ஜோஸ்[ Jose Antoin] http://www.facebook.com/joseantoin ,புலிகள் இயக்கம் திடீரென வந்தவொரு இயக்கம்.அதன் தோற்றம் வளர்ச்சியை நாம் நேரில் அநுபவப்பட்டு எழுதுகிறோம்.பிளக் செப்ரம்பர் இயக்கங் குறித்து[Black September http://en.wikipedia.org/wiki/Black_September_%28group%29 ] "அறிவு-அநுபவம் " எப்படி உங்களுக்கு?
நாம் ஜெனரல் கியாப்பை , டாக்டர் சன்- யாட்சென் போன்றோரை சல்லடை போட்டுக் கற்ற அன்றைய நாளிலிருந்து புலிகளை மதிப்பீடு செய்து,அந்த இயக்கமானது மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாதவொரு அடியாட்படை இயக்கமென 84 இல் வகுத்துக்கொண்டோம்.இதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற ஆயுதமே அடிப்படை.வெறும் கற்பனைகளால் எவரும் புலிகளின் அழிவை முன் கூட்டிச் சொல்லவில்லை!புலிகள் அழிந்து சுக்கு நூறாவார்கள் என்பது அதன் வர்க்க நலனில் இருந்துதாம் மதிப்பீடாகியது.சமுதாயத்தின் பெரும் பகுதி மக்களது நலனைப் பிரநிதித்துவத்துக்குள் கொணராமலும்,மக்களைப் பார்வையாளர்களாக்கி,ஆளும் வர்க்க (வி)தேசியத்தை அது பிரதானப்படுத்தி மக்களை உணர்ச்சிக்குள் தள்ளியதும் அதன் வாயிலாகத் தமது எஜமானர்களுக் கேற்ப மக்களை கூட்டோடு கோவிந்த போட வைத்ததும் தற் செயல் நிகழ்வல்ல.
சிங்கள இனவொடுக்குமுறைக்கெதிரான மக்களது எதிர்ப்புணர்வைத் தமது இயக்க நலனுக்காகப் தேர்ந்தெடுத்து விடுதலைப் போராட்டத்தைச் செய்ய முடியாது.விடுதலைப் புலிகளது வரலாற்றை அநுபவத்துக்குள் உள் வாங்காமால் அதன் புறநிலையை வைத்து எவரும் விவாதிக்க முடியாது.அந்த அமைப்பு எவ்வளவுதாம் நிலப்பரைப்பைத் தனக்குள் வைத்துத் தனது அரச ஜந்திராத்தால் காத்தாலும் அதைத் தக்க வைப்பதென்பது முடியாது காரியம்.ஏனெனில் மக்கள் புரட்சிகரமானவுணர்வுக்குள் வாழாதவரையும் இது சாத்தியமில்லை.இது குறித்துப் பார்ப்போம்.
புரட்சிகரக் கட்சியோ ஒரு போராட்டத்தை எப்படி நடாத்த வேண்டுமெ ன்று கற்றுக் கொடுக்கும்,அவ் வேளையில் அதன் இராணுவமோ ஒரு புரட்சிகரக் கட்சியைப்போன்று போராட்டத்தை நடாத்துகின்றதோ அப்போதுதாம் அது இராணுவம் எனத் தகுதியைப் பெறும்.புலிகள் அமைப்பானது அரச கூலிப்படைகளை நொட்டி-நொட்டி மக்களைச் சலிப்புக் குள்ளாக்கியதும்,அரச ஆதிக்கத்தை உடைத் தெறியாமலே அரச வன்முறை ஜந்திரத்தின்மீது கைவைக்க ஆரம்பித்தது.இதுவே,அதன் தோல்வியை முன்கூட்டிக் கட்டியம் கூற வைத்தது.சர்வதேசச் சூழல்,தேசத்தின் வளங்கள்,பிரத்தியேகமான புவியில் அமைப்புகளெல்லாம் அந்த இயக்கம் கணிக்கவே இல்லை.அது,திடீரென அந்நிய ஆயுதங்களால் பெருக்க வைக்கப்பட்டு,அதன் சுயவளர்ச்சி முடக்கப்பட்ட ஒரு அடியாட் படையாகவே இருந்தது.
பிரபாகரன் வெறும் ஒளிவட்டங்கட்டியவொரு பொம்மை.
புரட்சிகரத் தன்மை(புரட்சிகர அடித்தளம்) துளியளவும் அற்றவொரு இயக்கத்தால் விடுதலையைச் சாதிக்க முடியாது.இதுதாம் புரட்சிகரக் கட்சியின் பாலர் பாடம்.
புரட்சிகரத் தன்மை என்பதைத் தமிழ்ச் சமுதாயம் இன்றுவரை புரியவே இல்லை!
புலிகள் இயக்கத்திடம் புரட்சிகர அடித்தளம் இல்லாததென்பது என்றால் என்ன?
தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை அந்த மக்கள் கடிதப் பொருளாதாரத்தில் தங்கியிருந்தவர்கள்.யார் கழுத்தையும் நெரித்துத் தன் பிள்ளைகளை வாழ வைக்கும் சுய பொருளாதாரமற்ற ஒட்டுணிச் சமுதாயமாக இருந்தது-இருக்கிறது.வாழ்வைக்கொண்டியக்க வேறெந்த வழியுமற்றவர்களோ,கடுமையான ஏழ்மையின் காரணமாகவும்,வேறெந்த வழியுமில்லாமலும்-வாழ்சூழல் பாதிப்படைந்து,குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது திண்டாடிக்கொண்டிருந்தபோது சிங்கள அரசின் இனவொதுக்கல் பிரச்சனையை மையப்படுத்தி-கூர்மைப்படுத்தி (இராணுவம் கிராமங்களுக்குள் வாகனத்தின் ஊடாக வலம் வரும் வேளை குண்டெறிந்து தாக்க,பதிலுக்கு இராணுவம் அந்தக் குடியிருப்பு மக்களைத் தாக்கி அராஜகம் புரிய வைத்து, மக்களை அரசுக்கு எதிராகச் செயற்பட வைத்தல்)வாழ் சூழலை இனியில்லையென்றபடி பாதிப்புக்குள்ளியபோது,மக்களும் ஈழப் போராட்டத்துக்கு "ஆமாம்"போடுவது.இத்தகைய சூழலில் புலிகள் ஒவ்வொரு பகுதியாக இராணுவத்திடம் இழக்கும்போது போராட "ஆமாம்"போட்டு இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் இராணுவ வலயத்தில் சிக்குப்பட்டு அவர்களது வாழ்வு ஒரளவு-ஏதோவொரு சூழலில் ஒழுங்குக்வர இவர்கள் இதுகாறும் தாம்கொண்ட"ஈழவிடுதலை"இலட்சியத்திலிருந்து நழுவிக்கொண்டார்கள்.அத்தகைய சூழலில் புலிகள் என்ற அமைப்பு வெறும் இயக்கவாத மாயையில் சில ஆயிரம் இளைஞர்களைப் பலவந்தமாக உள்வாங்கிக் குறுகியது.
இதுதாம் புரட்சிகர அடிப்படை அற்ற போராட்ட முறைமை.இதன் விளைவு மக்கள் தொடர்ந்து புலிகள் அமைப்பிலிந்து அந்நியமானார்கள்.மக்களை அணிதிரட்டும் புரட்சிகரத் தன்மையின்றிய புலிகள்.அந்நியச் சக்திகளின் தயவில் ஆயுதங்களைக் குவித்துவிட்டுப் புரட்சியைச் சாதிக்கும் கோதாவில் தொடர்ந்தது.அந்நியச் சக்திகள் தமது கனவுகளைத் (ஈழத்தில் புரட்சிகரக் கட்சியை இல்லாதாக்கல்,மக்களுக்கும் இயக்கத்துக்குமிடையிலான ஜனநாயத் தன்மைகளை ஒழித்தல்,மக்களைத் தொடர்ந்து ஆயுதத்தால் அச்சப்படுத்தி விடுதலையுணர்வைத் தடுத்தல்,இதன் வாயிலாகப் புரட்சிகரமாகச் சிந்திப்பவர்களை அழித்தல் அல்லது தேசத்தை விட்டு ஓட வைத்தல்-மக்கள் தமது வர்க்க ஒடுக்குமுறையைப் புரியாதிருக்கும் தமிழ்க் குறுந் தேசிய வெறியை பரப்புதல்,அதன் வாயிலாக மக்கள் பலமற்ற ஒரு ஊதிய அமைப்பை உருவாக்கி அதை அடியாட்படையாக்கல்,மக்களுக்கு எதிராகவும் மாற்று இயக்கங்களுக்கு எதிராகவும் ஆயுதங்களைத் திருப்பி எதிரி செய்யும் காரியத்தைப் புலி அமைப்பின்வழி செய்வித்தில்)தொடர்ந்து புலிகள் மூலம் அறுவடை செய்து புலிகளைக் குட்டவேண்டிய இடத்தில் குட்டி அழித்தார்கள். இதிலிருந்து என்ன தெளிவாகுதென்றால்,போராடும் விடுதலைப் போராளிகளுக்கு-இராணுவத்துக்கு போதிய புரட்சிகர இலட்சியங்கள் இல்லையென்றால் அத்தகைய போராளிகள் தமது சுயநலன்களைக் கைவிடாதவர்களாகக் குறுக்கிப் போய்விடுவர்.விடுதலைப் போராட்டம்-புரட்சி அவர்களது சுயநலன்களைப் பாதிப்புக்குள்ளாக்கும்போது அவர்கள் மிகவும் நம்பத்தகாதவர்களாக மாறியே தீர்வார்கள்.புலிகளது பிளவுகள் இந்தக் கோணத்தில் நிகழ்ந்தவை-உட்கட்சி ஜனநாயகமற்று தமது சொந்தப் படையையே அழித்துத் துரோகிகள் என்பதெல்லாம் இதன் நோயே!இதுவே,விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிவுறும் இயக்கவியல் புரிதல்.
இதெல்லாம் புலிக்குக் கொடி தூக்கிய புலம்பெயர் புண்ணாக்குகளுக்குப் புரியவே இல்லை!
மீளவுஞ் சொல்கிறேன்,அரச ஜந்திரம் என்பது வேறு,அரச ஆதிக்கம் என்பது வேறு.புலிகள் செய்த முதல் மூடத்தனம் அரச ஜந்திரத்தின்மீது கை வைத்தது.அரச ஆதிக்கத்துக்கள் இருந்து விடுதலை பெறமலே அதன் வன் முறை ஜந்திரத்தின் மீது கைவைத்தது.புலிகளுக்குப் புரட்சி பற்றி அக்கறையே கிடையாது.ஏனெனில் அவர்கள் தமிழ் மேட்டக் குடியின் கைப் பொம்மைகளாக இருந்தபடி அந்நியச் சக்திகளுக்கு அடியாளாகவிருந்த ஒரு மாபியா இயக்கம் என்பதை மீளவுஞ் சொல்லியாக வேண்டும்.
பல புரட்சியாளர்களது தோல்வியை ஆராய்ந்த லெனின் பின்வருமாறு கூறுகிறார்:"புரட்சி என்பது அரச ஜந்திரத்தின்மீது கை வைப்பதல்ல,மாறாக அரசு ஜந்திரத்தை உடைத் தெறிவதாகும்."
இறுதியாக:ஆதி ஆதவன் மேதைகளுக்கு, வணக்கம் சார்!ஒரு சின்ன வேண்டுகோள்: உங்களைப்போன்றோர் சிரிப்பதற்கு முதல் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,கூடவே, மக்கள் யுத்தமென்றால் என்ன,புரட்சிகரக் கட்சி-இராணுவம் அதன் அடிப்படைகள் என்னவென்றும்,வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கப் போரே தொடருமென்பதையும் புரிந்துகொண்டால் மிகப் பெரிய புண்ணியம்.நீங்கள் சிரிக்கும்போது நாம் தலைக்கு மொட்டாக்கிட்டுச் செல்லமாட்டோம்.அந்தச் சிரிப்பின் பின்னே இருக்கும் அறியாச் சிறுபிள்ளைப்போக்கைச் சுட்டிக் காட்டுவோம்.அப்பவும் புரியாது போனால் காலத்தின் கையில் விட்டுவிட்டு,உங்கள் வர்க்க மூலத்தைக் கண்டடைய முனைவோம்.
இப்போதைக்கு இது போதும்.மேற்கொண்டு விவாதம் வளரும்போது,நாம் வேறு சில பக்கத்தைத் திறந்து அன்ரோனியோ நெக்றியின் ஒபேறியோ [Potere operaio ] 1973 களில் தோல்வியுற்றதுவரை விவாதத்தை வளர்த்துச் செல்லலாம்.
நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
21.08.11
Keine Kommentare:
Kommentar veröffentlichen