Freitag, August 12, 2011

"தூக்குத் தண்டனை"!-அதை ஏற்பதில் என்ன பிரச்சனை?

இராஜீவ் காந்தி கொலைக்கான தண்டனை:
"தூக்குத் தண்டனை"!-அதை ஏற்பதில் என்ன பிரச்சனை?"இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" என்பதுதாம் உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்."ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) "தூக்குத்தண்டனை"உறுதியாகி வருகிறது.

இந்திய ஆளும் வர்க்கத்தின் வரலாற்றுப் பிரதி நிதிகளது பரம்பரையின் வீழ்ச்சி-அழிவில்(காந்தி கொலை-சஞ்சாய் காந்தி கொலை-இந்திரா காந்தி கொலை-இராஜீவ் காந்தி கொலை) இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் பிளவை உறுதிப்படுத்தி விடலாம்.திட்டமிடப்பட்டு காந்தி-காந்தி குடும்பத்தவர்கள் அழிக்கப்பட்டதன் பின்னே மாறிவரும் இந்திய ஆளும் வர்க்க முரண்பாடுகள் முன்னிலைக்கு வந்தன.இதன் தொடர்ச்சியான படுகொலை அரசியலானது,குற்றஞ் சுமத்தப்பட்ட மூவர்மீது(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) வழமைபோலவே"தூக்குத் தண்டனையை"சுமத்தி இருக்கிறது.இது,புலிவழிப்பட்ட கடைந்தெடுத்த துரோக அரசியலின் இன்னொரு பக்கத்தையொட்டி விவாதிக்க வேண்டியது.

அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு அடியாளாகவிருந்த புலிப் பாசிஸ்ட்டுக்கள்,இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்காகக் கூலிக்குக் கொலை செய்ய ஆயத்தமானபோது தனது பேரத்தில் இராஜீவ் கொலையை துன்பியில் நிகழ்வெனக் கூறிக்கொண்டது.இக் கொலையின் பின்னணியை புலி அடியாட்படையின் இந்தியவுறகளைத் திறம்படவும்-வெளிப்படையாயும் ஆரயக்கூடிய ஊடகங்களால் மட்டுமேதாம் கொலைக் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் நியாயவாதிகளா-குற்றவாளிகளாவெனத் தீர்மானிக்க முடியும்.இங்கே,நீதி மன்றத்துக்கான வேலை இந்திய ஆளும் வர்க்கத்தைக் காப்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? எனவே,இத் "தூக்குத் தண்டனை" த் தீர்ப்புகளையிட்டு ஆச்சரிப்பட எதுவுமில்லை.ஆனால், நிசமான குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முயற்சியில் சிலரைச் சட்டரீதியாகக் கொல்வதையிட்டு நாம் விவாதிக்க முடியும்.

ஒரு கருத்துக்குப் பன்முகப் பட்ட புரிதல் சாத்தியமான இன்றையவுலகில் நாம் இராஜீவ் கொலை சம்பந்தமான கருத்துகளுக்கு ஒற்றை பரிணாமப் பாங்கில் புரிந்து கொள்வது-விவாதிப்பது எவ்வளவு அபாயகரமானதென்பதைப் புரிந்து கொள்ள இந்திய ஆளும் வர்க்க ஊடகங்களே சாட்சி!


இராஜீவ் கொலையைக் கூலிக்காகச் செய்த புலிகள் அதைத் தமிழ் பேசும் மக்களது விடுதலைக்காகச் செய்ததாகத் தமது வால்கள் மூலம் கருத்துக்கட்டியபோது,இந்திய"அமைதிப்படை"அட்டூழியங்களைச் சொல்லி நியாயப்படுத்திய காலக்கட்டத்தில் இந்திய-தமிழ்நாட்டு மக்களில்பலர் அதை ஏற்க முடியாது இப்படியும் விவாதித்தார்கள்:

"ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை"-இந்திய பிரதான ஊடகங்களது வாசகர்கள்.

இன்று கொலைக் "குற்றவாளிகள்"மூவருக்கும் "தூக்குத் தண்டனை"உறுதியாகிவிட்ட நிலையில்,இதைச் சாத்தியப்படுத்தும் அருகதை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு உண்டா?இந்தியக் கட்சி அரசியலில் ஆதிக்கஞ் செலுத்தும் பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் என்ன யோக்கியதை உண்டு?

இந்தியச் சட்டத்துறையானது இந்திய ஆளும் வர்க்கத்தின் காப்பரண் என்பதைக் குறித்து முரண்பட உதுவுமில்லை.நிலவும் பொருளாதார அடிக்கட்டுமானத்தில் மேல்மட்ட வன்முறைசார் கருத்தியிலே நீதிமன்றம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.எனவே,இந்த அருகதையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான அழிவு அரசியலைக் குறித்துப் பார்க்கலாம்.இந்த அரசியல் நகர்வானது தென்னாசியக் கண்ட நாடுகள்பூராக வாழும் மக்களுக்கு ஆபத்தானது.இத்தகைய அரசியல் தொடர்ந்து"தூக்குத் தண்டனை"உடாக வெற்றி பெறுமானாலும் இந்தியாவில் புரட்சிகரப் போராட்டம்,குடிசார் உரிமை அமைப்பாக்கம் யாவும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்ற உண்மையையும் புரிந்தாக வேண்டும்.

இந்த ஆபத்தான அரசியலை(ஆளும் வர்க்க-அதிகாரக் கூட்டத்தின் பயங்கரவாதத்தை) நியாயப்படுத்தும் ஆளும் வர்க்க கருத்தியற்றளமானது கீழ்வரும்படி மக்களைக் காயடித்தது:

1): குஜராத்தில் 3000 இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

2): பாகிஸ்தான், காஷ்மீரி மக்களை இந்தியாவுக்கெதிராக தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்

செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும் ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப் படுதல் பரந்துபட்ட மக்களுக்குள் சாத்தியமாகிறது. அதை நம்பும் தளமும் முற்றுமுழுதாக துக்ளக் சோ போன்றோரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இன்றை சீரழிவு ஊடகத்துறை என்பதும் 24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் என்ற வகையறாவுக்குள்ளும் காட்சிப்படுத்துவதாக எண்ணவோண்டாம்.


இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரும் இந்த வகை மையக் கருத்தியில் வன்முறையைச் செய்தே முடிக்கின்றனர்.இவர்களேதாம் "தூக்குத் தண்டனையை"நியாயப் படுத்தும் பேர்வழிகள்.இவர்களது முன்னோடி"மகாத்மா" காந்தி என்பதை, தோழர் பகத் சிங்கின்மீதான "தூக்குத் தண்டனையில்"காந்தியின் அரசியலை உரைத்துப்பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" என்பதுதாம் உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்.

ஆளும் வர்க்கம்"வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது.தூக்குத் தண்டனை என்பது போராடும் மக்களை மனோவியல்ரீதியாகத் தாக்கும் ஆயுதம்.அதைச் செய்வதில் அதீத அராஜகமுடைய தேசங்களான அமெரிக்கா-இந்தியாபோன்ற தேசங்கள் முன்னிடம் வகிக்கின்றன.

இதுதாம் முள்ளிவாய்க்காலில் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.

நிலவும் அதிகாரத்துக்கு எதிரான திசையில் காரியமாற்றுபவர்கள் அதிகமாகப் பரந்துபட்ட மக்களது நலனின் நிமித்தமே தமது செயற்பாடுகளை முடுக்கி விடுகின்றனர்.இதுள் நிலவும் ஆதிக்கம் ஆளும் வர்க்கமாக இருந்தாலென்ன அல்லது விடுதலைக்காகப் போராடும் விடுதலை இயக்கமாகவிருந்தாலென்ன அவர்கள் எந்த வர்க்கத்தால் ஆட்டி வைக்கப்படுகிறார்களோ அந்த வர்க்கத்தின் நலனையே பிரதிபலிப்பார்கள்.இதற்குப் புலிகள் இயக்கம் நல்ல உதாரணம்.பாருங்கள், புலிப்பாசிஸ்டுக்கள் எத்தனை மனிதர்களுக்கு மரணத்தண்டனை கொடுத்தார்களென!இவர்கள் அனைவரும் இதே ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் போன்று நிரபராதிகள்.மக்களுக்காச் செயற்பட்டவர்கள்-கூலிக்குக் கொலை செய்தும்,உடந்தையாகவும் இருந்தவர்களில்லை.

கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தப் பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாகச் சிலவற்றைச் சொல்லி முடிக்கலாம்:
இராஜீவ் கொலைக்காகப் பலியெடுக்கப்படக் காத்திருக்கும் அந்த மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர்) முதலில், நரேந்திர மோடிக்குத்"தூக்குக் கயிறை"இந்திய நீதித் துறை வழங்குமாக இருந்தால் நிச்சியம் இந்த ராஜீவ் கொலைக் குற்ற வாளிகளுக்கு எதிராகத் தீர்க்கப்பட்ட தீர்ப்பிலும் ஏதாவது நியாயம் இருக்கக் கூடும்!.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

12.08.2011

Keine Kommentare: