொருளாதார இலக்குகள் யாவும் உலகத்தில் மேல்நிலை வகிக்கும் அரசுகளது சொந்த முரண்பாடுகளுக்கு ஒரு வடிகாலான அரசியலை முன்னிறுத்தும்.இது,தேசங்களில் வாழும் அரசியல் உரிமைகளற்ற இனங்களை அரச ஆதிக்கச் சமுதாயங்களோடு கலப்படைய வைப்பதில் முனைப்படையும்.அதன் அவசியமான நோக்குப் பொருளாதாரச் சந்தைக்கு ஒரு மொழி,ஒரே மதம்,ஒரே இனம் எனும் ஒன்றைத் துருவ குவிப்புறுதியூக்கத்துக்கிசைவான உலகத்தைவேண்டிய அரசியல்-இராணுவ நகர்வாகவே அமைகிறது.இது,இன்றுள்ள தேசங்களுக்குள் பல்வகைக் பண்பாட்டு விழுமியங்களை அந்தந்தத் தேசப் பண்பாட்டு மேலாத்திக்கத்துக்கு முதலில் பலியாக்கும்.
நவலிபரல்களது அரசியலுக்கு இவை அவசியமானது.அவர்களால் முன்தள்ளப்பட்ட பொருளாதாரத்தின் அரிச்சுவடிக்கு கெய்னிஸ் சித்தாந்தக் குருவாக இருந்து இவற்றைய வற்புறுத்தும்போது, நாம் மார்க்சைச் சொல்லி மேலும் சுயநிர்ணயத்தை-தேசியத்தை மறுப்பதாக அமையும்போது,அங்கே,சுயநிர்ணயவுரிமைக்கான போராட்டம் புலிகள்போன்ற பாசிச வாதிகளிடம் தஞ்சமடைகிறது.அவர்கள் அதைத் தமது வர்க்க நலனுக்கான முறையில் முன்னெடுக்கும்போது அதுவே ஒரு கட்டத்தில் தோல்வியாகி இலட்சம் மக்களை அழித்துவிடுகிறது.இங்கே,இந்த வரலாறு நன்றாகக் காணக்கூடியதாக இருக்கிறது.
நாம் முதலில் அணித்திரட்சிக்கேற்ற முறையில் தடைகளை அகற்றிக்கொண்டு ஐக்கியப்படவேண்டும்.
இந்த ஐக்கியம் புரட்சிகரக்கட்சிக்கான கருவூலத்தோடு உண்மையாக மக்களைச் சார்ந்து அரசியல் செய்ய நிபந்தனையாக வர்க்க உணர்வுள்ள தோழர்களுக்குள் கேட்கப்படுகிறது.புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் சதிகாரர்கள் பழைய இயக்கவாத அரசியல் தெரிவிலிருந்து நமக்குள் விதைக்கும் அரசியலை அம்பலமாக்குவது அவசியம்.இவைகளின்றிச் சிங்கள அரசுக்குத் தோதான இந்த உலக அரசியல் வியூகத்தைத் தோற்கடித்துச் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பது கல்லில் நார் உரிபதாகவே முடியும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen