Montag, Juni 20, 2011

தீபத்தில்: கேள்வி - நேரம்!

தீபம் தொலைக்காட்சியில்இடம் பெற்ற "கேள்வி-நேரம்" பீ.ஏ.காதர்- கீரன்,சேனன்,புதிய திசைகள் மாசில் பாலன் போன்றோரது உரையாடல்கள் குறித்துக் கவனத்தைக் குவிக்கிறேன்.அவர்களது உரையாடலில் பல தளத்தில் உடன்பாடான கருத்துக்கள் விரிந்து கிடக்கும்போதும்,வர்க்க அரசியலில் வர்க்க நலன் குறித்த பார்வைகள் மிகவும் பலவீனமான புரிதலூடாக உள்வாங்கப்படுகிறது.இது குறித்துச் சிலவற்றைப் பார்க்கலாம்.


ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களை நண்பர்கள் புனைகின்றார்கள்-குறிப்பாக நிமலன்-யோகலிங்கம்போன்றோர்.


இதுள், தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது,அல்லது விற்கப்படுகிறது. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத் தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.



இங்கே, தீபம் தொலைக்காட்சியில் உரையாடப்பட்ட விடையங்கள்கூட புலியரசியலது நீட்சியை வற்புறுத்தும் தந்திரத்தோடு கட்டியமைக்கப்படுவதில் மேலுஞ் சில ஞாபகங்களைச் சொல்லிச் செல்கிறது! உதாரணமாக: இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-இயக்கங்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்தும், தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்ககுநிலையிலிருந்து இந்த"புலம் பெயர் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும்குறியீட்டு அரசியல் நல்ல உதாரணமாக இருக்கின்றன.இது குறித்து நாவலனது சிறு குறிப்பு சிறப்பான பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது.அது,கிட்லரது காயடிப்பு அரசியலது வினைவரை பேசுகிறது.

=>

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய அழிவு-அரசியல் நிலையில், இத்தகைய "கேள்வி நேரம்"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச்(கீரன்போன்றோர்) சென்றுவிடுகிறதென்ற உண்மையில், அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்

==>>

புரட்சிகரமான நிலைப்பட்டை முன்வைத்து, அதன் வாயிலாக நமது இந்தக் கோலங்களையெல்லாம் சிறிதுசிறிதாக அகற்றி நம்மை சமுதாயத்தில் கால்பதிக்கவைக்கும் வர்க்கவுணர்வைத் தொடர்ந்து இயங்கவைப்பது ஒரு புரட்சிகரமான வேலைத் திட்டமே.அதைப் பூண்டோடு கைகழுவிய இந்த நண்பர்கள் இப்போது தனிநபர்களாகக் குறுகிச் சிதைவுறுவதைக்கூட மக்கள்சார்ந்த மதிப்பீடுகளால் நியாயப்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் கவலையுறவேண்டியிருக்கிறது.


அன்றாடச் சிக்கல்களாக இவர்களுக்குள் உருவாகிய இத்தகைய மனவிருப்புகள்-தெரிவுகள்(சாதியப் பிரச்சனை குறித்த கீரனது புரிதல்) எப்போதும்போலவே மக்களைக் குதறும் இயக்க-குழுவாதத்தை மறைமுகமாக ஏற்று இயங்குகிறது.இதை இனம்கண்டு தகர்க்காதவரை " இவர்களால் எந்த முன்னெடுப்பும் அதிகாரமையங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட முடியாது. மாறாக, அத்தகைய மையங்களை மேன்மேலும் வலுப்படுத்துவதில் தமக்குள் உள்ளவரை வேட்டையாடிக் குலைத்து அதிகாரத்துக்கு உடந்தையான-துணைபோனவர்களாகவே இருப்பார்கள்" என்றுதாம் சொல்வேன்!



தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர் நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல்-சேட்டைகள் இத்தகைய "கேள்வி நேரம் " புலம் பெயர் ஊடகச் சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணகருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமையையே தகர்க்கும் சாதியப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது!


இதன் வழி மக்களைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.எவரிடமும் புரட்சிகரமான பணியைச் சார்ந்தியங்கும் மனத்தை-நடுத்தரவர்க்க எண்ணங்களை இல்லாதாக்கிய புரட்சிகர மனது உருவாகிவிடவில்லை!


இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"பன்மைத்துவக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!


நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து உள்வாங்கவேண்டிய தேவை இருக்கிறது.இதை "கேள்வி-நேரம்"வழியாகக் கூடக் கடக்க முடியும்!என்றபோதும்,அதை ஏதோவொரு பெரு எண்ணவோட்டத்துக்கேற்பத் தகவமைப்பதுபோன்ற சூழலையும் கவனிக்கத் தக்கதாகவே இருக்கிறது!இந்தப் பெரும் எண்ணவோட்டம் எந்த வர்க்கத்தைச் சார்ந்தியங்குகிறதென்பதே எனது கேள்வி!


இப்போது,மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத(புலி-ரெலோ...) வரலாறு எப்பவும்போலவே தனித்த"தார்ப்பார்களை"உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இதை கீரன்-நிமலன் போன்றோரிடமிருந்து இனங்காண முடியும்.


இதன் தொடர்ச்சியான போக்குகளால் மனிதவுரிமை என்பதை வெறும் வெற்றுச் சொல்லாடலாக்கிய சிங்கள-தமிழ்அதிகாரவர்க்கமானது இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது. இஃது, சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு"தேசத்தின்"இறைமையாகக் கையளித்தது.இதன் ஆரம்பம் மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற இராணுவாதம் அவ்வரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக ஒரு பகுதி மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை ஆளும்வர்க்கங்கள்.


எனவே,இன்றைய இலங்கையை கீழ்வரும்படி புரிந்து விடலாம்:


1: மகிந்தா தலையிலான இலங்கை அரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒரு குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும், மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.ஆனால், இலங்கை அரசினது இன்றைய பாத்திரமானது பெரும்பாலும் இலங்கை ஆளும்வர்க்கத்தினதும்,வெளியுலக-பிராந்திய ஆளும்வர்க்கங்களது தெரிவை இலங்கைக்குள் நடாத்திமுடிப்பதில் அதன் அரசியல் நடாத்தை எல்லைதாண்டிய ஆளும்வர்க்கங்களது நலனோடிணைந்த கொடுங்கோன்மையாகவிரிகிறது-இஃது,இராணுவச் சர்வதிகாரத்தின் புதிய வடிவமாக இலங்கை "ஜனநாயகத்துள்"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,அரச அதிபராகவும் மகிந்தா தலைமையை இனங் காட்டுகிறது!அதற்கேற்பப் புலம்பெயர் தளத்தில் கருத்துக்களைக் கட்டுவதில் கீரன்-இடது-வலது எனக் கோடிப் பயல்கள் பற்பல வடிவங்களில்...


2: ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பி வருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(அடிப்படையுரிமை-குடிசார் அமைப்புகள் ,இன்பிற) தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இந்தக் குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய கட்சி அரசியல்வாதிகள் நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர்.


இங்குதாம்,சேனன்,புதிய திசை பாலன் போன்றோரது கருத்துக்களைக் கூhந்து நோக்க வேண்டியுள்ளது.இத்தகைய சூழலது மதிப்பீட்டுக்கு வரமுடியாத எந்த உரையாடலும் வெறும் வினையகற்றிய போலிப் போராட்ட வடிவங்களுக்குள் மீளவும் நம்மைத் தள்ளிவிடும் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.

21.06.2011

Keine Kommentare: