Sonntag, Mai 03, 2009

மே தினவூர்வலத்தில்...

"ஈழப் பச்சை மண்ணே,
எம்மைக் கொன்றவர்கள் எல்லோரும்
கூடிக் களிக்கட்டும்!
எமது ஊர்கள்தோறும் அவர்கள் கொடிகள் பறக்கட்டும்,
கும்பிடும் ஆலயங்கள் அழிந்தே போகட்டும்
நீ,தவழ்ந்த முற்றம் உன் குருதியில் சகதியாகட்டும்
தவறுகளை நீ புரிந்து மேலெழுவாய் ஓர் நாள்!
அப்போது,
என் தடத்தில் இன்னொரு உலகம் இருப்பதையும் நீ அறிவாய்,
இழந்ததை நீ மீட்க
உனக்கென்றொரு உறவும் இருக்கக் காண்பாய்.
அது,உலகெல்லாம் விரிந்து மேவுவதையும் நீ உணர்வாய்!"இலங்கைப் பாசிச அரசினது தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு யுத்தத்தை அம்பலப்படுத்திய ஒரு ஊர்வலமாகவே இவ்வருடத்துக்கான ஊர்வலம் மையங்கொண்டது.சிங்கள இனவாத அரசை அம்பலப்படுத்துவதோடு, பல்வேறு முற்போக்கு அமைப்புகளோடு விவாதமும்,விளக்கம் எம்மால் அளிக்கப்பட்டது.

இலங்கையில் சமாதானமாக வாழ்வதற்கும்,தமது வாழ்வை அடிமைத் தளையறுத்த அரசியலுடாகத் துய்ப்பதற்குமான அனைத்து உரிமையும் உடையவர் நாம் என முழங்குவதிலும் நாம் வெற்றியடைந்துள்ளோம்.சில அமைப்புகளோடு தொடர்பாடல் இருக்கின்றதெனினும்,இன்றையவூர்வலத்தில் பல்வேறு அமைப்புகளோடு,மக்கள் சமுதாயங்களோடு எமது அவல நிலை குறித்து உரையாடத்தக்கதாகவே நாம் கவனத்தைக்கொண்டோம்.


விவாதத்தில் பரவலாகப் புலிகளது பிற்போக்குத்தனமான நடாத்தைகளை அவர்கள் எம்மைவிட நன்றாகவே அறிந்திருப்பது அறியத்தக்கதாகவே இருக்கிறது.குறிப்பாக குர்த்தீஸ் மக்களிலிருந்து,இத்தாலிய மற்றும் கிரோக்க மக்களும் மிக நேர்த்தியாகப் புலிகளது அரசியல் பாத்திரத்தை விளக்கினார்கள்.ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சியான எம்.எல்.பீ.டி. புலிகளது பாத்திரத்தை விவாதித்துக்கொண்டு,இன்றைய எமது நிலைக்காகத் தமது கோசங்களோடு நமது மக்களுக்குச் சார்பான-யுத்தத்துக்கு எதிரான கோசங்களையும் இணைத்தார்கள்,எமது குரலூடாகவும் யுத்தத்துக்கு எதிரான குரல் வெகுஜன மட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


தமிழ்பேசும் மக்களது இதுநாள் வரையான அழிப்பு யுத்தத்துக்கெதிரான ஆர்ப்பாட்டவூர்வலங்கள் ஜேர்மனிய ஊடகளால்மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் கவனிப்புக்குள்ளாகிறது.


இதன் முழு உழைப்பும் இன்றைய இளைய தலைமுறைக்கே போய்ச் சேர்ந்தாகவேண்டும்.


மிகவும் அளப்பெரிய உறுதியோடு அவர்கள் குரல் கொடுக்கின்றார்கள்.ஆனால்,இவர்களது குரல் முற்போக்கு அமைப்புகளிடம் இன்று எடுத்துரைக்கப்பட்டதன் விளைவாகவேதாம் தொழிற்சங்கத் தலைவர்கள் முதல் அமைப்புகள்வரை எமக்காவும் தமது உரையில் குறிப்புணர்த்திச் செல்லுந் தருணம் உருவாகிறது.


எத்தனை ஊர்வலங்களையும் நடாத்திமுடிக்கலாம்.


எனினும்,அவை சரியான தெரிவோடு முற்போக்கான அமைப்புகளின் துணையோடு முன்னெடுக்கப்படும் பட்சத்தில்,அதன் தாக்கம் பரவலாகிறது.ஜேர்மனிய நகரமான டுசுல்டோர்ப்பில்(Düsseldorf)மே,1. நடைபெற்ற மேதினவூர்வலத்தில் பல்வேறு அமைப்புகள்,தொழிற்சங்கங்கள்-கட்சிகளெனக்கூடிய ஊர்வலச் சூழலில் தமிழ்பேசும் மக்களும் புலிகளது பதாதைகளின்பின்னே அணி திரண்டனர்.


புலிக்கொடியும்,தேசியத்தலைவர் பிரபாகரனென எழுதப்பட்ட அவரது நிழற்படங்களும் கைகளில் ஏந்திக்கொண்ட நமது மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தது முற்போக்கு அமைப்புகளுடன் விவாதங்கள் செய்து,நம் மக்கள்மீதான இனவழிப்புக்கெதிரான குரல்களை முற்போக்கு அமைப்புகளோடு இணைப்பதற்கு.பெரியவர்கள் எல்லோருமே தமக்குள் முடங்கிக்கிடந்தபடி,குழந்கைள் மூலமாக நோட்டீசுகளை அவர்களிடம் வழங்கியதைத்தவிர வேறெதையும் செய்யவில்லை.நாம்,எம்மால் முடிந்தவரை அமைப்புகளோடு விவாதித்து,அவர்களது ஒலிபெருக்கியில்(Verschiedene Beiträge gingen über das offene Mikro der MLPD bei der Demo: die Mobilisierung zur Demonstration am 16.5. nach Berlin; die Schaffung einer internationalen Arbeitereinheit bis hin zu Protesten gegen den Völkermord in Sri Lanka an den Tamilen. )எமது குரலையும் இணைப்பதற்கு வழிகள் செய்தோம்-விவாதித்தோம்,ஒலிபரப்புஞ் செய்தோம்.இளையோர் அமைப்புகள் பெயரில் புலிகள் போட்ட துண்டுப் பிரசுரங்களையும் இளைஞர்களிடமிருந்துவேண்டி, முற்போக்கு அமைப்புகளிடம் கொடுத்து எமது அவலத்தைப் பகிர்ந்து விவாதத்தை ஆரம்பித்தோம்.


மேதினத்துக்கான இந்த நிகழ்வகளின் பின்னே பாரிய மக்கட்டொகைக்குள் எமது மக்களின் அவலம் குறித்து,டி.ஜீ.பி.(D.G.B)தொழிற்சங்கத்தினது மாநில தொழிற்சங்கத் தலைவர் கிளவுஸ் றொய்ரர்(Klaus Reuter) எமது மக்களது அவல நிலையும்,அதற்காக ஜேர்மனியில் வாழும் தமிழ்பேசும் மக்களது இடைவிடாத ஆர்பாட்வூர்வலம்-உண்ணாவிரதம்,மாநில சட்டமன்றங்களுக்கு முன்னால் இரவுபகல்பார்க்காத அவர்களது ஆர்பாட்டங்கள் குறித்து நீண்டவொரு கவனத்தைக் குவித்த கருத்துக்களைச் சொன்னார்.ஜேர்மனிய அரசு ஐரோப்பியக் கூட்டமைப்போடு ஆலோசித்து இப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து-யுத்த நிறுத்தங்குறித்து அழுத்தங்கொடுக்கத் தாம் உதுவுவதாகவுஞ் சொன்னார்.அவர் செய்கிறாரோ இல்லையோ ஆனால்,அவரது குரலின் மூலம் நமது மக்கள்மீதான இலங்கை அரசினது இனவழிப்பு அரசியல் பலமாக அம்பலப்பட்டு அங்கிருந்த பற்பல அமைப்புகளும் தமது ஆதரவைத் தமிழ்பேசும் மக்களுக்காகத் தெரிவித்தனர் என்பது பாரிய வெற்றி.
எம் குழந்தைகளது மிகத் துணிந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே-முன்னே புலிகள் இருப்பினும் இளைஞர்களது மிகவும் போற்றப்படவேண்டிய மனவலிமையே இதன் சாதகமான வெகுனத் தன்மைக்குக் காரணமாகும்.அவர்கள் சரியான வழிகாட்டலின்றிப் புலிகளால் நடாத்தப்படுகிறார்கள்.அவர்களுக்கு முற்போக்கு அமைப்புகள் குறித்த சரியான தெரிவில்லை.போராட்டத்தின் வெற்றிகள் சரியான பாதைகளின்வழி வெற்றியை அடைகின்றன.இதைப் புரிவதற்கு நம்மை முன்நகர்த்திப் பின்னால் இருப்பவர்களைச் சரியாக விளங்கிக்கொண்டாக வேண்டும்.அவர்கள் தமது பழையபாணி அரசியல் நடாத்தைகளையே மீளவும் கடைப்பிடிப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.இதிலிருந்து அவர்கள் மீளவும் முடியாது.இந்த அரசியல் நடாத்தைகளைத் தீர்மானிக்கும் வர்க்க நலன் தமிழ் மேட்டுக்குடிகளின்-அவர்களது மூலதனத்தோடு சம்பந்தப்பட்டது.இதைக்கடந்தவொரு ஆர்ப்பாட்டவூர்வலங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை என்பதற்கு,அவர்கள் முற்போக்குச் சக்திகளை நெருங்க மறுத்துக்கிடந்தபோது நாம் மிகத் தெளிவாகவே இதை உணர்கிறோம்.எமது பகிரங்கமான குரலை முற்போக்குச் சக்திகளிடமிருந்து கேட்டதன் பின்னே இளைஞர்கள் மூலம் துண்டுப் பிரசுரங்களை மட்டும் முற்போக்குச் சக்திகளின் கைகளில் திணித்தார்கள் இளைஞர்கள்.


நாம் நமது அரசியல் நடாத்தையைக் கேள்விக்கு உட்படுத்தாமால் நமது விலங்கை ஒடித்துவிட முடியாது!


இன்றைய நிலையில்,
வர்க்கங்களாகப் பிளவுப்பட்டுள்ள மக்கள் சமுதாயத்தில்
வர்க்க அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறது!


தமிழ் மேட்டுக்குடியின் வர்க்க நலன்சார்ந்த புலிகள்வழித் "தமிழீழப்போராட்டம்" தமிழ்பேசும் மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றுகுவித்து,அவர்களது சமூக சீவியத்தையே சிதைத்துவிட்டது.இன்று, அகதிகளாகவும்,இலங்கைப் பாசிச இராணுவத்தின் மனோவியல் யுத்தத்துக்குள் அள்ளுண்டுபோயும், திறந்தவெழிச் சிறைச் சாலைகளுக்குள்ளேயேதாம் நமது மக்களது வாழ்வும்-சாவும் நிகழ்கிறது.

இஃது, எதன்பொருட்டு நிகழ்ந்ததென்பதைக்குறித்துச் சரியான தெரிவற்ற புலம்பெயர் இளைஞர் சமுதாயம், வெற்றிகரமாக அரசியலை முன்னெடுக்க முடியாது.


இந்தச் சூழலிலும்,"புலிகளை விட்டுவிடுங்கள்"என்ற மிகவும் அபாயகரமான சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளி, முற்போக்குச் சக்திகள் நித்திரை செய்வதாகப் புலுடாவிடும் ஒரு கூட்டத்துக்கு எத்தனை முற்போக்குப் போராளிகளை,ஸ்தாபன ஆற்றலுடைய அறிவாளிகளைப்-போராளிகளை அவர்களது அமைப்புகளைப் புலிகளும் இந்திய ரோவுஞ் சேர்ந்து வேட்டையாடினார்கள் என்பது கணக்கிற்குவராத கள்ளப் பணமாகவே மறைக்கப்படுகிறது என்பது பற்றி அக்கறையில்லை!இலங்கையில் சிங்கள அரசானது தனது வர்க்க நலனுக்கிசைவாக எத்தனை ஆயிரம் சிங்கள முற்போக்குச் சிந்தனையாளர்களை கொன்று களனியாற்றில் போட்டதென்பதும் வரலாற்றில் மறைக்கப்படுகிறது.

இதையெல்லாம் மறைத்தபடி "செய்யவேண்டிய நேரத்தில் செய்யாது நித்திரை கொண்டதனாற்றாம்"புலிகள் போராட்டத்தைக் கையகப்படுத்தியாதாகக் கள்ளர்கள் கதைவிடுவது யாரைக் காப்பதற்கு?இதையெல்லாம் புலம் பெயர் இளைஞர்கள் புரிந்துகொள்ளும்போது நிச்சியம் அதிகாரவர்க்கத்தின் ஆணவம் சிதையும்.இதை நாம் வரலாற்றுக்குமுன் எழுதி வைப்போம்.


இப்போது,இலங்கை அரசு சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து அம்பலப்பட்டு வருவதென்பது உண்மை.என்றபோதும்,அதன் இன்றைய கொடூரமான இராணுவவாத அரச தன்மையை இதுவரை எவரும் கேள்விக்குட்படுத்தவில்லை.இலங்கை அரசிடம் மன்றாடுவது என்றவரையே மேற்குலகங்களின் அரசியல் போக்கு நிலவுவதென்பது அவர்களது பொருளாதார வியூகங்களது போக்கிலிருந்தே உருவாகிறது.இதுதாம் வர்க்க நலன்.இதைமீறி அவர்களாற் செயற்பட முடியாது.எனவே,இதைத்தவிர்த்து நாம் முற்போக்குச் சக்திகளை நாடி அரசியல் உறவுகளை வலுப்படுத்தவேண்டும்.இந்த "முற்போக்குச் சக்திகள் யாரூ"என்றுகூட இந்தப் புலுடாக் கோஷ்டி கேட்டாலும் கேட்கும்.ஏனெனில்,இவர்களே எமது மக்களைக் கொல்லும் அரசியலுக்கு வலுச் சேர்த்தவர்கள்.இதன் அழிவு அரசியலை வெறும் வார்த்தைகளால் தட்டிக்கழித்துவிட்டு மீளவும்"தமீழீழஞ்"சொல்லித் திரிகிறார்களே,இவர்களை இனிமேலும் நம்பினால் அவர்களில் சிலர் பெருமூலதனவாதிகளாக மாறமுடியுமேயொழிய மக்கள் விடுதலையடைய முடியாது.இதைப் பரிவதற்கு நமக்குத் தமிழீழக் கனவு முட்டுக்கட்டையாக இருக்கிறதா?அப்படியானால் வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள், கடந்த கால் நூற்றாண்டுப் புலிகளது போராட்டத்தில் "நாம் பெற்றுது என்ன-இழந்தது என்ன?"என்பது குறித்து.


இத்தோடு இதையும் பாருங்கள்,மேற்குலக அரசுகளைக் கடந்து,முற்போக்கு அமைப்புகளிடமும்,அவர்களின் ஊடகங்களிலும் பரவலாக எமது பிரச்சனை-அவலம் மற்றும் இலங்கையினது இனவழிப்பு அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்கள் பதியப்படுகிறது.வாரத்தில் நான்கு கட்டரைகளையாவது ஜேர்மனிய இடதுசாரிய இதழான யுங்கவேர்ல்ட் எழுதுகிறது.அது,எழுதுவதோடு நிறுத்தாமல் அரசியல் மட்டத்தில்,பல்கலைக்கழகமட்டத்திலும் எமது பிரச்சனைகளைக் கவனப்படுத்துகிறது.இது,முற்போக்குச் சக்திகளது பணியிலிருந்தே தொடர்கிறது.இளைஞவர்கள் ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.அதாவது, உலகு தழுவிய சமாதானத்துக்காக ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவுசார் மட்டங்கள்-பல்கலைக்கழகங்கள்கூட முற்போக்குச் சிந்தனைவழி சிந்தித்து எழுதப்பட்ட கட்டுரைகளையேதாம் தமது ஆய்வுக்குப் பெரும்பாலும் பயன் படுத்துகின்றன.இதை இங்கே சென்று பாருங்கள்.இத்தகைய தருணத்தில்தாம் வர்க்க அரசியலைக் கேள்விக்குட்படுத்திப் புலிகளது வரலாற்றுப்பாத்திரத்தையும் அதன் வர்க்கத் தளத்தையும் புரிந்தாகவேண்டும்.


வரலாற்றில் வெற்றியடைந்த புரட்சிகள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலான போராட்டங்கள்தாம்.ஒடுக்கும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கமான உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையில் நடாத்தப்படும் யுத்தம்தாம் இவைகள்!


ஒருகட்டத்தில் மக்கள் இனங்களாகவும்-மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் பொருளாதார ஆர்வங்களுக்காகக் கூறுபடும்போது, அத்தகைய முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள மேட்டுக்குடிகள்(ஓடுக்குபவர்கள்) தமக்குள் நடந்தேறும் அதிகாரத்துக்கான பங்குச் சண்டையில், இனத்தை,மதத்தை,மொழியை முதன்மைப்படுத்திப் போராட்டத்துக்குப் போராளிகளை அப்பாவி மக்களிடமிருந்து தட்டிப் பறித்தெடுக்கின்றார்கள். இதன் தர்க்கால நடாத்தையைப் புலிகளது போராட்டத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள் மிக நன்றாகவே அறியும்-புலம் பெயர்ந்த தமிழர்களைவிட(இங்கே,இவற்றை இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகளது ஊடகத்தலைவர் தயா மாஸ்டர் வாயிலாக அறியமுடியும்.அவர் கூறுவதற்கு முன்பே தமிழ்பேசும் மக்கள் அறிவார்கள்.எனினும்,தமக்கு ஆபத்து வரும்போது ஒடுக்குமுறையாளர்களும் சில வேளை உண்மைகளைச் சொல்லித் தமது தவறுகளை இன்னொருவனிடம் சுமையாக்குவது வழமை.தயாவும் அதையே செய்கிறார்).


உழைப்பவர்களே!,
இனம்,மொழி,மதங்கடந்து ஒன்றுபடுவதில்
நீங்கள் இழப்பது என்ன?இவைகளைக் கட்டிப்பிடித்துக்
கிடக்கும்போது பெற்றவைகள் என்ன?


சிந்திக்க வேண்டும்!


இந்தியத் தேசியம் பேசும் மேட்டுக்குடிகளுக்கு
தேசத்தின் வீதியோரத்தில் பழையபேப்பர் பொறுக்கி
வயிறு வளர்ப்பவர் பற்றி அக்கறையில்லை,
நடுவீதியில் அநாதையாக வான்பார்த்துறுங்கும் மாடுகளுக்கும்
இந்த மனிதர்க்கும் வித்தியாசம் அவர்களிடம் இல்லை.
எனினும்,
நாம் இந்தியர்கள் என்பதனூடாக
இவர்களை மலம் அள்ளுவதற்காகவது பயன்படுத்த முடியுமாவென
அவர்கள் தமது கழிவுகளை உழைப்பவர்கள்மீது கொட்டுகிறார்கள்!


ஆம்,
நாம் கடக்கவேண்டிய தூரம் மிக நீண்டது.ப.வி.ஸ்ரீரங்கன்
03.05.2009

Keine Kommentare: