Mittwoch, Dezember 26, 2007

தைப்பொங்கல்!

ஒரு செம்பு சுடு தண்ணீர்.



மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது.ஊரிலிருந்துபோதும்சரி,இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்தபின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழிமீதான விருப்பு பன்மடங்காகிச் சென்றுகொண்டேயிருக்கு.சின்ன வயது, அம்மாவின் சேலைத் தலைப்போடு ஒன்றித் திரிந்தபோதெல்லாம் மார்கழியில் வரும் திருவெம்பாவைச் சங்கொலியும்,அதிகாலைத் தேவாரமும் என்னைத் தாலாட்டியிருக்கிறது.விடியலில் எழும்பித் திருநீறு வேண்டுவதற்காகத் திருவெம்பாவை பஜனைக்கூட்டத்தை நோக்கி ஓடுவோம்.எனது தம்பி மார்களும் நானுமாக இந்த மார்கழி மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கிறோம்.இந்தப் பாசம் வரும் தைப் பொங்கலை நோக்கியே இருந்திருக்கிறது.


தைப்பொங்கல்!


இந்தப் பொங்கலில் எங்கள் புளியங்கூடல் சந்தி மிகவும் களைகட்டிச் சிரித்து நிற்கும்.கனகசபை மாமாவின் கடையில் மான்மார்க் வட்டப்பெட்டி வெடியும்,வாணங்களும் ஒரு பெரிய அலங்காரமாக அடுகப்பட்டிருக்கும்.பொங்கல் பானைகளெல்லாம் குவிந்திருக்கும்.ஊரே பொலிவுற்றுக் கிடக்கும்.அம்மா புதிய அடுப்புக் கல்லை மண்ணில் செய்து காயவைத்திருப்பார்.அப்பர் பொங்கலுக்காவே எங்களுக்கு உண்டியல் போடுவதற்கு நிறையக் காசுகள் தருவார்.நாங்கள் வெடிகள் வேண்டுவதற்காகவே உண்டியலிடுவோம்.பொங்கலுக்கு முந்திய இரவில் விடப்படும் வாணத்துக்காகவே நாங்கள் கனவுகளைக் காணத் தொடங்குவோம்.இப்படிப் பொங்கலுக்கான ஒரு புதியவுணர்ச்சி எங்களுக்குப் புதுவுலகாக எங்கள் கிராமத்தை மாற்றுவது வழமை.



ஊரெல்லாம்கூடிப் பொங்குகிற இந்தவொரு நிகழ்வு மார்கழி மாதத்தை மனதுக்கு விரும்பியவொரு மாதமாகவே எனக்குப் பழக்கப்படுத்தியது.இந்த மார்கழியில் ஜேர்மனியும் இவ்வளவு குதகலாகமாகி சிறுப்புற்றுக் கிடக்கிறது.நத்தார் பண்டிகையோடு இந்த நாடே பூரித்துக்கிடக்கிறது.தேங்கிக்கிடந்த சந்தையெல்லாம் பெருநீர் கண்டு உடைபடும் கண்மாய்க் கரையைப்போல் உடைப்பெடுத்து நுகர்வோரால் நிறைந்து வழிகிறது. இந்த வூப்பெற்றால் பெருநகரின் அங்காடிகள் நிறைந்த பகுதியில் மெல்ல நடந்து கொள்ளும்போது ஊரின் ஞாபகம் உள்ளத்தைத் தாக்கியது.மெல்லச் சிந்தும் விழி நீர் அந்த மண்ணைச் சுற்றியே தொடரும் உணர்வின் ஒரு குறிப்பாய் நிலத்தில் வீழ்ந்து வெடிக்கிறது.மௌனித்திருப்பதற்கான எந்த மந்திரமும் என்னிடமில்லை.இப்பேதெல்லாம் தேசத்தின் கதை எப்படியோ போய்விட்டது!


எங்கள் ஊரின் மாரி மழையில் தோட்டம் துரவெல்லாம் மூடுண்டு போவதும்.பயிர் அழிவதும் அப்பப்ப நடப்பது.இந்த மாரிகாலத்து மார்கழியில் ஊர் பெருக்கெடுத்து ஓடும்.நீர் வடிந்தோடுவதற்கு அப்போதெல்லாம் பாரிய மதவுகள் குறைந்த எங்கள் கிராமத்தில் வெள்ளம் பல நாட்கள் தேங்கி நிற்கும்.வீதியைப் பிளந்து நீரை மறுபக்கம் ஓட வெருட்டுவார்கள் ஊர் பெரியவர்கள்.எங்களுக்கு கடலிலிருந்து வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுவரும் மீன் குஞ்சுகளைப் பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.நாங்கள் இப்படி நீராடி மகிழ்ந்த ஒரு வருஷம் 1970.அப்போது எங்கள் ஊருக்கு வாந்திபேதி வருத்தம் வந்து தொலைய,ஊரெல்லாம் பதட்டம்.கோலரா நோய் பரவியதாகப் பறையடித்துச் சொன்னார் நல்லான்.எங்கள் ஊரில் அப்போதெல்லாம் இப்படித்தான் செய்திகள் ஊருக்கு வரும்.நல்லான் அப்பு கிராமச் சங்கத்தில் உறுப்பினர்.அவர்தான் எப்பவும் எங்களுரின் செய்தித் தொடர்பாளர்.எங்களுக்குச் சந்தோசம் கரை புரண்டோடியது.எங்கள் பள்ளிக்கூடத்துக்கு காலவரையற்ற மூடுவிழா.


ஒவ்வொரு பகலிலும் பாடசாலைக்குள் வைத்தியர்களும்,பொலிசும் இருப்பார்கள்.அவர்கள் மருந்து கொடுப்பதும் ஜீப் ஓடுவதாகவும் இருப்பார்கள்.


ஒரு நாள் காலை நான் வீட்டிலிருந்து ரோட்டுக்கருகிலிருந்த பாடசாலை நோக்கி நடந்தேன்.


ஜீப்பையும்,ஊசிபோடும் ஆட்களையும் வேடிக்கை பார்ப்பதற்கு ஆர்வமாகி இருந்தது.என்னைக் கண்ட துப்பாக்கிதாங்கிய பொலிசார் இருவர்"தம்பி இங்கே வாங்க"என்றார்கள்.என்னையழைத்தவரின் தமிழ் கொச்சையாக இருந்தது.அவர் என்னிடம் "தம்பி உணு வத்துறு கொண்டு வாறீங்களா"என்றார்.மற்றவர் சுடுதண்ணி என்றார்.எனக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும்.எனது தந்தையார்.பலாங்கொடையில் கடை வைத்திருந்தவர்.அவரது கடை 1967 இல் நட்டத்தில் போக ஊரில் சிறு விவசாயி ஆகியிருந்தார்.அப்பரின் மடியில் தூங்கும்போதெல்லாம் அப்பர் பலாங்கொடைக் கதைகளையும்,சிங்களத்தில் தானங்களையும், சிறு சிறு சொற்களையும் சொல்லித் தருவார்."உணு வத்துறுவும்"நான் அறிந்த வார்த்தைகளில் ஒன்றாய் இருந்தது.



இப்போதெல்லாம் யோசிக்கிறேன்.அன்றைக்குப் பொலிசைக் கண்டு பயம் கொள்ளவில்லை.அவர்களிடமிருந்த துப்பாக்கியும் அச்சம் தரவில்லை.எனக்கு அதன் உருப்படி பார்ப்பதற்கு ஆசையாய் இருந்தது.அம்மாவிடம் "சுடுதண்ணியாம் பொலிசுக்காரன்கள்"என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கி பற்றிய கேள்விகளைத் தொடுத்தேன்.அம்மா சுடுதண்ணியை அடுப்பில் வைத்து விட்டுச் செம்பைத் தேசிக்காய்த் தோலால் சாம்பல் சேர்த்து மினுக்கினார்.கூடவே சொன்னார்.துவக்கு ஆட்களைச் சுடும்.துவக்கு வைச்சிருக்கிறவர் ஒருத்தருக்கும் பயப்பட மாட்டார்.கள்ளர்கள் வீட்டுப்பக்கம் வரமாட்டார்கள் என்றும் சொன்னார்.


அன்று அம்மா சொன்னதன் அர்த்தம் பின்னாளில் அதைத் தாங்கியபோது புரிந்தது.துப்பாக்கி இருக்கும்போதும்,ஊருக்குள் உலாவரும்போதும் ஊரிலிருக்கும் எல்லோரும் எனக்கு மீன் குஞ்சுகள் போலவும்,காலுக்குள் நெளியும் மண் புழுப்போலவுமே தெரிந்தது.


அன்றைய சுடுதண்ணிக்குப் பின்னால் ஒரு சின்னப்பொறி உள்ளத்தில் கிடக்கிறது.அந்தப் பொறி இன்றுவரையும் இனிக்கிறது.


பொலிஸ்காரர்களில் அழகாய்த் தமிழ் பேசியவர் தமிழராகத்தான் இருக்கவேணும்.அவர் "டேய் அதைத் தொடதே!"என்று என்னை உறுக்கினார்.மற்றவர் கொச்சைத் தமிழ்பேசினாலும் மரியாதையாய் அன்று உரையாடியுள்ளார்.இன்றும் அதை உணரத்தக்கதாகவே இருக்கிறது."தம்பி வாருங்கள்",துவக்கைத் தொடாதீர்கள்!"என்றார்.எனினும் துவக்கைத் தொடுவதற்கு அநுமதித்தார்.பின்பு ஐம்பது சதத்தைத் தந்து,"அதோ அந்தக் கடையில் போய் ஐம்பது சதத்துக்கு சொக்லேட் வேண்டிக் கொண்டு வாங்கோ" என்றார்.


எங்கள் வீட்டுத் தெருவில் ஒரேயொரு பெட்டிக்கடைதான் இருக்கிறது.அது இராமனின் கடை.ரொம்ப ரொம்ப இருமியபடியேதான் அவர் கடை நடத்தியது இன்றும் ஞாபகம்.நாங்கள் இராமரின் கடையில்தான் பொரியுருண்டைவேண்டுவது,தோடம்பழ இனிப்பு வேண்டுவது.அம்மாவிடம் வேண்டும் ஐந்துசதமும்,பத்துச் சதமும்தான் இராமருக்கு வருமானம்.அப்பப்ப அவரிடம் அழி இரப்பர்,பென்சில்,இரட்டை றூள் கொப்பி,சிலேற்றுப் பென்சிகளையும் வேண்டுவோம்.இப்படிப் புதுக் கொப்பி,பென்சில்,அழி இரப்பர்களை வேண்டும்போது பள்ளிக்குப்போவது விருப்பமாக இருக்கும்.புத்தம் புது அழி இரப்பரை மோந்து,அதன் வாசத்திலொரு மகிழ்ச்சி எனக்கு வருவதையும் நான் அநுபவித்திருக்கிறேன்.கொஞ்சக் காலத்தில் அந்த இரப்பர் என் காற்சட்டைப் பையில் இருக்கும்.


இன்றைக்கு இந்த மண்ணில் இத்தனைகாலம் வாழ்ந்த மனிதர்களின் சுவடே காணக்கிடைப்பதில்லையாம்.எல்லோரும் இறந்தும்,இடம் பெயர்ந்தும் நாடோடிகளாகவும் தொலைந்து போய்யுள்ளார்கள்.போனவர்கள் போனவர்களாகவே இருக்கப் புதுப்புதுத் தலைகள் இந்தத் தீவுக்குள் கிடக்கும் மிச்சசொச்ச செல்வங்களைத் திருடிக்கொண்டிருக்க காலம் போகிறது.


நான் வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைத்தேன்.சோடினைகளைச் செய்தார்கள் சின்னவர்கள்.மரத்துக்கடியில் பரிசுப்பொருள்கள் வருமென்பது அவர்களின் கனவு.இந்தப் பண்டிகைகள் மனதுக்கு மகிழ்வைத் தந்திருந்தாலும் இறை நம்பிக்கையென்பது வேறு வகையானது.இந்தப் பொழுது இரம்மியமானதாக இருக்கலாம்.உலகத்தின் பலபாகத்தில் குருதிசிந்தப் பசியுறும் மானுடம் நோய்கும் நொடிக்கும் மரித்த காலம்போய், யுத்தத்தால் அழிவுற்றுச் செல்கிறது.தத்தம் வீடுகளில் பண்டிகைகளைக் கொண்டாடும் இவர்களது விருப்பம், தொடரும் யுத்த முனைப்புகளால் சிதறடிக்கப்படுவதும்,விருப்பத்தையுணரும் உடலும் உயிரையிழக்க நமக்கு எந்த மாதமும் காலப் போக்கில் மகிழ்வைத் தருவதற்கில்லாமல் போகலாம்.


இராமர் இரண்டு கையும் நிறையச் சொக்லேட்டுக்கள் தந்தார்.


கைகள் நிறைந்த சொக்லேட்டுக்களோடு அந்தப் பொலிஸ்காரரை அண்மித்து, அவரிடம் அவற்றை ஒப்படைக்க முனைந்தேன்.அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்:"எல்லாம் தம்பிக்குத்தான்"என்று, மழலைத் தமிழில் சொல்லிச் சிரித்தார்.எனக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது.தமிழ் பொலிஸ்காரர் "டேய்" என்றார் நான் வீடு நோக்கி நடக்க முனையும் போது, செம்பைத் தந்து, இன்னொரு செம்பு சுடுதண்ணீர் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.நான் காற்சட்டைப் பைகள் இரண்டிலும் சொக்லேட்டுகளைத் திணித்துச் செம்பை வாங்கினேன்.அவர் எனக்குச் சொக்கா தரவில்லை.இது எனக்கு எட்டுவயதில் அநுபவமானது.இரண்டு பொலிக்காரர்கள்.இருவரிடமும் இரண்டு வகை மனதிருந்திருக்கும்.இப்பவும் இந்த மகிழ்வை எனது குழந்தைகள் நான் கொடுக்கும் சில்லறைகளில் மகிழ்வார்கள்.ஆனால் மீன் குஞ்சுகளையும்,மாரித் தவக்கைகளையும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு நாம் கண்ட ஆனந்தம் இவர்களுக்கிருப்பதற்கில்லை.


குண்டுகள் வெடிக்கத் தலையில் கைவைத்துக் கொட்டும் குருதியைத் தடுத்தபடி, வானத்தைப் பார்க்கும் சிறுவர்களை இலங்கைத் தேசம் இன்று உருவாக்குகிறது.


அன்று, தைப்பொங்கல் வெடிகளில் மகிழ்ந்த சிறுவர்களை, இன்று குண்டுகளால் அச்சப்படுத்தும் ஒரு தேசமாயும்,சொக்லேட் தந்த பொலிசே இன்று தோட்டாவால் துளைக்கும் எதிரியாகவும் போனது எதனால்?

ப.வி.ஸ்ரீரங்கன்

Keine Kommentare: