Sonntag, Februar 09, 2014

வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?

"எதுவரையில்?"  தொடரும்  எனது விவாதம்...

ழ்ந்து யோசித்தால், இலங்கையில் கட்சிகள்,தலைவர்கள்,மடாதிபதிகள்தம்  வரலாறு பரந்துபட்ட மக்களுக்கு எதிரானதாகவே இதுவரை இருக்கிறது!பொதுவாகத் தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை  அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னானவின்றுங்கூட  நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது- மூன்று இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்ட இத்தொடர் நிகழ்வில், தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?எனினும்,இன்றைய வணக்கத்துக்குரிய சோபித தேரர்தம் அரசியல் நகர்வு-கோரிக்கைகளை வெறுமனவேயொரு "பெரும்பான்மை இனத்துள் இருந்து ஒரு முற்போக்குக் குரல்" என்றும்,தனிப்பட்ட நல்ல மனிதரது கோரிக்கையென்றும் ,அரசியல் ஜனநாயகச் செயற்பாடகக் குறுக்விட முடியுமா?






அவரது கோரிக்கையில் எது முற்போக்கானது?அனைத்து அதிகாரமுடைய ஜனாதிபதிப்பதவியை ஒழித்தலா அன்றி மகிந்தாவுக்குச் சர்வேதச சட்ட எல்லையில் வைத்துத் தண்டித்தலா?தமிழ்பேசும் மக்களது -இலங்கைச் சிறுபான்மை இனங்களது மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது பொருளாதார மற்றும் நல்வாழ்வுக்கான அடிபடைகள் குறித்த நோக்கானதா? எது முற்போக்கானது?தீடீர் திடீரெனவெழும் தனிப்பட்டவர்களதும்,கட்சித் தலைவர்களதும்"நல்ல மனது"க் கோரிக்களை வெறுமனவே நம்பிக்கொள்ளும் பற்பல சந்தர்ப்பத்தைத்தாம் இந்தப் பொருளாதாரவாழ்வில் உலகம் பூராகவுமுள்ள  மக்கள் நம்பிக்கொள்கின்றனர்.


"பாதிக்கப்பட்ட மன நிலையிலிருந்து" தமிழர்கள், பெரும்பான்மை இனத்துக்குள்ளிருக்கும் முற்போக்குக் குரல்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதென்பதைக் குறித்து நாம் வரலாற்று ரீதியாகப் புரிந்திருக்கிறோமோ?





இலங்கையின் ஆளும் வர்க்கமானது தனது எஜமானர்களான காலனித்துவக் கொடுங்கோன்மை அரசுகள்-ஏகாதிபத்தியங்கள்-பிராந்திய வல்லரசுகளோடிணைந்து பாதிப்புக்குள்ளாக்கிய இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் வாழ்வைக் குறித்து என்ன வகையான மதிப்பீடுகளோடு நாம் பெரும் பான்மை இனத்தின் முற்போக்குக் குரல்களை அணுகும்படி-அரவணைக்கும்படி கோருகிறோம்?

இலங்கையில் அனைத்து ஓட்டுக்கட்சிகளது -இயக்கங்களதும் அரசியல் வரலாறானது  இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே இன்றும் நகர்கிறது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்புங்கூட இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.இதை மிகத் தறுவாகக் கடைப்பிடிக்கும் இலங்கையை மாறி,மாறி ஆளும் கட்சிகளானவை இதுவரை இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த முடிவுக்கும் வர முடியாதிருப்பதன் பின்னணி என்ன?வளர்த்தெடுக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை மனவியல்புக்கேற்ப அரசியல் -கட்சி நகர்வுகள் பெரும்பாலும் இலங்கை ஆளும் வர்க்க நலனின் பொருட்டென்பதற்கப்பால் நம்மை அண்டிய தேசத்தினதும் அரசியல் ஸ்த்திரத்தன்மை மற்றும் பூகோள அரசியல் நலன்களைப் பின்னி வைத்திருப்பதென்பதில் இன்றைய வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?

இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருந்தது.அதன் விளைவு முள்ளிவாய்க்காலில் எந்த  அரசியலறமுமற்ற கொடும் யுத்தத்துள் தமிழ் மக்களைச் சிக்கவைத்த சிங்கள அரசு முற்றும் பாசிசப் புலிகளது அரசியலானது எவர்களது நலன்சார்ந்திருந்தது-இப்போது அதன் மிச்சசொச்சங்களதும் அரசியலது தெரிவு எது?அந்நிய நலன்களது தெரிவாக இது இருக்கவில்லையா?பிளவுண்ட உலக நிதி மூலதனங்களது பிடியுள் சிக்குப்பட்ட இலங்கையினது வரலாறாக இவை இருக்கும்போது வண.பிதா சோபித தேரர்தம் கருத்துக்களைப் பரந்துபட்ட மக்களது தெரிவுகளாக வரையறுக்கும் அவசரம் அரசியற் தற்கொலைக்கொப்பானது.இத்தகைய தற்கொலையைத் தமிழ்பேசுபவர்கள் ஏலவே புலிகளை ஆதரித்தபடி செய்துவிட்டனர்.


இன்றைய பிளவுண்ட உலக நிதி மூலதனத்துக்கு இலங்கை வேட்டைக்காடாகப் பலப் பரிட்சார்த்த களமாக இருக்கிறது.நேட்டோ[NATO -wirtschaftliche und strategische Interessen ] தலைமையில் தம்மை முன் நிறுத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலனானது இருஷ்சிய மற்றும் சீனா ,இந்திய மற்றும் பிறிக்ஸ் கூட்டமைகளும்[BRICS  ] கூடவேயான சங்காய் கூட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குள் [The Shanghai Cooperation Organisation  ]முட்டிமோதும் தருணங்கள் இலங்கையின் இனப் பிரச்சனையுள் புலிகளை அழித்துபோது கூடவே பல்லாயிரம் அப்பாவி மக்களையும் அழித்தே மோதியது.இது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி, இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும்  இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை.இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில்"பெரும்பான்மை இனத்துக்குள் இருக்கும் முற்போக்குக் குரல்"முகமூடி அவசியமென்றால் அதையும் செய்யுங்கோ சாமிகளா!.ஆனால், இந்த முற்போக்குக் குரல் நமக்குப் புதில்லை!இவைகளைவிட மிக நேர்த்தியாக லங்கா சமசமாயக் கட்சி மற்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பெருந்தலைவர்களிடமிருந்தும் இன்றைய வாசு தேவ நாணயக்காரா வரையுமாக நாம் பார்த்தும் -கேட்டும் ஆச்சு!நடந்தது என்ன?

தனிப்பட்டவர்களதோ அன்றி ஒரு கட்சியினதோ, தலைவரினதோ விருப்புக்குத் தெரிவுக்கு வெளியிலேதாம் இனப்பிரச்சனைக்கான காரணிகளுண்டு.அது, பாராளுமன்றத்துக்கு வெளியிலேதாம் உண்டு.அதை, அணுகுவதில்தாம் மேற்காணும் நலன்களைக் குறித்து பேச்சு வருகிறது.இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் இருப்புக்கு -நலனுக்குத் தெரிவாகும் அரசியல் என்ன?அது கட்சிகளது புதிய நிதியூகத்துள் மாறிவிட்ட வர்க்க அரசியலது தெரிவுக்குள் இணைவுறும் தருணங்களென்ன?மகிந்தா குடும்பமோ அன்றிப் பட்டார நாயக்க குடும்பமோ இல்லை ரணில் குடும்பமோ வெறும் அரசியல் தலைவர்களில்லை.அவர்களின்று பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களென்பதில் நாம் காணும் அரசியலென்ன-தெரிவென்ன?இவர்களுக்கும்,ஆசிய-ஐரோப்பிய நிதி மூலதனத்துக்குமிடையிலான வர்த்தகவுறுவுகள் எத்தகையானவை?இவற்றைப் புரிந்துகொள்வதிலிருந்துதாம் நாம் காணும் இலங்கையின் சட்டவாத அரசின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும்.இங்கிருந்துதாம் புதிய அணிகளது கூட்டு,அவைகளால் முன் வைக்கப்படும் கோரிக்கைகள்,அவர்கள் மக்களைச் சொல்லி, அணி திரளச் சொல்லும் கட்சிகளுக்குப் பின்னால் தள்ளும் அரசியல் அமுக்கக் குழு மனப்பாண்மையானது இத்தகைய பின்புலத்தைத் தள்ளி வைத்துவிட்டு அகவிருப்புக்குட்பட்ட தெரிவுகளால் இவைகளை நாம் ஆதரிப்பதில்லை.இந்த விவாதம் நீள்கிறது.நான்தொடரும் விவாத்தில் மேலும் தொடர்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.02.2014

Keine Kommentare: