சொந்த மக்களது ஜனநாயக உரிமையை மறுத்த அராஜகவாதப் புலிகள் தமது அழிவோடு மக்கள் விடுதலைப் போராட்டத்தையே தவறாகப் புரிவதற்கான முறைமைகளையுஞ் செய்தபடியே மரித்துப் போகிறார்கள்.அந்நியத் தேசங்களுக்குக் கூஜாத் தூக்கிய தமிழ் ஆளும் வர்க்கம், தமிழ்பேசும் மொத்த மக்களையும் புலிகளைவைத்து மொட்டையடித்த ஈழத்து அரசியல் வரலாற்றில் இனியும் அதே தோரணத்தில் இன்னொரு துடைப்பம்...
ஈழத்தமிழர்களுக்காக-அவர்களது இன்றைய இழி நிலைக்காக இனிமேற்றாம் ஆங்கிலத்தில் எழுதி,மேற்குலகத்தை-அந்தத் தேசத்து மக்களை அணுகுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.மிகப் பெரும் பாசிசப் புலி இயக்கம்-பெரும் வலைப் பின்னலுடன்கூடிய சர்வ வல்லமையுடைய புலி இயக்கம் தன்னால் சரிவரச் செய்யமுடியாத அரசியலைச் சில தனிநபர்களால் ஈடேற்றிவிட முடியுமெனும் தனிநபர் முனைப்புகள், உலக ஏகாதிபத்தியங்களிடம் எமது பிரச்சனை குறித்துக் குறிப்புணர்த்த முனைகிறார்களாம்.ஏனெனில், இந்த மேற்குலகத்தினது -நமது அவலம் தெரியாத-அவர்களது இருண்ட நிலைக்கு இவர்கள் இயம்புவது ஒளிக்கற்றைகளாம்!
"மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்-தேசியத் தலைவர்",பன்னாடைகளெல்லம் பண்ணிய போராட்டத்தின் இன்றைய நிலைக்கு, இனித்தாம் சரியான செல் நெறி வழங்கப் போகிறார்களாம். உலக அரசியல் அரங்கில் முற்போக்குச் சக்திகளைக் கேவலமாகக் கருதிய புலிப் பாசிஸ்டுக்கள் இன்று, புதிய கதையோடு தமது தப்பை மற்றவர்களைத் துரோகியாக்கி அவர்களது தலையில் கொட்டித் தப்பிக்கின்றனர்.இந்த இலட்சணத்தில் இனிமேலும் மேற்குலக எஜமான்கள் மூலமாகத் தமிழருக்குத் தீர்வு தேடும் மகாப் பெரிய மூளைகள், "தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகனின் வழி காட்டலில் கூஜாத் தூக்கியே தீரவேண்டுமாம்.இதை ஆங்கிலத்தில்,பிரஞ்சில்,டொச்சில்,இன்னுமேன் ஸ்பானிஸ் வரை மொழிமாற்றிச் சொல்லணுமாம்.
அதாவது:"எங்கள் தலைவர் மேதகு வே.பிரபாகரன்,எங்கள் தாகம் தமிழீழம்" என்றாம்!
கேவலம்!
இன்றைய உலகத்தில் தேசியவிடுதலைப் போராட்டங்கள் குறித்துச் சரியான பார்வையற்ற"படிப்பாளிகள்" மேற்குலக ஏகாதிபத்தியங்கள் முதல் ஜெயலலிதாவரை எமது பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி ,விண்ணப்பிக்கின்றார்கள்.இவர்கள்,கடந்த கால் நூற்றாண்டாக நாம் செய்த போராட்டத்தில் புலிகளது கொடியதும்,ஈனத்தனமுமான அரசியலை வர்க்கக் கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது,இன்றைய அழிவு அரசியலுக்காக மேற்குலகத்திடம் ஆங்கிலத்தில் எழுதிக் கெஞ்ச வேண்டுமென்கிறார்கள்!

முதலில், இலங்கையினது பிரச்சனையை அந்த நாட்டு மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க முனையுங்கள்!
"உங்கள் பிரச்சனை" பாராளுமன்றத்துக்குள் இல்லை-அது,வெளியிலேதாம் இருக்கிறதென்பதைச் சொல்லிக் கொடுங்கள்.அதன்பிறகு அவ் மக்களை நம்பி, அவர்களையே போராட அணித்திரட்டிக் கொள்ளும்போது அங்கே, நாம் எவரைச் சார்ந்தியங்கவேண்டுமென்பதை அவர்களே தீர்மானிப்பர்.
எமது மக்களுக்கு அந்நிய உலகத் தூதர்களுடாகப் புனைந்த "தமிழீழம்", இனி அவசியமல்லை!
அவர்களுக்குத் தெரியும் தமது விலங்கை ஒடிப்பதற்கான தெரிவைச் செய்ய.புலிகள் அதை மிக இலகுவாகச் சொல்லியபடியேதாம் மரணித்துப் போகிறார்கள்-சரணடைகிறார்கள்-சங்கதிகளைச் சிங்கள முகாமிலிருந்து இப்போது சொல்லவும் முனைகிறார்கள்.
ஈழத்தவன் ஏதோ உரிச்ச வெங்காயமென்று எண்ணியபடி ஜெயலலிதா முதல் இணைய அநுதாபிகள்வரை எமது மக்களது பிரச்சனைக்காக ஈழம்-மேற்குலகமெனக் கருத்தாடுகிறார்கள்.இதையேதாம், பாசிசப் புலிகளும் அன்றுமுதல் சொல்லி, இன்று அழிந்து சுடுகாட்டில் ஈழத்தைக் கொண்டுபோய்விட்டுள்ளார்கள்.இதை மீளவும் அதே கதையோடு தொடங்குவதற்கு நீங்கள் எல்லோரும் எதற்கு?
மக்களது பிரச்சனையின் மூல காரணி என்ன?
அதன் வேர் எங்கு வரையும் ஓடுகிறது?
இன்றைய-அன்றைய மேற்குலகமும், தேசிய விடுதலைப் போராட்டங்களை இங்ஙனமே தத்தமது நலனுக்காகக் கையாளுவதில் உலகத்தில் பற்பல இனக் குழுக்களை வேட்டையாடித் தமது வருவாய்கேற்ற உலகைத் தயார்ப்படுத்துகின்றன!இதன் பாத்திரத்தில் இலங்கை அரசால் அழிவுறும் ஈழத் தமிழருக்காக மேற்குலகம் எந்த மயிரையும் புடுங்காது!
இத்தகைய புடுங்கலை அவர்களால் செய்யமுடியாதென்பதுற்கு குர்தீஸ் இன மக்களது விடுதலைப் போராட்டத்தைக் குறித்த பார்வைகள் தெளிவுப்படுத்தும்.இதே மேற்குலகப் பொருளாதார நலன்களுக்காகக் குர்தீஸ் மக்கள், அவர்களது காற்பந்தாகக் கிடந்து உதை வேண்டுவதை எந்த அளவு கோலுக்குள் திணிக்க முடியும்?
அயர்லாந்துப் பிரச்சனையில் இலண்டனது நிலைப்பாடென்ன?இதற்குள் ஒளிந்திருக்கும் நலன்கள் என்ன?
பாஸ்கன் குடியரசுப் போராட்டத்தில் ஸ்பெயினின் நிலை என்ன?
பெல்ஜியத்தின் இனங்களுக்கிடையிலான இனமுரண்பாடு எங்ஙனம் ஐரோப்பிய யூனியனுக்குள் அணுகப்படுகிறது?
இந்தியாவின் காஸ்மீரி மக்களது போராட்டத்தையும்,நாகலாந்து மக்களது போராட்டத்தையும் இந்தியாவும் ,உலக நாடுகளும் எவ் வகைக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்றன?
திபேத்தை எந்தத் தளத்தில் சீனாவின் முன் நிறுத்துகின்றன?திபேத்துக்காகச் சொல்லமலே ஊதிப்பெருக்கிப் புனைந்த மேற்குலக அரசுகள் ஆயிரக்கணக்காக அழியும் தமிழனைக் கண்டும் காணாதிருப்பதற்கு அவர்களுக்கு இலங்கை அரசினது அடக்குமுறைபற்றி போதிய அறிவு இல்லாத காரணமா இன்றைய எமது நிலைக்குக் காரணம்?
ஒன்றுபட்ட கனடாவுக்குள் மொன்றியால் மாநிலத்தின் கோரிக்கைகளை முன் தள்ளும் வர்க்கத்தின் நோக்கம் என்ன?
சுவிஸ்சர்லாந்துக்குள் கன்டோன் முறை ஆட்சியமைக்குள் கிட்டி விளையாடும் பல்லின மக்களது பொருளாதாரக் கண்ணோட்டம் எத்தகையது?அவர்களது பிரத்தியேகமான அரசியல் கோரிக்கை என்ன?
இவை எல்லாவற்றையும்விட ஈழத்துப் பிரச்சனைக்கு, இத்தகைய தேசங்கள்(மேற்குலக) எந்த நிலையில் இலங்கையை அணுகுகிறார்கள் என்றாவது
கேள்விகளைத் தொடுத்தோமா?
அங்ஙனம் இன்றி,மேற்குலகத்தவர்களால் நாம் அரவணைக்கப்பட்டு,மிக நேர்த்தியாக நடாத்தப்படுவோம் என்ற பாணியில் எழுதுவது அப்பாவி மக்களை ஏமாற்றுவதாகும்.
ஜோர்ச்சியாவுக்குள் 50 பேர்கள் செத்தால் வீதிவீதியாகக் கத்தும் மேற்குலகம் ருவாண்டாவில் மில்லியன் மக்கள் செத்தபோது என்ன செய்தது?சமீபத்தில்"நாசகார"ஆயுதம் வைத்திருந்த சதாமின் ஆட்சிக்கு அடுப்பூதிய ஈராக்கியர்களில் எத்தனைபேரைக் கொன்று குவித்தது?
அவ்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் எல்லை கடந்த குண்டுகளைத் தூவும் அமெரிக்காவுக்கும் மேற்குலகத்துக்கும் எந்த அதிகாரம் மக்களைக் கொன்றுகுவிக்க "ஆடர்"கொடுத்தது?
புலிகளது அழிவைப் பார்!
நாங்கள் கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.
துப்பாக்கிக்குத் தோளைக் கொடையாக்கியதில்
கரங்களுக்குள்ளேயே உலகமெனச் சொன்ன புலிகளும்-நாங்களும்
கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.
அந்தப்பாடம்
விடுதலையினதும்,
விலங்கினதும்
சரியான அர்த்தத்தை அவர்களுக்கு
இனியாவது மக்களது கண்ணீரிலிருந்து
சொல்லிக் கொடுக்கட்டும்.
ஈழம் பெற்றுத் தருவதாகவுஞ் சில சொல்வார்
எம்மை மீளவும் மொட்டை அடிக்க
அது தமது ஆட்சியிலும் தொடர
போலிக்கு ஈழம் விற்பார்!
நம்பாதே!
நாடுகளுக்குள் விலங்குகள் இருப்பதை அறி!
அதற்கு மொழியுமில்லை
மதமும் இல்லை.
உன்னைக் கட்டிப் போடுபவர்க்கு மட்டுமே
மொழியும்
மதமும்
மண்ணும் அவசியம்.
எங்களது மக்களது இன்றைய அவலத்துக்கான அரசியல் பின்புலம் என்ன?
இந்த அரசியலால் ஈழத்தமிழ் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டத்தன் இறுதி முடிவு புலிகளால் படம்போட்டுச் சொல்லப்படகிறது.வரலாற்றில் புலிகளெனும் எதிர்புரட்சிகர இயக்கம் தனது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்கiளேயே அநாதைகளாக்கிச் சிங்கள அரசிடம் அடிமையாக்கிச் செல்கிறது!அதையும் புலிகளே இலங்கை அரசிடம் சரணடைந்து ஒப்புதல் அளிக்கின்றார்கள்.
தமிழ்பேசும் மக்களினத்தின் விடுதலை-சுயநிர்ணயத்துக்காக,அதி மோசமான அரசியல் வரலாற்றைச் செய்தவர்கள் புலிகள்.
இவ்வியத்தின் தலைமையை ஒரு வடிகட்டிய அடிமுட்டாளிடம் கையளித்த புலிகளுக்குப் பின்னால் ஒளிந்துள்ள தமிழ் ஆளும் வர்க்கம்,இப்போது அதே முட்டாளைக் காக்கப் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது.
அது தன் தவறுகளைத் "தயா மாஸ்டர்-ஜோர்ச் மாஸ்டர்" என்ற கேவலமான ஜீவன்களுக்கூடாகச் சொல்லுகிற இன்றைய நிலையில்,மீளவும் மேற்குலகத்துக்கு அவர்களது மொழிகளில் ஈழத்தமிழர்களின் அவலத்தைச் சொல்ல வேண்டுமென்பதன் அரசியல் தொடர்ச்சி என்ன?
இதன் வர்க்கத் தளம் எது?
யாரது நலன்சார்ந்து இந்த வாதம் "மனிதாபிமான"வேடம் பூண்டு கருத்துக்களை முன் தள்ளுகிறது?
ஆனாவுக்கு அர்த்தந் தெரியாத அடி முட்டாளைத் தலைவரென்று சொல்லிக் கொடுத்தவர்கள் அழித்த மக்களது தொகை இலட்சம் தாண்டுகிறது!
இதன் தொடர்ச்சியில் இனியொரு துடைப்பம் தலைவரென மேற்குலகத்தால் வழிமொழிய நாம் என்ன மந்தைக்கூட்டமா அல்லது மலினப்பட்ட தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமா?அன்றி அக்கூட்டத்தைத் தலைரெனச் சொல்லி அட்டைக் கத்தியேந்திப் புரட்சி பேசும் கனவுலகக் கஸ்மாலமா?
இவர்கள்தாம் மேற்குலகத்தின் தயவில் எமக்கு விடிவு வருமெனக் கனவு காண முடியும்.
நாம் சொல்கிறோம்: நமது மக்களது விடுதலைக்கு அவர்கள்தாம் உழைக்க வேண்டும்.அதற்குப் புலிகளது அரசியல் செத்துப் புரட்சிகரமான சிந்தனை உதித்தாகவேண்டும்.இச் சிந்தனையூடாக நாம் இலங்கைக்குள் மற்றைய இனங்களோடு கை கோர்த்தாகவேண்டும்.அங்கே,இவர்கள் சொல்லும் மேற்குலகத்தை ஒட்ட வேரறுப்பதற்கு முனையும் புரட்சி,மேற்குலகத்தால் அடிமைப்பட்ட அவர்களது மக்களோடு கைகோர்க்கும்.இதன்வழி தனது பொது எதிரியை மனித சமுதாயம்-உழைப்பவர் கண்டடைவர்!
இதுதாம் இன்றைய அவலத்தைத் தீர்க்கும் சரியான திசைவழி.
ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.09