நான் அழிவதை'நான்' தீர்மானிக்க...
எந்தப் பதிலுமின்றி ஓரிரு தினங்களாக நான் மௌனித்திருந்தேன்.காலத்தில் வாழ்கிறேனாவென்பதும்,வரலாற்றின் வெளியில் என் பாத்திரமென்னவென்பதும்,எனக்குக் குழப்பமானதாகவே இருக்கிறது.இதுதாம் ஒரு நிலை.புரிந்துகொள்வதும்-புரிவதிலும்,புரியப்படாததற்கும் முந்திய நிலை முழுமைத்துவ முனகலாகவும்,அறிவின்மீதான-அறிதலின்மீதான நெருக்கடியாகவும் இருந்திருக்கிறது.நான் இருக்கிறேன்.ஆனால் இல்லாதிருப்பதால் மட்டுமே இந்த 'நான்'இருந்தாகவேண்டும்.இது சிக்கலை மீளவும் தந்துகொண்டேயிருக்கிறது.முழுவதுமான மனிதத்துவ மாட்சிமைகள் மனத்தின் வெளியிலுலாவும் மென்மைமறுத்த உணர்வுக்கோர்வையில் வேறொரு மனிதனைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்க ,இந்த 'நான்'இருக்கிறேன்.முடியுந்தறுவாயில் 'நான்'எனக்கு முன் அழிந்து-என் இருப்பை அசைத்திடும்போதும் 'நான்' இருந்தபடியேதாம்.
எனக்குள் நான் எடுக்கும் சுதந்திரத்துக்கான முடிவானது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்குமா?வாழ்வின் தேர்வுகளுக்கும் சுதந்திரத்துக்குமான 'வாழ்வுக் கடைந்தேற்றத்துக்கும்' தொடுப்புத்தாம் என்ன?சரியாகச் சொன்னால் மனிதவாழ்வானது மனிதரைக் கடந்துவிட்டது.காவுகொள்ளத்தக்க கனவுகளுக்கும்,வளமற்ற விருப்புக்களுக்கும்'தோற்றுவாய்'வேறொரு வகையினில் என்னுள்ளே தோன்றி மறையும்போது எனது இருப்பினது அத்தியாவசியமற்ற மனிதத் தேர்வானது என்னை முழுமையாக விழுங்கி விடுகிறது.எனக்கு முன் இருப்பதெல்லாம் திமிர்த்தனங்களின் கூட்டுக் கலைவைதாம்.இது என் மனதைக் காவுகொள்வதால் 'நான்' அழிந்து போவதும்-முகிழ்ப்பதும் வரலாற்று மாய்மாலம்.
அறிவின் பிரச்சனையே தற்கொலைதாம்!
எதைப்பற்றிக்கொண்டு எழுந்து நிற்பது.திமிர்த்தனமான-எதேர்ச்சையான இந்தப் பேரண்டம் எந்த உறுதிப்பாட்டைத் தந்தது- இந்த ஊனப்பிறவிக்கு தந்துகொண்டது? தயங்கிக்கொண்ட மனமும்,தவித்துத் திரியும் உணர்வுத் தொடர்ச்சியும் வரலாற்றோட்டத்தில் எந்தப் பாத்திரத்தை எய்கிறது? நிலவுகின்ற மலட்டுத்தனமான இந்தப் படுபயங்கர'விருப்புறுதி' வெறும் பிம்பத்தை மட்டும் வாழ்வாக்கிவிட்டால் -சுதந்திரமென்பது மரணமா?சடுதியில் முடிகின்ற பயணத் தொடர்ச்சி பண்டுதொட்டு நிலவுகின்ற ஊழீயாகும்போது 'நான்'என்பதன் சுட்டலுக்கு ,இருப்புண்டா-பொருளுண்டா?
என்னை உருவாக்க 'நான்'துணையின்றி முடிந்திருக்காது.என்னுள் அமுங்கும் 'நானை' நானே தீர்மானிப்பதால் உணர்வுத் தடத்தில் புதியவொரு உலகை நானே தயார்படுத்துகிறேன்.இதனால் எனக்குச் சிக்கல்கள் வருவதில் என் இருப்பைக் கவனிக்க 'நான்' வருகிறேன்.இதுவே என்னை அழிப்பதிலும் 'நான்'எனச் செயற்படுகிறது.
இந்தப் புலத்தை எனக்காகச் செய்வதில் என் சுதந்திரமே இயங்கிக் கொள்கிறது.இதன்போது உலகத்தை நான் படைக்கிறேன்.அல்லது தூண்டப் படுகிறேன்!எப்படி உருவாக்கிக் கொண்டாலும் எனக்குமுன் விரிந்துகிடக்கும் அண்டம் வரலாற்றுத் தொடர்ச்சியாக ,என்னைக் கட்டிப்போட்டுள்ளது.பொருள் வாழ்வைப் புலப்படுத்தும்போது 'நான்' நேர்மாறாகக் காரியஞ் செய்கிறதே,இதுதாம் என்னை உருப்படவிடுகிறதில்லை.
புறவுலகில் ஒரு அங்கமாக உலாவரும் எனக்குச் சுதந்திரமுண்டா?
சூழ்நிலைகளால் உண்டாக்கப்படும் பொருளுலகமும்,அதன் சமூகக்காரணிகளும் தீர்மானிக்கின்ற உணர்வுக்கூட்டத்தால் 'நான்'முடிவற்ற சூறாவளியாகிறது.இந்தப் பெருநெருக்குதலில் எஞ்சிக்கொள்வதற்கென்றொரு அனுமானம் புலப்படாதபோது,எனக்கு-நான் தடை.இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தெரிந்த பாதை-என்னளவில் தற்கொலைதாம்.இது எனது சுயத்தின் மதிப்பீடாக இருப்பதில்லை!மாறாக என்னைத் தூண்டுகிற பொருள் வாழ்வும்,புறநிலைகளின் உந்துதலுமே -என்னைத் தீர்மானித்துக்கொள்ள 'நான்'பலவீனமாக இருந்திருக்கிறேன்.
எனக்கு இதன் தாக்கத்தால் விமோசனமில்லை!ஆகையினால் எனது சாரமாக 'நான்' வருவதில் சிக்கல்.நான் அற்ற 'நான்' பொய்யன்.பொய்யானது மெய்மையை அழிக்கிறது.அழிவே இறுதியில் மெய்மையைக் காக்கிறது.
இன்னொரு விதத்தில் கூறினால் மனிதர்களுக்கு(எனக்கு) முந்தியது எதுவுமேயில்லை.வெறுமையேதாம் எனக்குமுன் கருத்தரித்தது.எனது இருப்பே எனக்கு அடிப்டையாக வருவதும்,அதையே 'நான்' அடிப்படையில்லாத அடிப்படையாக்கி விடுகிறேன்.இந்த மகாகெட்டித்தனம் எனக்கு வழிகாட்டாது.நிச்சியமாக என்னைப் படுகுழியில் தள்ளிவிடப்போகுமிந்த 'நான்' சுதந்திரத்தைப் பயன் படுத்தமாட்டேன்.ஏனெனில் அது என்னிடத்தில் இல்லை.எனவே எனக்கு -நான் அடிமைதாம்.இந்த இழி வாழ்வு ஏற்புடையதில்லை.நான் அழிவதை'நான்' தீர்மானிக்க மௌனித்திருங்கள் மற்றைய 'நான்கள்'.
ப.வி.ஸ்ரீரங்கன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen