Sonntag, Januar 06, 2013

இராணுவம் வெளியேறக் கூடாது

தமிழ்ப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேறக் கூடாது.

ஏன்-எதற்கு?

ன்று தமிழ் நிலத்துள் நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்தி இலங்கை அரசின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் ,பிரிவினைவாதப் பயங்கரவாதம் மீளத் தலையெடுக்க முனைவாதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.


இலங்கை எப்போதும் போலவே பல் வேறு இனக் குழுமங்களது பிரச்சனைகள்-ஆர்வங்களது தேசமாகவே இருக்கிறது.அதன் சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய பொருளாதார ஆர்வத்தினதும், அதுசார்ந்தவுற்பத்தியூக்காத்தாலும்-உறவுகளாலும் சமுதாய ஆவேசமாக மாற்றமுறுவதற்குப் பதிலாக அதிகாரஞ்சார் வழிபாடாக முகிழ்க்கிறது.இலங்கைச் சிறுபான்மைச் சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் எவரிடமும்-எந்தக் கட்சிகளிடம் தீர்வில்லை.பிரச்சனைகளை வைத்தே ஒருவித வாழ்வியற் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உளவியலையும் ,அதுசார்ந்த உலகக் கண்னோட்டத்தையும் இலங்கையின் 21 ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டமாகக் கருத முடியும்.

ஜனநாயகத்தின்மீதான முரண்பாடுகள்:

இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடாகப் பொருளாதார வளர்ச்சிகளின் வாயிலான பங்குச் சண்டைகள் வருகின்றன. பங்குகள் பொருளாதாரப் போட்டிகளோடும்,அத்தகைய பொருளாதாரத்தால் நிலைபெறும் அரசியல் அதிகாரத்துக்கான போட்டிகள் இனங்களுக்கிடையில் முட்டிமோதும்போது இலங்கையில் இனமுரண்பாடாக இவை எட்டின.இதன் அகரீதியான தாக்கமானது இலங்கை மக்களது மனங்களின் இனப்பகையாகக் காலாகாலம் வளர்ந்திருக்கும்படியாக இலங்கையின் பொருளாதார முரண்பாடுகள் இருத்தி வைக்கப்பட்டன.இதன் அறுவடையாகக் கடந்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தைச் சந்தித்த இலங்கை மக்கள் தம்மை அடையாளப்படுத்திய இனஞ்சார் இருப்புணர்வானது அவர்களது பௌதிக அடையாளமாச்சு.இது,மனித வரலாற்றில் அனைத்துச் சமுதாயங்களதும் வரலாற்றுப் பக்க விளைவாகவே உணரத்தக்க புரிதல்.

வரலாற்று மனித மாதிரிகள்காலத்துக்காலமாக மாறிக்கொண்டன. அவ்வண்ணமே வாழ்வுக் கண்ணோட்டமும் மாறிக்கொண்டன.புதிய வர்த்தக வியூகங்கங்கள் புதிய உறவுகளை,புதிய மாதிரியான உற்பத்தி முறைமைகளையும்,உற்பத்தியுறவுகளையும் உருவாக்கியுள்ளன.இங்கே, எந்தவர்க்கம் எதை நகர்த்துகின்றதென்ற புரிதலும்,ஆளும் வர்க்கம் எதுவென்ற பார்வைக்குள் உணரப்படமுடியாதளவுக்கு ஊக வணிக்கத்தின் நிதி திரட்சியும் அதன் அனைத்துப் பரிணாமங்களும் உதிர்ந்துவிடக் கூடிய முதலாளிய அமைப்பைத் தொடர்ந்து பலமான வகையிற் காத்துக்கொண்டிருக்கிறது.முன்னைய அடிக்கட்டுமான மேற் கட்டுமானப் புரிதலில் பாரிய வெடிப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரியம் சந்தர்ப்பத்தை மரபு மார்க்சிய வாய்ப்பாட்டாளர்கள் இழந்து வருகின்றனர். அவர்களால் இன்றைய அதிகாரம்-ஆதிக்கம்-ஆளும் வர்க்க நகர்வுகளை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.இதன் தரித்திர நிலையில் இன்றைய இலங்கையின் புதிய திசைப் போக்குகளை அறிவதில் 19 ஆம் நூற்றாண்டு மார்க்சியப் புரிதலோடு கட்சி கட்டுதல்,குலைத்தல்,உருவாக்குதல்,அணித் திரட்சி-சதிகளென ஆயிரஞ் சங்கதிகள் நிகழ்கின்றன.இதற்குள் அரசுகளது தயவுதாட்சன்யமற்ற ஆதிக்கக் கனவுகள் நமது தேசத்துள் பலவித அறுவடைக்கான அரசியல் நகர்வுகளைக் கட்டிவைத்தியக்வதும் அதன் வாயிலான அனைத்து மக்கள் விரோதக் கூறுபோடுதல்களும் தொடர்ந்து அறுவடையாகிறது. இந்தச் சந்தர்ப்பத்துள் இப்போது புதிதாக எழுந்த கோசம் ஒன்றைக் குறித்து விவாதத்துக் எடுப்பதும் அதன் திசையூக்கத்தில் கட்சின் தெரிவு என்னவென்பதும் உணரவேண்டிய கட்டாயமாகும்.


"தமிழீழ"ப் போராட்டத்தின் நோக்கமும் அதன் போராட்டத் திசையமைவும் தமிழ்மக்களது சுயாதீனச் செயற்பாட்டையும்-வாழ்வு முன்னெடுப்பையும் பலமாக மாற்றியமைத்தது.அதன் பலனாக இனவொடுக்குமுறையென்பது பாரிய யுத்தவாத இராணுவ ஜந்திரத்தின் துணையோடு புதிய நிலைக்கெட்டியபோது அங்கே புலிகளது இராணுவ ஜந்திரத்தின் துணையோடு போட்டி த் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின் முரண்பாட்டை இலங்கை சந்திக்கும் நிலைக்குள் இந்த "இனவாத ஒடுக்குமுறையும், இராணுவவாத ஒடுக்குமுறையும்" சந்தித்துக்கொண்டன.இதுசார்ந்து, இலங்கை அரசானது பாரிய யுத்த முன்னெடுப்புக்குள் தள்ளப்பட்டதும்,கூலி இராணுவமாகவிருந்த இலங்கை இராணுவம் இலங்கை அரசியல் அமைப்பு முறைகளையே மாற்றியமைக்கும் ஆதிக்கச் சக்தியாகவும்,அரசியல் கட்சிகளைக் கண்காணித்து இயக்கும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து அதிகாரத்தையும் தனக்குள் உள்வாங்கியது.அது, பெயரளவில் இராணுவமாகவும் உள்ளடக்கத்திலொரு புதிய ஆளும் வர்க்கமாகவும் இசைவாக்கம் பெற்றது. கட்சிகள் இராணுவத்தையண்டித் தமது இலக்குகளையெட்டியபோது அவை பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்கு உரிமையுடைய கட்சிகளாகவுருவாகின.அரசினது வன்முறைசார் ஜந்திரமான அனைத்துப் பகுதியும் அரசின் போக்குகளைத் தீர்மானிக்கக் கட்சிகள் தமது நிதித் திரட்சியை முதலீடு செய்யும் சட்டவுரிமைகளுக்காக இவர்களோடு முரண்பட்டனவேயொழிய மக்கள்-குடிசார் அமைபாண்மைக்கும்-சுயாதீனச் சமூகத்துக்குமாக இவர்கள் ஜனநாயகத் தன்மையைப் பிரயோகிக்கவேயில்லை.இது புலிவழியுருவாகிய புதிய தமிழ்ஆளும் வர்க்கத்துக்கும் பொருந்தும்.

ஜனநாயகம் என்பது என்னவென்ற கேள்விக்கு விடையளிப்பதில் பலர் பலவகைகளான விளக்கங்களைத் தந்துவிட்டனர் . இலங்கையைப் பொறுத்தவரை இன்றைக்கான ஜனநாயகக் கோரிக்கையானது மக்களது சுயாதீனச் செயற்பாட்டுக்கு ஜனநாயம் வழிவிடுவதென்றும்,மக்களது சமூக அசைவியக்கபோக்குக்கு அண்மித்த பாதுகாப்பையும்,மனிதர்களாக வாழ்வதற்கான அனைத்து வகையான இருப்புக்கும் ஜனநாயகம் உறுதிப்பாட்டைக் கொடுக்கும் என்றும்,ஜனநாயகத்தின் வழி சுதந்திரமான பொருளாதார முன்னெடுப்புக்கும் மக்கள் தம்மால் உற்பத்தி செய்யும் பொருள்களுக்குத் தாமே சந்தைப்படுத்தும் உரிமைக்கும் இது அண்மித்திருக்க வேண்டுமென்று கூறும் நிலைக்கு இலங்கையின் நிலமை தள்ளப்பட்டுள்ளது.இதன் அர்த்தமானது இன்றைய இலங்கையின் புதிய ஆளும் வர்க்கத்தின் நகர்வைக் கணித்தியங்கும் பொறியமைவைக் குறைந்த பட்டசாமவது புரிந்துகொள்வதில் இந்த ஜனநாயகத்தின் முரண்பாட்டை நம் முன்னிலைப்படுத்த முடியுமென்பதே என் கருத்து!.


புதிய வகை மாதிரியான பொருளாதார வாழ்வுக்குள்உந்தப்படும் ஆர்வங்கள்:


"தமிழீழ" யுத்தத்துக்கு முந்திய காலனித்துவத்துக்குப் பின்பான இலங்கையானது இனங்களின் கூட்டியில்பு சார்ந்த மூலதன திரட்சியையும் அதுசார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளையும் தனக்குள் தகவமைத்தது (இலங்கைச் சமுதாயத்துக்கு முதலாளித்துவம் சுய முரண்பாட்டிலெழுந்தல்லவென்பதும்,இலங்கை முதலாளித்துவம் காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்டதென்பதும் இங்கு ஈண்டு கூறத்தக்கது). அது, பலதரப்பட்ட இலங்கையின் இனக் குழுமத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட உற்பத்தியையும்,சந்தைப்படுத்தலையும் ஒரு சுழற்சிப்போக்கான முன்நிலை-பிற்படுத்தும் நிலைக்குள் வகுத்திருந்தது.இத்தகைய ஆளும் வர்க்கச் சமரசப்போக்கு இலங்கையின் நிதியீட்டாளர்கள்,தரகு முதலாளிய முன்னெடுப்பாளர்களை இனங்களைக் கடந்து ஒரு நலனுக்குட்பட்ட நட்புறவை வழங்கிக்கொள்ளும் நிர்பந்தத்துள்(1910 இன்  ஆரம்பத்தில் கருக்கொண்டு அஃது, முஸ்லீம்-சிங்கள வர்த்தகர்களது கலகமாக வெடித்துக்கொண்டதன் விளைவாக)ஓட்டுக் கட்சி முரண்பாடாக இதை வளர்ந்துகொண்டது. அதுள், முழுத் திருப்தியடையாதவொரு அரச ஜந்திரமான சேவைத்துறை அதிகாரவர்க்கம் எப்போதும்போலவே இனவாதத்தை ஓங்கவொலித்து இனவாதத்தை ஊன்றிக்கொண்டதென்பது இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியன் பங்கு பிரிப்பு முரண்பாடு மட்டமல்ல என்பதாகும்.


பழிவாங்கப்பட்ட அதிகாரவர்கமானது தனது உயர் பதவிகளுக்குள் மட்டும் ஒரங்கட்டப்பட்ட இனவாதப் பாகுபாட்டைச் சகிக்க முடியாது தொடர்ந்து இனக்குரோதத்தைக் கூர்மைப்படுத்தியது. இதுள் யாழ் மேட்டுக்குடி அரசயுயர் பதவி வகித்த ஒரு கையளவு குடும்பங்கள் இனஞ்சார்ந்த கட்சி அரசியலில் தமது நலன்களைக்காப்பதற்கான திசைவழியைக் கண்டதும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்குள் நிலைப்பட்ட சமரசப்போக்குகள் தள்ளி வைக்கப்பட்டன.இது இனஞ்சார் தரகு முதலாளிய முரண்பாடாக வெளிப்ட்ட சந்தர்ப்பமானது பெரும்பாலும் இலங்கை அரசின் அரசவுடமைக் கொள்கையின்வழி தேசிய முதலாளியத்தைவுருவாக்கும் போக்கிலிருந்து ஆரம்பித்தன.எனினும்,அமெரிக்க உளவுப்படையால் பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின் இலங்கைத் தேசிய முதலாளியத்தின் பாத்திரம் சிதைந்தே போனதென்பதுதாம் உண்மை!


இந்த முரண்பாடுகள் இறுதியில்"தமிழீழ"ப் போராட்டத்தின்வழி 90 களின் பிற்பகுதியில் புதிய ஆளும்வர்க்கத் திசையமைவைத் தமக்குள் உருவாக்கிக்கொண்டதை மேலே சொன்னேன். இப்போது,இந்தப் போக்கிலிருந்து இரண்டு வகையான குட்டிமுதலாளிய நலன்களைக்கொண்ட முரண்பாடுகளைப் பார்க்கலாம்.


புலிகளது தரப்பிலிருந்து செய்யப்பட்ட போரானது பல இலட்சம் தமிழர்களது உயிரைப்பறித்தும்,அவர்களது உடமைகளைத் தமிழீழத்தின் பெயரால் திருடியும் உலகு தழுவிய வகையில் சர்வதேசரீதியகவொரு மிக நுணுக்கமான சந்தர்ப்பவாதத் தரகு முதலாளிய வர்க்கத்தை உருவாக்கியது.புலிகளது மேல்மட்டத் தலைவர்கள் அவர்களது குடும்பத்தவர்களென இந்தப் புதிய தரகு முதலாளிய வர்க்கம் நிலம்-புலமென உருவாகிக் கொழுத்திருந்து தனக்கான நலன்களை அறுவடைசெய்ய யுத்தத்துக்கு அப்பாவிச் சிறார்களைப் பிடித்து அனுப்பிக்கொண்டிருந்து.


இந்த புலி ஆளும்வர்க்கத்தால் தமிழ் இனத்துக்குள்ளிருந்த மரபுரீதியான சுயாதீனக் குட்டிமுதலாளிய வர்க்க நலன்சார் முன்னெடுப்புகள்,அவர்களது வர்த்தக அபிலாசைகள் "தமிழீழத்தின் பெயரால்" இல்லாதொழிக்கப்பட்டபோது அத்தகைய வர்த்தகக் குடும்பங்கள் தம்மை இலங்கையின் பின்னும்,இராணுவத்தின் பின்னும் தகவமைப்பதில் தொடர்ந்து தோல்வியடைந்திருந்தன. கொழும்புத் தமிழ் வர்த்தகக் குடும்பங்களுக்கும் இதுவே கதி. புலி ஆளும் வர்க்கமானது இலங்கை இராணுவத்துடன் சமரசஞ்செய்து இவர்களை ஏமாற்றியது.தமிழ் நிலப் பரப்பின் வளங்களைக் குறிப்பாகக் கடல் வளத்தைக்கூடக் கடற் கடற் கண்காணிப்பு வலயம்-கட்டுப்பாடு-பாதுகாப்புவென மட்டுப்படுத்தித் தாமே அவ்வளத்தைச் சுவீகாரித்து இராணுவத்தோடு பங்குபோட்டுக்கொண்டது.

இத்தகைய வரலாற்றில் முள்ளிவாய்க்காலுக்குப்பின் உடைவுகண்ட புதிய தமிழ் ஆளும் வர்க்கங்களது கூட்டுக்கள் தம்மைத் தொடர்ந்தும் புலிவழியில் திசையமைப்பதிலும் "தமிழீழத்தின்" பெயரால் வளங்களைக் கொள்ளையடிப்பதிலும் பின்னடைவைக் கண்டபோது அந்த வர்க்கமானது கட்சியாதிக்கத்துள் புதிய தரகு முதலாளியக் குடும்பமான மகிந்தா குடும்பத்தோடு சமரசஞ்செய்ய கே.பி.யின் பின் அணிவகுத்துத் தேசியத் தலைவர் வாழ்வாதாகவும், கதைபின்னிக் காரியத்தில் இறங்கியது. கே.பி.அதனைத் திறம்பட வழி நடத்தியும் காட்டினார்.


புலியின் புதிய தரகு முதலாளிகள் கே.பி.யின் பின்னே அணிவகுத்து இலங்கை அரசைத் தமக்கான நலனுக்குரிய கூட்டாளியாக்கும் முயற்சில் கே.பி. சார் கட்சியின் பின்னே அணிதிருண்டதன் விளைவால் பாதிப்படைந்தவர்கள் தமிழ் இனஞ்சார் இனவாதக் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே.இவர்களைத் தூக்கி நிறுத்தவும்,நிதியிட்டுத்தமது நலன்களைப் பெறவும் புதிய புலிப்பணக்கார வர்க்கத்துக்கு அவசியமில்லை.தமிழ்தேசியக் கூட்டமைப்பானது இன்றைய நிலையில் அந்நியச் சக்திகளது லொபிக் குழுவாக இருப்பதுதாம் உண்மை.அந்தக்கட்சி எந்தவொரு தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின் பிளவையும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாதவொரு சூழலில் இக்கட்சி நடாற்றில் விடப்பட்டுள்ளது.


இன்றைய தமிழ்ப் பிரதேசப் பொருளாதார முன்னெடுப்புகளும் இவர்களை அம்போவென விட்டுப் புதிய தெரிவுகளின்வழி தம்மைத் தகவமைத்துக்கொண்டனர்.ஏலவே, புலிகளால் பழிவாங்கப்பட்ட தமிழ் மரபுவழிப்பட்ட தரகு முதலாளிகளுக்கு யாழ்ப்பாண இடப்பெயர்வு,மற்றும், வன்னிக்குள் புலிகளது முடக்கமும் அவர்களது மேல் நிலைத் தலைவர்களது புதிய தரகு முதலாளியவுருவாக்கம் புதிய திசையைச் சுட்டிக்கொண்டது.இதன்வழி புலிகளால் பாதிப்படைந்த இந்த மரபுரீதியான தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமானது இராணுவத்தோடும்,டக்ளஸ் கட்சியோடும் சமரசஞ் செய்வதில் வெற்றி கண்டனர்.டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் புலிகளால் பழிவாங்கப்பட்ட சிறுவுற்பத்தியாளர்கள் அவர்களது கூட்டுருவான தரகு முதலாளிய வர்க்கமானது புத்துணர்வுபெற்று தன்னைத் தகவமைத்தது.இவர்களது தலைவர் டக்ளஸ் என்பதும் இந்த அணியானது தமிழ்ப் பிரதேசமெங்கும் விரிந்து நிலைபெற்ற இராணுவ ஆதிக்கத்தின் நிர்வாக மற்றும் கட்டுப்பாடுகளோடு சமரசஞ்செய்யும் போக்குக்கு இராணுவ மேல்நிலை அதிகாரிகளது பெருஞ்சொத்தும் ஈடுகொடுத்தது.இலங்கை இராணுவத்தின் ஆதிக்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவ மேல்நிலை அதிகாரிகளது தங்கு தடையற்ற வர்த்தக முன்னெடுப்புக்கும் அதுசார்ந்து புலிகளாற் பழிவாங்கப்பட்ட பாரம்பரிய தமிழ்த் தரகு முதலாளிகளது கூட்டொத்துழைப்புக்குமான சமரசமானது தமிழ்ப் பிரதேசத்தின் அனைத்து வளங்களையும் ஒரு சில தமிழ்-சிங்களக் குடும்பகளது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்திருக்கிறது.


இதைத் தகர்த்து,சுயாதீனமான மூலதன நகர்வு,வர்த்தகம்,சந்தை என்பதெல்லாம் இனிமேற் சாத்தியப்படக்கூடிய சூழலை எதிர்ப்பார்த்திருந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பானது இருண்ட சூழலது தெரிவைப் புரிந்திருக்கிறது.இராணுவத்துடன் சமரசஞ் செய்துகொண்டு புதிய தரகு முதலாளிகள் அனைத்துப் பொருளாதார முன்னெடுப்பையும் இராணுவத்தின் ஒத்துழைப்போடு கட்டுப்படுத்தும் இந்தச் சூழலில் அவர்களைத் தாஜாப்படுத்தித் தம் பக்கம் இழுப்பதில்தாம்"இராணுவம் தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறத் தேவை இல்லை!"எனும் அரசியற் கோசமெழுகிறது. இதைவிடத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வேறு தெரிவில்லை- வழியில்லை.


இந்நிலைக்குள்,


1 : புலிகளது புதிய தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம் கே.பி.தலைமையில் மகிந்தா குழுமத்தோடும் அவரது கட்சியாதிகத்தோடும் சமரசஞ் செய்து கொள்ள,


2 : புலிகளால் பழிவாங்கப்பட்ட பாரம்பரிய தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் ஆதிக்கஞ் செலுத்தும் இராணுவத் தலைமையோடு சமரசஞ் செய்து,இராணுவ இருப்போடு தமிழ் நிலப்பரப்பிலுள்ள வளங்களைக் கையகப் படுத்திய காலம் ஒரு தசாப்தத்தைக் கடந்து விட்டிருக்கிறது.


இந்தப் புதியவகைப் போக்குகளால் தமிழ்த் தரப்பில் கட்சி வைத்து அரசியல் நடாத்தும் கட்சிகள் தமது இருப்புக்காக அரசியற் கோசங்களைத் தகவமைத்து அவற்றை மக்களின் நலமாகவும்,அரசின் நலமாகவும் வெளிப்படுத்துகின்றன.ஒரு கட்சியை ஆராய்வதற்கு அவர்களது கோசங்களின்-அஜந்தாவின் வழி முயற்சிப்பது கடைந்தெடுத்த முட்டாள்த்தனமாகும்.இக் கட்சிகள் பல்வேறுபட்ட வர்க்க மக்கள் கூட்டத்துள் நிலவும்-ஏற்படும் முரண்பாடுகளை எங்ஙனம் தீர்க்க முனைகின்றன-அத்தகைய சந்தர்ப்பத்துள் எப்படி நடந்துகொள்கின்றனவென்று பார்த்து ஆய்வது சரியானது.எனவே,இன்றைய புதிய தரகு முதலாளியக் குழுக்களுக்குள் நிலவும் முரண்பாட்டைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்ஙனம் எதிர்கொள்கிறது,அதன் இருப்புக்கான பின்புலம் என்னவென்று நோக்குவதே சரியானது.


இலங்கை இராணுவமானது, ஈராக்கில்,இலிபியாவில்,அவ்கானிஸ்த்தானில் ஏகாதிபத்திய இராணுவஞ் செய்யும் அதே பொருளாதாரக் கையகப்படுத்தலைத் தமிழ்ப் பிரதேசமெங்குஞ் செய்கிறது.ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேற வேண்டாமென ஈராக் மக்களில் சிறு பிரிவினர் ஆர்பாட்ட ஊர்வலஞ் செய்ததுபோல தமிழ்ப் பிரதேசத்திலிருந்தும் "இலங்கை இராணுவம் வெளியேறாக் கூடாது"என்றும் வருங் காலங்களில் மக்களின் ஒரு பகுதி ஊர்வலஞ் செல்லும்.


இராணுவ இருப்பால் இலாபமடையும் தரகு முதலாளிகள் இதை ஊக்குவித்து இதற்கு நிதியிட்டுச் செய்தே முடிப்பர்.அந்தளவுக்கு அவர்களிடம் ஊடகப்பலமும்,பணப்பலமும் உண்டு. இதையுணர்ந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தத் தரகு முதலாளியத்தைத் தாஜா செய்வதில் முந்திக்கொண்டு "இலங்கை இராணுவம் தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறத் தேவை இல்லை" என்று கோரிக்கையைப் பாராளுமன்றத்தில் வைக்க முனையும் அரசியல் இதன் விளைவே!


யுத்தத்தின் மூலம் வருமானத்தைக்கொண்ட இராணுவக் குடும்பங்கள்,தமிழ்த் தரகு முதலாளிகள் பெருந்தொகையான கருப்புப் பணத்தில் நீந்துகிறார்கள்.இராணுவக் குடும்பங்களிடமிருக்கும் பெருந்தொகையான கருப்புப் பணமானது யாழ்மாவட்டத்தின் காணிகளையும்-கட்டிடங்களையும் ரொக்கற் வேகத்தில் உயர்த்திக்கொண்டன.யாழ்ப்பாண மாவட்டதின் நிலங்களது இன்றைய விலைகளும்,கட்டிடங்களின் விலைகளும் அமெரிக்கக் கட்டுமானத் துறைக்கேற்பட்ட சரிவுக்கு நிகராகச் சரியாது. ஏனெனில், இவை கருப்புப் பணத்தால் கொள்முதல் செய்யப்பட்ட சில குடும்பங்களது செல்வமாகிவிட்டது.பங்குச் சந்தைப் பகுப்பாய்வு இதற்கு அவசியமற்றது.எனவே,இலங்கை இராணுவமானது தமிழ்ப் பிரதேசத்திலிருந்து விலத்துவதால் ஏற்படும் அசௌகரியம் பெரும்பாலும் இந்தப் புலிகளால் பழிவாங்கப்பட்ட தரகு முதலாளிகளுக்கென்பதும்,அவர்கள் இத்தகைய போக்கில் தமிழ்மக்களது சொத்தைச் சூறையாடுவதற்கு வர்த்தகத்தில் சுயாதிபத்தியம்,தனியார் மயப்பட்ட ஜனநாயத்துக்குட்பட்ட சந்தைப் பொருளாதாரத்தையும் நிராகரிப்பதில்தாம் அவர்களது புதிய தரகு முதலாளிய இருப்பே தங்கியுள்ளது.


இங்கு,இராணுவத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்த விரும்பும் தமிழ்ப் பிரதேசப் புதிய ஆளும் வர்க்கமானது புலியின் மாவீரர் நினைவுக்கான தார்மீகவுரிமைக்காக அப்பாவி மாணவர்களைத் தூண்டுவதும்,புலிப் பூச்சாண்டி காட்டுவதும்,மீளவும் புலிவழித் தேசியம் பேசி இராணுவத்தை நிலைப்படுத்தி நியாயத்தைச் சிங்களப் பேரினவாத அரசுக்கு வழங்கித் தமிழ்ப் பிரதேசமெங்கும் சிங்கள மயப்படுத்துவதும் இவர்களது இருப்புக்கானதாகவும் இருக்கின்றது.


இந்தச் சாபக்கேட்டை போக்குவதற்கான எந்தப் புள்ளியல் பரந்துபட்ட  மக்களது அரசியல் உருவாகவேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் சூழலை இல்லாதாக்கும் முயற்சியில் பலதரப்பட்ட குறுங் குழுக்கள் இயக்கப்படுகின்றன.அவை மேற்சொன்ன வகைத் தூண்டல்களை மக்கள் முன்னெடுப்பான கலகமென்றும்,மக்கள் எழுச்சியென்றும் வகுப்பெடுப்பதும்,சமீபத்தில் தமிழர்களது சுயநிர்ணயமானது பெரும்பான்மைச் சிங்கள மக்களைச் சாராதிருக்கும்போது இஃது, இன வாதம் என்றுரைப்பதும் இந்த புதிய தரகு முதலாளிகளது நலனின்பாற்பட்டது.ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி
06.01.2013

Keine Kommentare: