Sonntag, Februar 23, 2014

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு...

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம்.


கோடைகால ஜெனிவா இருக்கையின் தொடராக மூன்றாவது முறையாக ஜெனிவாவில் "திறவுகோல்" தேடுவதென்ற நம் அரசியற் சூழலில் திரு.நிலாந்தன் அவர்கள் ஜெனாவாவைக் கையாள்வதைக் குறித்தொரு கட்டுரையை"தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?"என்ற தலையங்கத்தோடு எழுதியுள்ளார்.எப்பவும், நான் இத்தகைய கட்டுரைகளை வெறுமனவே இணையத்தில் வாசித்துவிட்டுச் செல்வது கிடையாது.அத்தகைய கட்டுரைகளைப் படியெடுத்துப் பல முறைகள்வாசித்து முக்கியமானவற்றை மீளமீளப் புரிய முனைந்தே வாசிப்பதுண்டு.நிலாந்தன் கட்டுரைக்கும் இதுவே கதி.

இதிலிருந்து:

நிலாந்தன் தனது புரிதலில் பலவிடையங்களைக் குறித்துப் பேசுகிறார்.மனந்திறந்த எழுத்தாக அஃது இருப்பதுள் சில முக்கியமான தேடலைச் சுட்டிச் சித்தரித்திருக்கும் தருணத்துள் கட்சிகள் ,இயக்கங்கள்,மற்றும்தமிழ்டயஸ்பொறாவும்,சிவில்சமூகங்களும் குறித்த மதிப்பீட்டோடு செயற்பாட்டியங்கம்,மத நிறுவனங்களதும் பங்கையும்,கூடவே,அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படிப்பாளிகள்,புத்தி ஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள்,படைப்பாளிகள் குறித்தும்,அத்துடன் இத்தகையவர்களால் செயற்படுத்தப்படும் அல்லது உருவாக்கப்படும் அபிப்பிராயங்களின் பின்னே செல்லவைக்கப்படும் சாதரணச் சனங்களையும் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ய வேண்டியதை முன்வைத்து இயங்கங் கோருகிறார்.

நல்லது!

எனது பிரச்சனைகூட எமது மக்களது மனங்களில் கேள்வியாகவிரியும் மிகச் சாதராணக் கேள்வியே.

முள்ளிவாய்க்காலுக்குப்பின்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனை என்ன?

- தமிழீழமா?,

- வடக்குக் கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி அதிகாரக்கோரிக்கையா?

- ,இலங்கை அரசால் "பண்டுதொட்டு இனப்பாகுபாட்டு முறையின்பொருட்டு" தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்டும் இனவொடுக்குமுறையா?,

- இதுவரையான தமிழீழப் போராட்டத்தின்வழி இலங்கை அரசாலும்-புலிகளாலும் அழித்துக் குதறப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுக்கும் -உயிர் இழப்புகளுக்குமான நியாயம் கேட்கும் நிலையும்,இழக்கப்பட்டவைக்கான நஷ்டஈடும்,அபிவிருத்தியும் அதுசார்ந்த அரசியல் -பொருளாதார சுயாதிபத்யமுமா? -என்னதாம் எமது பிரச்சனை?


! அன்றி மகிந்தாவை சர்வதேச நீதிபரிபாலனத்தின்வழி தண்டிப்பதோ?



?: எதை முன்வைத்து ஜெனிவாவையும்,அந்நியத் தேசங்களையும் கையாள்வது?

உலக்தின் எங்கோவொரு புள்ளியில் இருக்கும் வளங்குன்றிய தேசமொன்றின் இனக்குழுவானது இன்றைய இந்தவுலகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமக்கானவொரு நலன்சார்ந்த நோக்குக்காக மட்டும் இந்த அந்நியத் தேசங்களைக் கையாளமுடியுமா?




திரு.நிலாந்தனே தமிழ்த் தேசியவினத்துக்குள் தற்போது உருவாகிய-திரண்ட பொருளாதார நெறி,அதன் இயக்கப்பாடு,நலன்கள் இதை முன்வைத்து அல்லது அதன் அடித்தளத்திலிருந்தெழும் கோரிக்கைகள் அதன் வழியிலான அமைப்புகள்-இயக்கங்கள் -கட்சிகள் குறித்துக் கவனப்படுத்தவுமில்லை. அப்படியொரு பொருளாதார வாழ்வே நமக்குக் கிடையாத தொனியில் வெறும் பொம்மலாட்ட ஓட்டுக்கட்சிகயாலும்,செயற்பாட்டியங்கங்களாலும்,அபிப்பிரயத்தையுருவாக்கும் சக்திகளாலும் நமக்கான கோரிக்கைகள்,அரசியல் சுயாதிபத்திய வாழ்வை, இனவொடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கானவொரு அரியல் தீர்வைக் குறித்துப் பேசுகிறார்.


இந்தச் சூழலிற்றாம் புலத்திலுள்ள ப(பி) ணப் புலிப் பினாமிகள் இலங்கையில் புதிய நிதியீடுகளைச் செய்கின்றனர்.இலங்கையின் புதிய தாரளவாதப் பொருளாதார நகர்வுள் இவர்கள் இணையுந் தருணத்திற்றாம் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பில் இராணுவத்துடனான கூட்டுக் கொள்ளையோடு வளங்களைச் சுரண்டியொரு புதிய தமிழ் உடைமையாளர்கள் உருவாகியுள்ளனர். இவர்களது நலனுக்கும், புலத்தின் புலிப்பினாமிப் புதிய நிதியீட்டாளுர்களுக்குமான முரண்பாடுகளும்,மக்கள் நலன் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கோரும் பாரம்பரிய சிறு உடமையாளுர்களுக்குமள்ள முரண்பாடுகளில் ஒரு தேசிவினமாகவெழும் தமிழ்பேசும் மக்கள்மீது செலுத்தப்படும் இனவொடுக்குமுறை-இனப்பாகுபாடுக்கான தீர்வுகள் குறித்த அரசியல் எழுகிறது.


இதன் முகம் மேற்சொன்ன உடமையாளர்கள்-நிதியீட்டாளர்கள்-புதிய முதலாளிகளது சர்வதேசத் தொடாபுகளோடிணைந்தே மேலெழுகின்ற நிலையில், நிலாந்தனின் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சக்திகள செயற்பாடுகள்,முற்றுமுழுதானதும் -பரந்து பட்டதுமான "மக்கள் நலன்"சார்ந்து இயங்க முடியுமா?அல்லது இந்திய வர்த்தக நலத்துடன் பிணைவுற்றுள்ளச் சிங்கள இராணுவவாதப் பொருளாதரப்போக்குள் ஒத்துழைத்தியங்கும்  தமிழ்ப் புதிய தரகு முதலாளிகளது இருப்புக்கான அரசியலுக்குள் பாரம்பரியமாகப் புரிய முனையும்"தமிழ்த் தேசிவினப் பிரச்சனையின்"மரபு சார்ந்த கோரிக்கைகள்,அரசியல் மற்றும் வியூகத்தின் தலைவிதி என்ன?


இந்த எதிர்வினையெழுதும் இந்நொடியில், உக்கிரையின் அமெரிக்க-ஐரோப்பிய அரசியல் நிகழ்ச்சிக்கேற்பத் தனது சுயாதீனத்தை இழந்து அவர்களது கையில் வீழ்த்தப்படும் சூழலிற்றாம் நாம் ஜெனிவாவைக் கையாள்வதில் முனைப்புறுகிறோம்.


எனவே,சிலவற்றைக் குறித்து ஏலவே பேசப்பட்ட வடிவில் மீளவும், பேசியாகவேண்டும்:


முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.இது முள்ளிவாய்க்காலில் தனது இராணுவப்பிரிவை-தலைமையை இழந்தபின் முன் தள்ளும் புதிய பொருளாதார நகர்வுகள்,இலங்கை அரசுடனான ஒப்பந்தங்கள்,ஒத்துழைப்புகள் யாவும் நமது தலைவிதியைத் தமது புதிய தேவைகளுக்கமையவும் -நட்புகளுக்காவும் மேலும்,மேலும் பல் வடிவங்களுக்குள் பிரிதியீடு செய்கின்றன.ஆனால், பாதிகப்பட்ட மக்களுக்கான எந்த அரசியல் நீதியும் இதுவரைச் சட்டபூர்வமாகக் கிடைக்கவில்லை.இந்த மக்களது இந்நிலையை வைத்தே தமிழ்ப் பொருளதாரச் சக்திகள் தமன்கானவொரு அரசியலை ஓட்டுக் கட்சிகளை முன் தள்ளி நகர்த்துகின்றனரென்பது முதலாவது பாலர் பாடம்.


புலம்பெயர்  தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும்(மேற்சொன்ன புதிய வர்த்தகர்கள்) இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.இதற்கு நிலாந்தனே சுட்டிக் காட்டிய 60 ஆண்டுகளான கொழுத்த அரசியல் -போராட்ட அநுபவமே ஆசான் என்பதும் உண்மை!இந்தப் பட்டறிவின்மீதான பாரிய கருத்தியற்றாக்குலேதாம் இனஇறு இவ் மக்களைப் புரட்டிப்போடுகிறது.இந்தப் பட்டறிவை நிர்மூலமாக்கும் அந்நியத் தேசங்களது லொபிகளேதாம் இம்மக்களின் கையறு நிலையான குறைந்தளவிலான அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூக வாழ்வியல் நெறியையும் திட்டமிட்டுச் செய்கின்றனர் அல்லது, அதையொட்டிய நகர்வை அழுத்தமாக இயக்குகின்றனர்.


பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக் காயாக்கியபடி  மக்களை அரசியல் -பொருளாதார வாழ்விலிருந்து துண்டித்தும், அவர்களையொரு ஒட்டுண்ணிச் சமூதாயமாக்கும் முனைப்பே சிங்கள இராணுவத்தின் இன்றைய முகாங்கள் வகைப்பட்ட நகர்வும் - கண்காணிப்பும்,பொருளாதாரத்துள்,வர்தகத்துள் இராணுவத் தலைமையின் செல்வாக்கும்ஆகும்!

தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தின் வளங்களைத் திருடிக்கொண்டே மக்களைத் தமது தேவைக்கேற்ப இயங்க அநுமதிக்கும் அரை இராணுப் பொருதார-அரசியல் வாழ்வில் மக்களை அரசியல் மயப்படுத்துதலென்பது பொருளாதாரச் சுயாதிபத்தியத்திலிருந்து எழும் தொழிற்சங்கள்,போராட்டங்கள் மூலமென்பது பொருளாதாரவாத்துள் ஒரு சிறு உண்மை.இதை நிலாந்தன் புரிந்திருக்க வேண்டும்.எனினும் இந்த அரசியல் மயப்படுத்தப்படாத சூழலைத் தனியே இயக்கங்கள்-கட்சிகள் மற்றும் படிப்பாளிகள்-படைப்பாளிகளுக்குள் தள்ளிவிடுதலென்பது 30 ஆண்டுகாலப் புலிகளது விதேசியவாதப் போராட்டச் செல்நெறியையும்,அவர்களது பாசிசவொடுக்குமுறையையும் தணித்துப் பேசுவதாகவும் ,அதேயளவு ஆண்டுகள் இராணுக் காட்டாட்சிகுட்பட்ட மக்கள்மீதான இலங்கை அரச பாசிசத்தின்  இக்கட்டான பௌதிக மற்றும்  உளவொடுக்குமுறை கூடவே, பொரளாதாரத்தாக்குதல் வியூகத்தையும் புறந்தள்ளுவதாவிருக்கிறது.



புலத்தைக் குறித்துப் பேசுவதானவிருந்தால்,அதாவது தமிழ் டயஸ்பொறாக் குறித்தென்று புரிக. சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் "பரந்தபட்ட மக்களது நலன்சார் போராட்டங்கள்,அரசியல் தீர்வு,இனப்பிரச்சனைக்கான ஆத்மார்த்தமான அரசியல்தீர்வுக்கான நகர்வை முன்நிபந்தனையாக்கி " இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிஅரசியல் அணிகளைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.இவர்கள் நிலாந்தன் பார்வைக்குட்பட்ட தமிழ் டயஸ்பொறாவல்ல!


நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும்  சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் லொபிக் குழக்கள் போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.

நாம் இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க  முடியுமா நிலாந்தன்?


புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு "மாற்றுக் கருத்து மந்தைகள்" கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன .



மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.இதுள், ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறா வலுவாக இருக்குமென்பதோ அன்றி இல்லாதிருக்குமென்பதோ பிரச்சனையல்ல!


இங்கே பிரச்சனையானது,  தமிழ்பேசும் மக்கள்சாhந்த பிரச்சனைகள், தீர்வுகள் யாவும் இத்தகைய ஜெனிவா- சட்டமன்றங்கள்-நீதிசபைகள் -பாராளுமன்றங்களுக்கு வெளியேதாம் இருக்கிறது.எனவே,நிலத்திலிருக்கும் மக்களைச் சுயமாக இயங்க அநுமதிக்கும் பொருளாத-அரசியல் வாழ்வைக் குறித்து நாம் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.

அப்படித்திருப்பும்போது தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தில் பூதாகரமாகவிருக்கும் இராணுவ முகாங்கள் மற்றும், பொருளாதார வாழ்வில் தமிழ்ப்பிரதேசமெங்கும்  இராணுவமும் அதன் துணைப்படைகளான குழுக்களின் மாபிய வழிப்பட்ட பொருளாதாரப் பொறியமைவுகமே நமது முதல் முரண்பாடுகளாக நம் விழிகள்முன விரியும்.



யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதையைக்  கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரசசார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு"ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்"எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன வியூகத்தின் வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் தமிழ் டயஸ்பொறா வகை மாதிரிக்குள் திணித்து இயக்கப்படுவதைக்குறித்து நிலாந்தன் புரிந்திருப்பார்.


இறுதியாக...

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த "தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென"ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதைத் தவிர்த்துவிட்டு, ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறாவைப் பலமானதாக்கி ,அந்நிய தேசத்தை நமக்காகக் கையாள்வதென்பது மேற்சொன்ன அந்நியச் சக்திகளது லொபிக் குழழுக்களது இருப்பையும் அவர்களது நகர்வையும் நமக்குள் உள்வாங்குவதாகவே இருக்கும்.இஃது, ஆபத்தானது.எனவே, நிலத்தில் -தாயத்தில் மக்களது சுயாதீனச் செய்பாட்டுக்கும்,வாழ்வுக்கும் அவசியமான பொருளாதாரச் சுதந்திரம் மற்றும், இராணு ஆதிக்கம் தவிர்க்கப்பட்ட அடிப்படையான எளிய ஜனநாயகச் சூழலே இப்போதைய அவசியம்.இதற்காகப் போராடுவதும் பரந்துபட்ட மக்கள் திரெண்டெழுவதும் மட்டுமேதாம் என்னைப்பொறுத்தவரை இன்று நம்முன் உள்ள ஒரே தெரிவு.இதன் அடிப்படையில் சிங்கள இராணு முகாங்கள் அகற்ப்பட்டு,அரசியல் ரீதியான சட்டவாத அரசின் ஆதிக்கமும் அதன்வழியிலான சுதந்தரமான சந்தைப் பொருளாதார நகர்வும்,உழைப்பும் தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைகொள்ளவேண்டும்.இதிலிருந்துதாம் தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல இலங்கையின் முழு மொத்த மக்களுக்குமான சட்டத்துக்குட்பட்ட அரசும்,ஜனநாயகம் உறுதிப்படும்.இது உறுதியாகதவரை தமிழ்பேசும்மக்களினதின் மீதான ஒடுக்குமுறைகள் விலகியவொரு அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கே இடமில்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்
23.02.2014
ஜேர்மனி

Keine Kommentare: