Samstag, Juni 21, 2014

தேவதாசன் இனவாதப் பொது பல சேன ஞானசாகரா "தேரோ"வுடன்...

"தேவதாசன்-இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி"  குறித் துச் சுவிஸ் இரவியின்  கருத்தின் மீதான சில,  கேள்விகள்.

லங்கை தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசன் இனவாதப் பொது பல சேன  ஞானசாகரா "தேரோ"வுடன் நிற்கும் படத்துக்குச் சுவிச்சர்லாந்து இரவி அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.கீழே அவரது கருத்தை வாசிக்கலாம்.

கிட்டத்தட்ட இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணியினரை சிறு பிள்ளைகளாகவும்,அரசியலில்"வஞ்சகம்"அற்றுச் செயற்படுவதுமாகக் காட்டிவிடும் இரவி அவர்கள், இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணித்  தலைவர் தேவதாசன் மற்றும் கிழக்கு மாகாணசபைப் பேச்சாளர் ஞானம் போன்றோரது அரசியல் மற்றும் அதுசார்ந்த நகர்வுகள் குறித்தும் இத்தகைய கருத்தோடுதாம் இருக்கின்றாரா?

கடந்த பல தசாப்தாமாகச் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்குட்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது  அரசியல் பிரச்சனையுள் மிக நேர்த்தியாகக் குழிப்பறிப்புகளைச் செய்யும் அரசியற் தந்திரத்தை இவர்கள் செப்பனவே செய்து வந்திருக்கின்றனர்.தேவதாசன், ஞானம் போன்றவர்களும்,நிர்மலா -இராகவன் , கீரன் குழுக்களுமாக இலங்கை அரசைச் சார்ந்து மக்களை அண்மித்தபோதெல்லாம் இலங்கைப் பாசிச மகிந்தா அரசை சனநாயக அரசாகவே பேசியும் -எழுதியும் வந்தனர்.
இவர்கள்தாம் முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின் சில மாதங்களில் (டிசெம்பர் 2009 இல்)யாழ்ப்பாணஞ் சென்று மகிந்தாவுக்கு நன்றியும் ;இலங்கையில் சமாதானம் -சனநாயகம் மலர்ந்துவிட்டதென்றும் , "தமிழர்கள் தமிழ் தேசியவாதத்தையும் ;   தமிழர்கள் எனும் உணர்வையும் "விட்டொழித்து, "நாம் அனைவரும் இலங்கையர்கள் "என்றுணர்ந்து ,இலங்கையை முன்னேற்ற வேண்டுமென்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பிளந்தெடுத்து , அதைச் சிங்கள -இந்திய அரசுகளுக்குடந்தையாக மாற்றும் தந்திரத்துள் இவர்கள் முன்வைத்த "யாழ் மேலாதிக்கம்-மையவாதம்;யாழ்ப்பாணியம் -வேளாளியம் " போன்ற அரசியற் கருத்தாக்களின் பின்னே நிகழ்த்தப்பட்ட பிளவுவாத அரசியலின் வினையென்ன?

கிழக்கு மாகணத்தைப் பிளந்த கையோடு திருவாளர்கள் ஞானமும் , தேவதாசனம் கிழக்கு மாகாணத்துள் பிரவேசித்துப் பிள்ளையானை அணுகிச் சென்று செய்த அரசியல்பின்  "ஆய்வுகளை முன்வைப்பது"கோமாளித்தனமாகுமாகுமா இரவி?

இந்திய -இலங்கை அரசுகளது கயமைத்தனமான பிளவுவாத அரசியலுக்குப் பக்கப் பலமாகவிருந்து, அரசியல் செய்யும் இத்தகையவர்களைக் குறித்து இரவியின் இந்தப் பார்வையை எப்படிப் புரிந்துகொள்வது?இது புலிகளைத் "தேசியத்தின் பெயராலும் -அவங்கள் போராடுகிறான்கள் " என்று கண்மூடித்தனமாக ஆதரித்த மன நிலைக்கு ஒப்பானதில்லையா?
இவர்கள்  எங்ஙனம் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை மறுத்து மகிந்தாவின் தலைமைக்காக மக்களைப் பிளந்தார்களோ அதேயளவு மூர்கத்தோடுதாம் தமிழ்பேசும் மக்களைப் பிரதேச -சாதிய ரீதியாகப் பிளந்து இந்திய -இலங்கையின் அரசியற் சூழ்ச்சிக்கேற்பக் கருத்தாடினார்கள்.

இவர்களின் பின்னே மிகக் கெடுதியான அரசியல் சக்திகள் ஒழிந்திருந்தபடி இவர்களை வைத்து நகர்த்திய -நகர்த்தும் அரசியலானது புலத்தில் அநியாயத்துக் கு "மாற்றுக் கருத்தாளர்களையே" கருத்தியல் ரீதியாகவும்,செயற்பாட்டு ரீதியாவும் இலங்கைப் பாசிசத்தை நியாயப்படுத்தும் நிலைக்குத் தள்ளினர்.

இதன் பின்னால் இருக்கும் அரசியலை தள்ளி வைத்துவிட்டு, முகத்துக்கஞ்சி அவர்களை நியாயப்படத்தவே முடியாது.இவர்கள் தெளிவான அரசியல் இலக்குடையவர்கள்.அதையவர்கள் இதுவரை சாதித்தே வருகின்றனர்.இந்த அரசியல் ,பெரும்பான்மைச் சிங்கள இனவாத அரசியலுக்கும் ;இந்தியப் பிராந்திய அரசியல் நலனுக்கும்  உடந்தையானதென்பதே உண்மை!

இதை மறுப்பதுள் , இவர்களை முன்வைத்து  எந்தத்தெரிவுகளையும் வெறும் " மனவோட்டமாக" ச் சித்தரிக்க முடியாது இரவி.

இது ஆபத்தானது!

இவர்கள் எடுத்த முடிவும் -அரசியற்றெரிவும் தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையையே சிதைத்துச் சின்னா பின்னமாக்கியது.கருத்தியற்றளத்திலும் -அரசியல் கட்சி -அமைப்பு நகர்விலும் இவர்கள் மகிந்தா அரசினது அனைத்துப் பரிணாமங்களையும் ஆதரித்துப் பிரச்சாம் செய்து, தமது அரசியலை நகர்த்துபவர்கள்.

ஒருவகையில் இலங்கை -இந்திய அரசியல் லொபிகளால் வழி நடாத்தப்படுபவர்களென்பதை மறுத்து, இவர்களைக் காப்பது மீளவும் ,யாழ்ப்பாணஞ் சென்று "முசிலீம் மக்களை அரசு தாக்கவில்லை, அதை வைத்து அரசைப்பழி சுமத்தமுடியாது எனவே நாம் அனைவரும் முசலீம் -தமிழர்கள் என்பதைவிட இலங்கையர்களாக வாழும்போது இத்தகைய இனக்கலவரங்கள் நடக்காது " என்பார்கள்.

இதுதாம் இவர்களுக்கு இலங்கை அரசு சொல்லி க்கொடுத்து வகுப்பெடுக்கும் அரசியல் என்பதை புரிவதிற்றாம் எத்தனை சிக்கல்கள் இரவி?

-ப.வி.ஶ்ரீரங்கன்
21.06.2014

பின்னிணைப்பு: இரவியின் குரல் ! :

Ravindran Pa : இந்தப்படம் படாத பாடுபடுகிறது. இதில் நிற்பவர்கள் பிரான்ஸ் தலித் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஞானசார தேரருடன் இரகசியப் பேச்சு நடத்தக்கூடியவர்களோ அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராக துரும்பைத்தன்னும் அசைக்கும் மனவுணர்வு கொண்டவர்களோ அல்ல. இவர்களுடன் அரசியல் ரீதியில் முரண்பாடு கொண்டவன் நான். ஒருபோதும்; எதிர் விவாதங்களுள் எதிரியாக மாற்றப்பட முடியாதவர்கள். தலித் மனநிலை சார்ந்து இந்து மதத்தின் சாதிய உள்ளடக்கத்தை எதிர்த்து பௌத்தத்தை ஒரு எதிர்மறுப்பாக முன்நிறுத்துபவர்கள்.
இன்னொருபுறம் புலியெதிர்ப்பு வாதத்துள் முடங்கிப்போனவர்கள். அதற்குள்ளிருந்தும் யாழ் மேலாதிக்க வாதத்துள்ளிருந்தும் மட்டும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் கண்டடைந்தவர்கள் என்ற விமர்சனம் உண்டு. மறுத்தோடல், கலகம் என்பதெல்லாம் அவர்களிடமிருந்து அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள். (இதன்மூலம் தம்மை கவனப்படுத்த முனைபவர்கள் என்ற அவதானமும் என்னிடம் உண்டு.)
அவர்களின் தடாலடியான எதிர்மறுப்பு மனவுணர்வு இந்தப் புகைப்படத்தை தாமே முன்னர் இடையிடையே வெளியிட்டு கொண்டாட வைத்ததுதான் நடந்தது. அது இப்போ வினையாக வருகிறது. இதை யாரும் கண்டுபிடித்து பிரசுரித்ததாகவும், அவர்கள் பொதுபல சேனாவுடன் இரகசித்தார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பை நடத்துவது புலனாய்வு நடத்துவது கோமாளித்தனமானது. தடாலடிகள், கண்மூடித்தனமான எதிர்மறுப்புகள், அரசைப் பற்றிய போதியளவு வெளிப்படையான கறாரான விமர்சனங்களை வைக்காமை, விட்டுக்கொடுப்புகளுடன் நடந்துகொள்ளாமை (முக்கியமாக இலக்கியச் சந்திப்பின் சிதைவை கணக்கிலெடுக்காமல் போனதுக்கும் இந்தவகை மனவோட்டம்தான் காரணம்) என்பன பற்றி வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர்கள் அரசியல் பக்குவத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற செய்தி முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன்.

Kommentare:

Anonym hat gesagt…

முஸ்லிம் மக்கள் மீதான இன்றைய பௌத்த பேரினவாத தாக்குதலுக்கு தமிழர்களை முடிஞ்சுகாட்டும் வேலையில் சிலர் முகநூல் வழியெடுப்பதை அவதானித்தேன். சிறுபான்மையினங்களை தமக்கிடையே மோதவைக்கும் இலங்கை அரசின் சூழ்ச்சியை இவர்கள் இலகுபடுத்த முனைவது விசனம் மிக்கது. குறித்த புகைப்படம் இவ்வாறாக அணுகப்படும் நிலை இருந்தது. அதனால் வரும் பாதிப்பு தமிழ், முஸ்லிம் மக்கள் சார்ந்தது என்ற அளவில் அந்தப் படம் பற்றி எனது குறிப்பை எழுதினேன். அதில் எந்த நியாயப்படுத்தலும் இல்லை.

அந்தப் படத்திலிருந்த தேவதாசன், யோகரணட்ணம், அசுரா பற்றிய குறிப்புத்தான் அது. இது ஞானம் சம்பந்தப்பட்டதல்ல. ஞானம் திட்டமிட்டே வரையறுத்துச் செயற்பட்ட அரசியலுக்கு இவர்களது எதிர்மறுப்பு கலக அரசியலில் தாராளமாகவே வெளி இருக்கிறது. அவர்கள் தம்மை கவனப்படுத்துகிற அரசியல் தடாலடிகளுக்கு வெள்ளாள எதிர்ப்பு, தமிழ்த் தேசியத்துக்கு எதிராக நிற்பது, போர்நிறுத்தத்துக்கு எதிராக நிற்பது, சுயநிர்ணய உரிமைக்கு எதிராக நிற்பது, இலங்கை இராணுவத்துக்கு சான்றிதழ் வழங்குவது, ராசபக்சவுக்கு நன்றி தெரிவிப்பது... என மறுத்தோடிக் காட்டும் வேலையில் ஈடுபட்டனர். அவர்கள் மூன்று கால் முயல்களையே வளர்த்தார்கள்.

இதை நான் அப்பாவித்தனம் எனவோ, வஞ்சகமற்றுச் செயற்பட்டார்கள் எனவோ வரையறுக்க வரவில்லை. இது மோசமான அரசியல் தவறு. ஆனால் அடிப்படையில் பொதுபல சேனா ஞானசாரருடன் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சதிவேலையில் ஈடுபட்டார்களா என கண்டுபிடிக்கத் துடிக்கும் அவதிப்பாடுகளை நான் மறுக்கிறேன். (அதையே கோமாளித்தனமானது எனக் குறிப்பிட்டேன்.) அதனால் அடிப்படையில் அவர்கள் பற்றிய எனது மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அவர்களுடனான அரசியல் முரண்களை நான் இந்த மதிப்பீடுகளை மறைத்துக்கொண்டு பேசத் தயாரில்லை.

சிங்கள பேரினவாதம், பௌத்த மேலாதிக்கம், இனவழிப்பு என்பதையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. புலிகளின் கீழணியில் இருந்தவர்களைக்கூட போராளிகள், பெண்போராளிகள் என சுட்ட அவர்களுக்கு மிக நீண்ட காலம் பிடித்தது. புலியை கடாசுமளவிற்கு இந்த (புலி) எதிர்ப்பயங்கரவாதத்தை உருவாக்கிய அரச பயங்கரவாதம் பற்றி அவர்கள் பேசியது இல்லை. இதனால் இவர்கள் அரச ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகினார்கள்.

அந்தக் குற்றச்சாட்டை அல்லது விமர்சனத்தை அவர்கள் தமது நடைமுறை மூலமோ எழுத்து ரீதியாகத்தன்னும் எதிர்கொள்வதில்லை. எதையெடுத்தாலும் அவதூறு என்ற ஒற்றைச் சொல்லால் எதிர்கொள்வதே அவர்களது பாரம்பரியம். அரச பயங்கரவாதம் சார்ந்த மிக வெளிப்படையான கருத்துகள் அவர்களிடமிருந்து வந்ததில்லை. அவர்களிடமிருக்கும் கருத்தியல் ஆயுதம் வெள்ளாளர், யாழ் மேலாதிக்கவாதி, யாழ்ப்பாணத்தான், தமிழ்த் தேசியவாதி என்பவைதான். எடுத்ததுக்கெல்லாம் இந்த பொல்லோடு வருவது அவர்களது வழமை என்பதால் இந்தத் தாக்குதலிலிருந்து தப்ப அவர்களுடனான உரையாடலுக்கான வாசல்களால் நடந்துபோவதைக்கூட பலர் தவிர்த்தனர். இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்துவதை எதிர்த்து வைக்கப்பட்ட அரசியல் காரணங்களை அரசியல் வாதங்களினூடு எதிர்கொள்வதற்குப் பதிலாக, அதை எதிர்ப்பவர்கள் வெள்ளாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள் என பொல்லோடுதான் ஓடிவந்தார்கள்.

அரசை ஆதரிக்கும் (ஒத்தோடும்) அதில் பங்குகொள்ளும் ஞானத்தின் அரசியலுக்கும் இவர்களது அரசியல் பலவீனங்களுக்குள் இடம் இருக்கிறது. அரசை எதிர்க்கும் சோபாசக்தியின் அரசியலுக்கும் அதற்குள் இடம் இருக்கிறது. இந்த முரண்நிலை மோதலாகவன்றி விமர்சனங்களாகவன்றி, சமரசமாகவும் கேலிபேசி அரசியல் முரண்பாடுகளை கடந்து செல்வதாகவும், கூட்டாக தண்ணியடிச்சு அரசியல் சொதப்பலை செய்வதாகவும் காலம் போக்கிடும் ஒரு சந்திப்பு மையமாக இவர்களின் வெளி நகர்கிறது. இதை நான் அப்பாவித்தனமாக குறிப்பிடவில்லை. அரசியல் குறைபாடாகவே வரையறுக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதில் அரசைப் பார்த்து விரல் நீட்டுவதற்குப் பதிலாக, தமிழ் மக்களின் மனநிலையை குற்றஞ்சாட்டி அறிக்கை விட்டு கையெழுத்துகளை விதைத்தார்கள். அவை இன்று முஸ்லிம் மக்கள் மீது இறங்கும் பேரினவாத இடியை எதிர்த்து இதுவரை முளைக்கவேயில்லை. அவர்களின் அரசியல் வெளியின் சனநாயகச் செழிப்பு அவ்வாறுதான் உள்ளது. அவர்கள் அதை கேள்விகேட்டாக வேண்டும் என்பதை இந்த புகைப்பட விவகாரம் ஒரு செய்தியாக அவர்களிடத்தில் எடுத்துச் சென்றிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

- ravi

P.V.Sri Rangan hat gesagt…

இரவி,நீங்கள் சொல்வதெல்லாஞ்சரி.ஆனால் ,இக் கருத்தும் -கவனிப்பும் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னிணியினருக்குப் பெரிதும் பொருந்திவிட முடியாது.வேண்டுமானால் , சோபாசக்திக்குப் பொருத்திவிடலாம்.
ஆனால் ,தேவதாசனை முன் தள்ளி நகர்த்தப்படும் தலித்தரசியலானது மிகவும் வியூகத்துக்குட்பட்டதென்பதில் நான் ஒருபோதும் சறுக்கமாட்டேன்.

இதுள் ,தேவதாசனைப் பலிக்கடாவாக்கியவர்களது பெரும் பட்டியலே என்னிடம் இருக்கிறது.இவர்கள் ,இலங்கை அரசின் லொபிக் குழுக்களாகத் தம்மை உயர்த்திக்கொண்ட சந்தர்ப்பம் தற்செயலானதல்ல.அதற்கான தெளிவான வரலாற்று அரசியல் -அபிலாசைகளுண்டு.உங்களது கருத்தோடு இதுள் மட்டும் ஒத்துப் போக முடியவில்லை இரவி.