Sonntag, November 23, 2014

இலங்கையிலொரு ஆட்சி மாற்றம்:பொது ஜனாதிபதி வேட்பாளர் வடிவில்

மைத்திரிபால சிறிசேனவும் மேற்கும்: இரணில் விக்கரமசிங்கவைப் பிரதமாராக்கும்?

இலங்கையிலொரு ஆட்சி மாற்றம்:பொது ஜனாதிபதி வேட்பாளர் வடிவில்"அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்".

அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் அணிதிரண்ட இலங்கை ஆளும் வர்க்கங்கள் தற்போது மேற்குலக நவ லிபரல்களது "பொதுச் சொத்தைச் சூறையாடும் அழிவு" அரசியலுக்குடந்தையாக நகர்வது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானதாகவே மாறும்.இலங்கையிலுள்ள கடல் சார்ந்த வள நிலங்களைப் கைப்பற்றவும், அதுசார்ந்த வர்த்தகத்தை மேற்குலகத் தேசங்களோடிணைந்து கட்டமைக்கவும் தடையாகவுள்ள மகிந்தா அணி ஆளும் வர்க்க அதிகாரத்தால் பழிவாங்கப்பட்ட சிங்கள ஆளும் வர்க்க அணியானது போடும்"அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்" என்ற வாதமானது மகிந்தாவினது குடும்ப ஆதிக்கத்தின் பின்னால் அணிவகுத்த தமது சக வர்க்கத்தை ஓரங்கட்டுவதற்கான தெரிவே அன்றி,மக்களது -பரந்துபட்ட மக்களது உரிமையின்பாற்பட்டதல்ல.
இன்றைய இந்நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய மேற்குலக அரசுகள் மற்றும் அவர்களது லொபிகள்   இலங்கைச் சிறுபான்மை இனங்களைக்கட்டயாமாக"இணக்க அரசியலுக்குள்"திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன் எந்தத் தெரிவுக்கும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக்கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறு வடிவுள் உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!.இந்நிலையில் "எதிர்கட்சிகள்" எனும் கோதாவில் மேற்குலக எடுபிடிக் கட்சியான யு.என்.பி போடும் "பொது ஜனாதிபதி வேட்பாளர்"என்பது இலங்கையின் ஆட்சி மாற்றத்தைக் [Regime change ]கோருவதே தவிர சட்டவாத அரசுக்குரியதான நெறிகளை மையப்படுத்திய அரசொன்றின் தேவையின் பொருட்டான மக்கள் நலன் குறித்த பொருளாதார மற்றும் அபிவிருத்திக்குரிய அரசின் வடிவத்துக்கானதல்லவென்பதைச் சொல்லியாக வேண்டும்.

புலிவழிச் செல்நெறியூடாக நிகழ்த்தப்பட்டத் "தமிழீழ"ப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னான இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவே, புதிய குட்டி முதலாளிய வர்க்கத்தின் முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கை மேலும் நிலைப்படுத்தவேண்டிய தருணத்தைப் பிளவு பட்ட ஆசிய - மேற்குலக மூலதனத்தின் முரண்பாட்டில் தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.

இது ,தெள்ளத் தெளிவாகப் " பொது வேட்பாளரது முகத்துடன் " மேற்குலகக் கோரிக்கையாக இலங்கை மக்களது முகந்தாங்கும் அழகைக்  கவனியுங்கள்:

1. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைப்பேன்.
2. ரணிலுக்கு பிரதமர் பதவி.
3. சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள்
4.18 ஆவது திருத்தம் நீக்கப்படும்.
5. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். கூடவே ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்துக்கும் இடமளிக்கப்படும்.

* ரணிலுக்கு பிரதமர் பதவி.* [The Mont Pelerin Society- Influence:  Prominent MPS members who advanced to policy positions included the late Chancellor Ludwig Erhard of West Germany, President Luigi Einaudi of Italy, Chairman Arthur F. Burns of the U.S. Federal Reserve Board, and U.S. Secretary of State George Shultz. Among prominent contemporary political figures, former President Václav Klaus of the Czech Republic and acting politicians, such as former Prime Minister Ranil Wickremasinghe of Sri Lanka, former Foreign Secretary Sir Geoffrey Howe of the U.K., former Italian Minister of Foreign Affairs and Minister of Defence Antonio Martino, Chilean Finance Minister Carlos Cáceres, and former New Zealand Finance Minister Ruth Richardson, are all MPS members. Of 76 economic advisers on Ronald Reagan's 1980 campaign staff, 22 were MPS members.    ]

இன்றைய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவே ஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறதென்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நிலவும் அணிச் சேர்க்கை மற்றும் லொபி அரசியலும் அதுசார்ந்த எதிர்ப் புரட்சிகரவாதிகளான முன்னாள் இயக்க வாதிகளும்,புலிப்பினாமிகளும் இலங்கையின் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தோடு ஒத்த அரசியல் புரிவதுகூட ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்சி நிரலுக்குட்பட்டதாகும்.இது,அபாயகரமான அரசியல் மற்றும், இயக்கப் போக்கை இலங்கையின்  குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும் இயக்க-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களது உரிமைகளுக்கு நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்கிறது.

குறிப்பாகச் சிங்கள இனவாதத்தாலும்-ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத் தத்தமது தலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி பெறுகின்றனர்.இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சி அரசியலுள் மேலுஞ் சிதறுண்டு உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ் சுட்டுகிறது. இதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித் திரட்சியாகும் சூழலோடு உணரத்தக்கதே.அதன் மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ் சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.


இந்த உளவியலின் பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்த தந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதன் உச்சம்,அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பின்னால்திசை திருப்பப்பட்டு அது இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை இன்றைய உக்கிரைன் பாணியில் தகவமைக்கக் காத்திருக்கிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்

22.11.2014

Keine Kommentare: