Montag, Dezember 14, 2009

வாருங்கள்,நாம் உண்மைகளை நோக்கிச் சிந்திப்போம்!

"மே 18 இயக்கம்":உண்மைகள் பேசப்பட வேண்டும்!
 
 
"தீப்பொறி"இயக்கப் போக்கின் இதுவரையான நகர்வில்:"உயிர்ப்பு-தமிழீழ மக்கள் கட்சி-தமிழீழம் சஞ்சிகை"என, புலியினது உறுப்பாக இருந்த ஒரு சதிகாரக்கூட்டத்தின் அரசியல்-சித்தாந்தக் குரு இப்போது,"விவாதக் களத்திற்கான"ஒரு தளத்தை உருவாக்குவதாக நம்மை மொட்டையடிக்கும் அந்நிய-அதிகாரச் சேவைக்கு முனையும் இத்தருணத்தில், நாம் பெரும்பாலும் அவர்களை,அவர்தம் பழைய நடாத்தைகள் மூலம் இனம் காணுவதற்கானவொரு முன் தெரிவில், சில குறிப்புகளை உணர்த்துகிறோம்.
 
இஃது,அன்பு வாசகர்களே ஆய்வுக்கான-உண்மைகளைத் தேடிக் கொள்வதற்கானவொரு பாதையே!
 
 
மற்றும்படி, கட்சி கட்டிப் போராடிக் கொள்வதென்று, எவருக்கும் மொட்டையடிக்கும் நிலையில் நாம் இல்லை.
 
இது,இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் போரினால் தமது உயிர்களை இழந்தும்,சமூக சீவியத்தைத் தொலைத்தும் வாழும் எஞ்சியுள்ள மக்களிடம் உண்மைகளைக் காணத் தூண்டுவதே.அவர்கள் தம்மீது மிகக் கொடுமையாகவும்,பலவந்தமாகவும் கட்டவிழ்த்துவிடபட்ட அழிவு யுத்தம் குறித்துப் புரிந்துகொள்ளவும்,இதனூடாகத் தமது சமுதாயத்தின்மீது கிரிமினல் யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து ஆதிக்கச் சக்திகளை இனம்கண்டு அவர்களிடம் நஷ்ட ஈடு பெறவும்,தமக்கு நிகழ்ந்த வரலாற்று அநீதிக்கான நியாயமான தீர்வையும் அதன்வழித் தமது வாழ்வைச் செப்பனிடவும் மிக அவசியமான பணி.
 
இதுவரை பல இலட்சம் மக்களை அழித்த இந்த அழிவு யுத்தம் மேலும் மக்களைக் கொல்லப்போடும் அனைத்து நாடகத்தையும்(இது முற்போக்குத் தமிழீழப்புரட்சி-தேசிய விடுதலைச் சக்திகள் என்றும் இப்போது வேடம் கட்டுகிறது),அவர்களது கடந்தகாலக் கள்ளக் கூட்டினது தெரிவில் நிகழ்ந்த அழிவுயுத்தத்தின்மீதான கள்ள மௌனத்தையும் நாம் கலைத்தாகவேண்டும்.
 
இவர்களது கரங்கள் மேலும் நமது மக்களது குருதியில் நனைய நாம் அனுமதிக்க முடியாது!
 
 
இஃதை, முன்தெரிவாகக்கொண்டு ,இக்குழுவைக் குறித்துச் சில உண்மைகளைப் பேசுகிறோம்.இது,மிகக் கறாரான சமூக ஆய்வின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் கட்டுடைப்பு.இதற்காக நாம் இதுவரை தேடிக்கற்ற அனைத்துச் சிந்தனைகளையும் பொதுமைப்படுத்தி, இதை இனம் காட்டுகிறோம்.
 
வாருங்கள் இளைஞர்களே,உண்மைகளைக் கூட்டாகத் தேடுவோம்!கடந்தகாலத்தை ஆய்வுக்குட்படுத்துவோம்.அங்கே,நமது மக்களது நண்பர்களையும், உள்ளிருந்து கருவறுத்த எதிரிகளையும் இனம் காண்போம்.நான் சில வற்றை உங்களுக்கு இப்போது கவனப்படுத்துகிறேன்:
 

இரகுமான் ஜான் காலத்துக்குக் காலம் நம்மை முட்டாளாக்குவதற்கு முனைகிறார்.இவரது கடந்த காலம் என்பது பல சதிகளோடு உறவாடுவது.இப்போதும்,புலிகளது அழிவின் பின் மக்கள்-பரந்துபட்ட மக்கள் தமது சொந்தக் காலில் நின்று, எதிர்ப்பு அரசியலைப் புரிய முடியாதபடி-அதை முன்னெடுக்க முடியாதபடி இந்த மனிதன் இயங்குவது மிக மோசமான இழிய குணம்.இத்தகைய மனிதனது வழிகாட்டலில் பற்பல அந்நியச் சக்திகளதும்-அதிகாரத்தினதும் நலன்கள் இருக்கிறது.இதற்கொரு புரட்சிகர வேடம்-தேசிய வேடம் அவருக்கு அவசியமானது.
 
கடந்தகாலத்தில் தீப்பொறியாகி,அக்கோசதிகள் மூலம் கோவிந்தன்(கேசவன்)கொல்லப்பட,பின்னே புலிகளுக்குச் சிந்தாந்த உந்துதல் கொடுக்க,உயிர்ப்பு,தமிழீழம் கட்சி-தமிழீழம் சஞ்சிகை என முற்போக்கு சக்திகளை வேவு பார்த்துப் புலிக்குப் போட்டுக்கொடுத்ததும்.இதன் வழி, புலிகளது பாசிச இயக்கத்தை சித்தாந்த ரீதியாகத் தூக்கி நிறுத்திப் புலிபாசிசத்தை அப்பாவி மக்கள்மீது ஏவியதும்,இதன் தெரிவில் இலங்கைப் பாசிச அரசைப் புலிகள் எதிர்ப்பதால் புலிகள் விடுதலை-தேசியச் சக்தி என்றும் கருத்துக்கட்டியது வரலாற்றுண்மை!புலிகளது இராணுவவெற்றியில் தமிழீழத்தின் தலைவாசலில் நிற்பதாகப் புலிகளை பிரமிப்பில் ஆழ்த்தியும் மக்களை முட்டாளாக்கியும் அந்நியச் சதிக்கு உடந்தையானதும் கூடவே இவர்களால் நடாத்தப்பட்ட புத்திசாலித்தனமான சதி!
 
புலிகளது தோல்விக்கும்-மக்களது அழிவுக்குமான சதி அரசியலில்,புலிகளுக்கும் அந்நியச் சக்திகளுக்கும் வாலையும் தலையையும் காட்டுகின்ற விலாங்கு மீனாக இருந்த, கபடம் நிறைந்தவர்கள்தாம் இந்தத்"தீப்பொறி"க் குழு.இதை, இன்றைக்கு மேலும் அனுமதிப்பது நமது மக்களை தொடர்ந்து மொட்டையடிக்கும்.இரகுமான் ஜான் தமிழ்பேசும் மக்களது விடுதலை குறித்துப் பேச அருகதையற்ற மக்கள் விரோதி.இதைப் பகிரங்கமாக நான் பேசுகிறேன்.
 
இரகுமான் ஜானைக்(காந்தன்) குறித்தும்,கேசவன் அழிவுக்குப் பின்பான "தீப்பொறி"குறித்தும் நான் ஆய்வு செய்து வருகிறேன்.உயிர்ப்பு-தமிழீழஞ் சஞ்சிகைகள் செய்த-பின்னிய சதி வலைகள் இதுவரை வன்னி யுத்தத்தில் செத்த மக்களது பிணங்களில் இருந்து புரியத் தக்கது.எனவே,இஃது தமிழ்ப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்து வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டும்.இதை இளைஞர்கள் செய்வீர்களென எண்ணுகிறேன்.
 
இக்குழுவுக்குச் சில தெரிவுகள் அன்று இருந்ததென்பதை அவர்களது தமிழீழஞ் சஞ்சிகையிலிருந்து நாம் கட்டுடைத்துப் புரிந்துகொள்ள முடியும்.
 
 
இவற்றை, இங்ஙனம் நாம் புரிந்துகொள்கிறோம்:
 
1):தீப்பொறிக் குழுவானது ஜான் தலைமையில் கோவிந்தனுக்குப் பின் புலிகளுக்கு உளவு பார்த்துவருவது,
 
 
2):புலிப் பாசிசத்துக்குச் சிந்தாந்த வலு-முண்டு கொடுப்பது,
 
 
3):இலங்கை அரச பாசிசத்தை எதிர்க்கும் புலிப்பாணி(வி)தேசிய விடுதலைப் போராட்டத்தில், முற்போக்குக் குணாம்சம் இருப்பதென்றும்,அதை தேசிய விடுதலைக்கான போராகக்காட்டிப் புலியினது பாசிசத்தினூடாகத் தமிழ்ச் சமுதாயத்தில் அரும்பிய அனைத்து மாற்றுக் குரல்களையும் "துரோகமாக"ப் புலிகள் எடுத்தாளுவதற்குப் பாடுபட்டது-உந்துசக்தியாக இருந்தது.
 
 
4):புலிகளது இராணுவவாதத்தில்,இராணுவப் பேரங்கள்கள்மூலம் அவர்கள் இலங்கை இராணுவ முகாங்களைத் தாக்கியபோது, அதைத் தேசத்தின் வெற்றியாக வர்ணித்துப் புலிகளது வரலாற்றுப்பாத்திரத்தை-அடியாளாக அவர்கள் அந்நியச் சேவைகளைச் செய்ததை, மறைத்து அவர்களைச் தேசிய விடுதலைச் சக்தியாகக் கற்பித்துப் புரட்சிகரச் சக்திகளை உடைத்தது அல்லது உருக்குலைத்தது,
 
 
5):புலிகளுக்கு வேவு பாப்பதன் மூலம்,தமது உயிர் இருப்பைக் காத்ததும்,பொருளாதார வசதியை ஏற்படுத்தியதும் இவர்களது தந்திரமாக இருந்தபோது,இவர்கள் மூலம் தமது பாசிசமுகத்தை தேசியச் சக்தியாகக்காட்டவும்,அந்நிய அடியாட் சேவையை மறைக்கவும் கூடவே தமக்கு எதிரான அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இவர்கள் மூலமாக அழிப்பதை நோக்காக வைத்துப் புலிகள் இவர்களைப் பயன்படுத்தியது(இறுதியில் வென்றது ஜான் குழுவின் அந்நிய உளவு நிறுவனங்களின் நலன்- சேவைகளே).
 
 
6): தமிழ்ச் சூழலில்-குறிப்பாகப் புலம்பெயர் சூழலில் உருவாகும் அனைத்து முற்போக்கு அரசியல் முயற்சிகளையும் முளையில் கிள்ளியெறியும் பணியில் இக்குழு எப்போதும் இயங்கி வருவது.அன்று, உயிர்ப்பு பின்னாளில் தமிழீழ மக்கள் கட்சி-தமிழீழம் சஞ்சிகையென ஆரம்பித்து, அக்காலக்கட்ட மிகப்பெரும் மாற்றுக் குரல்களை திசை திருப்பியது.அவ்வண்ணமே, இப்போதும் ஆரம்பித்து, வியூகத்தின்வழி ஆரோக்கியமான-உண்மைகளைத் தேடும் ஆயு;வு முயற்சியை முறியடித்துப் புரட்சிகரச் சூழலை இல்லாதாக்குவது அல்லது தமது எஜமானர்களுக்கேற்ற திசையில் மீளப் படுகுழியைத் தோண்டித் தமிழ்ச் சமுதாயத்தின் விடுதலையை மட்டுமல்ல இலங்கைப் புரட்சியையும் காயடிப்பது,
 
 
7): புலிகளுக்கும்,இலங்கை அரசுக்குமான இடை நிலைப் பேச்சு வார்த்தைகள் மற்றும் அனுசாரணையாளர்கள் எனும் பாத்திரத்தில் நோர்வே ஊடாக ஏகாதிபத்தியங்கள் தமிழ் பேசும் மக்களை மொட்டையடித்து,அவர்களது விடுதலையைப் புலிகள் ஊடாக நாசமாக்கியதற்கு இவர்கள் உடந்தையாக இருந்தது.குறிப்பாக நோர்வே-எரிக் சொல்கைம் போன்ற சதி நாடாகத்தை, சர்வதேச ரீதியாக நமது போராட்டம் அங்கீகாரம் பெறுவதாகத் திட்டமிட்டுப் பொய்யுரைத்து ஏகாதிபத்திய நலன்களை-சதியை மூடி மறைத்தது(தமிழீழம் சஞ்சிகையை மீளப் புரட்டவும்).
 
 
8):புலிகளை விமர்சிப்பதுபோல் விமர்சித்து, அவர்களது தனிமனிதப் படுகொலையை நியாயப்படுத்தித் தமிழ்ச் சிந்தனையாளர்களை அழிப்பதற்கு உடைந்தையானது.ஜான் குழுவின் இம்முயற்சியை உரைத்துப் பார்க்க வன்னிப் புளட் ஆயுததாரீ மாணிக்கவாசகம் மற்றும் நீலன் திருச்செல்வத்தின் மரணத்தரில் இவர்கள் மகிழ்ந்து நியாயப்படுத்திய தமிழீழஞ் சஞ்சிகைகளது கட்டுரைகளை நாடிப் போவதன் மூலம் இதை மிகக் கறாராக விளங்க முடியும்."பீடை தொலைந்தது"என்றும் நீலனின் மரணத்தைவிடப் போராளிகளது மரணம் முக்கியமானதென நியாயவாதம் பேசிப் புலிகளது படுகொலைக் கரத்தைப் பலப்படுத்தியது.இதன் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுப்பரப்பை அழித்து, அந்நியச் சக்திகளுக்கிசைவான தொங்குசதைக் கூட்டமாகத் தமிழ்பேசும் மக்களை உருவாக்கியது.
 
 
9):புலிகளது போராட்டப்பாதையில் அவர்களை அடியாளக்கிய அந்நியச் சக்திகள், ஒருகட்டத்தில் புலிகள் தமது கட்டுப்பாட்டை மீறமுடியுமெனக் கருதியபோது அல்லது நீண்ட காலத்திட்டத்தின் மூலம் இது நடைபெறலாமெனக் கருதியபோது, புலிகளைச் சிந்திக்கவிடாது பிரமிப்பில் ஆழ்த்தும் தத்துவப் போக்கை-சிந்தனையை இவர்கள்மூலம் செய்து புலிகளை வெறும் இராணுவ வாதத்துக்குள் முடக்கியதற்கும் ஜான் குழு உடந்தையானது,
 
 
10):திட்டமிடப்பட்ட முறையில் தமிழீழஞ் சஞ்சிகையூடாகப் புலிகளது மக்கள் விரோத குறுந்தேசியவாதத்தை மேலும் மக்கள் மத்தியில் திணிக்க முனைந்தது.இதற்காக,சிங்கள அரசு மண்ணைப் பறிகிறது,தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்கிறது,தமிழர் வளங்களைக் கொள்ளையடிக்கிறது,தமிழச்சிகளைப் பாலியல் வல்லுறவு கொள்கிறதென்று ஒரு கொதி நிலையில் இனவாதத்தைத் தமிழ்ப் பரப்புள் நிலைப்படுத்தியது.இது புலியினது இருப்பை மேலும் வலுவாக்கி மக்கள் விடுதலையை மொட்டையடித்தது,
 
 
இந்த நிலையில்,மீளவும் இக் குழு வியூகம் அமைத்துக்கொண்டு, நம் முன் மே 18 இயக்கம் கட்டுகிறது.
 
 
அன்று, தமிழீழ மக்கள் கட்சி.புலி வலுவாகப் பாசிசச் சக்தியாக இருந்தபோது.
 
 
இன்று,இவர்களது எஜமானர்களால் அது அழிக்கப்பட்ட வேளை,அந்த வெற்றிடத்தில் மே 18 இயக்கமாக இவர்களது சதி அரசியல் அரங்கேறுகிறது?
 
 
இது, அந்நியச் சக்திகளால் நிதியூட்டப்பட்ட குழு.அன்று, புலிகளால் வழங்கப்பட்ட பெருநிதியும்,இன்று,தொடர்ந்து தமது அந்நிய எஜமானர்களது நிதியுதவியும் தொடரும்போது இவர்கள் உலகு தழுவிய நூல் வெளியீடு-கட்சி கட்டல் அனைத்தும் நடாத்தி முடிப்பார்கள்.இஃது, நமது மக்கள் புலிகளது அந்நியச் சேவையைப் புரிந்துகொள்ளாதிருப்பதற்கும், இதன்வழியில் தொடர்ந்து அந்நியர்களது தயவை நாடுவதற்குமான திசையில் முற்போக்கு வேடமிட்டுபடி அனைத்துவிதமான முற்போக்குச் சக்திகளையும் தமக்குள் உள்வாங்கி, அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக் கொடுக்கும் தந்திரமாகவே இனி மேல் நகரும்!
 
 
இதைத் தொடர்ந்து செய்வதற்கான அனைத்து வளமும் இக் குழுவிடம் உண்டு.
 
 
பொருள்-நிதி,அறிவு-மூளை வளமென அனைத்தையும் இது ஒருங்கே பெறுவதற்கான அனைத்து ஒத்துழைப்பும் இதற்கு கிடைக்கிறது.இது,பரந்துபட்ட மக்களது எதிரிகளிடமிருந்து இத்தகைய வளங்களைப்பெற்று, மீளவும் கட்சி கட்டுகிறது.
 
 
கடந்த காலத்திலும் இதையே செய்து, முள்ளி வாய்க்கல்வரைச் சவக்குழி வெட்டி பல்லாயிரம் மக்களைக் கொல்வதற்கான சித்தாந்த வலுவைச் செய்த இக் குழுவானது, ஆயுதம் தரித்த பத்தாயிரம் புலிப் பாசிச வன்முறையாளர்களைவிட ஆபத்தானது.இதன் இருப்பு எப்போதும் அந்நிய ஆர்வங்களால் காக்கப்படுவது.இதை, இனம்கண்டு அம்பலப்படுத்தாமல்,எதிர்காலத்தில் இரகுமான் ஜான் குழுவுக்கு மொட்டாக்குப் போடுவது நம்மை நாம் அழிப்பதாகவே முடியும்.
 
 
இதன் நோக்கில், புலிகளையும்,இவர்களையும்,இவர்களது அந்நியச் சேவைகளையும் குறித்து ஆய்வைச் செய்கிறேன்.அதற்கான தெரிவில் முதல் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சு புதியதோர் நாவல் ஆசிரியர் கோவிந்தனின் மரணம் குறித்தான முடிச்சு.இது, எங்ஙனம்"தீப்பொறிக்குள்"நிகழ்ந்து? இவர்கள் எங்ஙனம் புலிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்? என்பதும் மேற்காணும் தரவுகளின்-ஆய்வின் முடிவில் இனங்கண்டாலும்,உள்ளிருந்து கருவறுக்கும் இக் குழுவின் பாத்திரம் மிகக் கறாராக ஆய்வுக்குள்ளாக வேண்டும்.
 
 
இதற்கு கோவிந்தன் மரணத்தின் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்.
 
 
அது, அவிழ்க்கப்படாதவரை மக்கள் விரோதிகள் இரகுமான் ஜான் வடிவில்மட்டுமல்ல பிரபாகரன் வடிவிலும் நம்மை வந்தடைவர்கள்.அவர்களுள் நான்-நீங்கள் அனைவரும் இருக்கக் கூடும்.
 
இதைக் கடக்க முனையும் இளைஞர்களே!
 
வாருங்கள்,நாம் உண்மைகளை நோக்கிச் சிந்திப்போம்!!
 
 
இவர்களதும்-நமதும் கடந்தகாலத்தைத் தோண்டிப் பார்த்து, நமது மக்கள் மூலம் தீர்ப்புக் கூறுவோம்.
 
 
அதுவரை, எவரையும் நம்பாதீர்கள்!அனைவரையும்(என்னையும்)சந்தேகியுங்கள்.இது,உண்மைகளுக்காவும்,உருப்படியாகப் போராடவும் என்று இருக்கட்டும்.
 
 
வெல்க, பரந்துபட்ட மக்களது விடுதலை!
 
 
வேரறுக, மக்கள் விரோத அரசியல்-சதிகாரக் கூட்டின் திட்டம்!!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
14.12.2009

2 Kommentare:

Unknown hat gesagt…

Sri Rankan you have a really very imaginative thoughts bravo man!!!

Anonym hat gesagt…

சிறீரங்கன்,

தீப்பொறி பற்றிய உங்கள் அவசர எழுத்தைப் படித்தேன்.

- இளங்கோவின் பாத்திரத்தை தவிர்த்து தீப்பொறியின் சிதைவை அல்லது தடம்மாறலை ஆய்வாக்க முடியும் என நான் கருதவில்லை.
- காந்தனை ஒரு உளவாளி எனவும் திட்டமிட்டு முற்போக்கு சக்திகளை சிதைக்க வந்தவர் எனவும் நீங்கள் குறிப்பிடுவது எவ்வாறென முன்வையுங்கள். இல்லையேல் அதுவும் ஒரு சேறடிப்புத்தான்.
- தீப்பொறியின் உருவாக்கம், அவர்களின் தப்பிப் பிழைப்பு, தலைமறைவு வாழ்க்கை… என்பனபற்றியெல்லாம் அறிய முயற்சியுங்கள்.
- இளங்கோ உத்தமன் ஆகியோருக்கும் காந்தனுக்கும் இடையிலான உள்முரண்பாடுகள் ஓரங்கட்டல்கள் பற்றிய உள் விடயங்களை அறிய முயற்சியுங்கள். இளங்கோ தமிழீழக் கட்சியை சிதைத்தபின் வெளிப்படையாக தன்னை புலியாக இனங்காட்டி வேலைசெய்தவர். இளங்கோவின் பாத்திரத்தையும் காந்தனின் பாத்திரத்தையும் ஒன்றாக்குவீர்களாக இருந்தால் காந்தனை இளங்கோ ஓரங்கட்ட முனைந்தது ஏன்?
- புலிகளின் போராட்டத்தில் தமிழ் மக்களின் நலன்கள் பின்னிப் பிணைந்திருந்தது என்ற கருத்தை அப்போதைய (நீங்கள் அங்கம் வகித்த) தூண்டில் மிகப் பிரதானமான விவாதப் பொருளாக்கியிருந்தது. பின்னர் மனிதம் உட்பட பல சிறுசஞ்சிகைகள் அதன்வழி உரையாடத் தொடங்கின. இதற்கும் தீப்பொறியினர் காரணமா?. இல்லையெனின் தீப்பொறி பேசிய இந்தக் கருத்துகள் புலிக்கு முண்டுகொடுத்த சித்தாந்தம் என சொல்ல வருவது எந்த வழியில்?
- அவர்களது நிதிவளத்தை ஆதாரப்படுத்த வியூகம் சஞ்சிகை வெளியீட்டை உலகு தழுவிய வெளியீடாக -ஏதோ திரைப்படவிழா வெளியீடுபோல- பிரமாண்டமாகக் காட்ட முனைவது ஒரு அபத்தம். அதுவும் சஞ்சிகை வெளியீட்டுடன் பரிச்சயப்பட்ட நீங்களே இப்படி சொல்ல வருவதன் அவசரம் எங்கிருந்து வருகிறது?
- பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கொதித்தெழ வைத்த விடயங்களை உணர்ச்சிபூர்வமாகவன்றி அறிவுபூர்வமாக முன்வையுங்கள். (மொட்டையடிப்பது என்ற வார்த்தையோ கட்டுடைப்பு என்ற வார்த்தையோ உங்கள் வாதத்தை ஆய்வுமுறையாக பரிணமிக்க வலுவற்றவை.)

- நீண்ட காணாமல் போதலின்பின், இக்காலப் பகுதியிலான விவாதங்களை கருத்துகளை கண்டுகொள்ளாமல் இருந்ததின் பின்னான குறைபாடுகளுடன் வெளிவந்துள்ள தீப்பொறியினரின் (இப்போதைய மே18 அமைப்பினரின்) வியூகம் சஞ்சிகையின் கருத்துவெளிகளில் நாம் பேசிக்கொள்ள நிறைய இருக்கும் என நம்புகிறேன்.
- அதன்வழி கோட்பாட்டு ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் அவர்களின் கருத்தை எதிர்கொள்வது என்பது வேறு, அவர்கள்மீது ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவது என்பது வேறு என்ற அடிப்படையில் இதற்கான ஆதாரங்களை முன்வைப்பது இப்போ உங்கள் கடமையாகியிருக்கிறது.
- நீங்கள் பெற்ற தகவல்கள் யாரிடமிருந்து பெற்றுக்கொண்டவை என்பதையும் நீங்கள் வெளிப்படுத்த முடிந்தால், அவர்களுடனான ஒரு உரையாடலை நாம் நடத்தி முடிவுக்குவர ஏதுவாக இருக்கும், உங்கள் கருத்து சார்ந்த நேர்மையாகவும் அது இருக்கும்.

- நட்புடன் ரவி