Montag, April 06, 2009

இதையும் மறந்திடாதே!

வன்னிக் காண்டம்.

சிறு பொறிதனினும் விட்டுவிடாதே
உன்னைச் சுற்றியே உலகம் உருண்டு
உப்புக்காக அமிழ்ந்து போகிறது
ஊசி முனைக்குத் துளைபோட்டதுகூட


இன்றைய மாற்று முனைதாம்
எவரறிவார்
இதற்கென் பெயர் கொல்?
அர்த்தங்கொள் கணமென?


நாட் கணக்கெனவும்
மாதக் கணக்கெனவும்
கண்ணீரைச் சிந்தவொரு கூட்டம் வன்னிக்குள் அன்று
இன்றோ குருதியால் நிலம் மெழுகும் பொழுதைத்தானும்
மறுத்தொதுக்குங் கண்ணீர் மறுத்தொதுக்கத்
தேசம் ஒரு பொருட்டாய் உனக்கு!


என்ன மனிதன் நீ?
புலிக்கொரு காவடி
புறத்திலொரு புருடா
இதற்குள் சுண்ணாம்பு தடவுவதில்
நாவைச் சிதறடிக்கிறாய்!



நீரற்ற மட் குடத்தை
முன்னிருந்து பின்னுக்கும்
பின்னிருந்து முன்னுக்கும் தள்ளு புரட்சியெனவும்
சுயநிர்ணயமெனவும் கூடவே தமிழீத்துக்காகத்
தேசபக்தர்களுக்குச் சமாதிகட்டி!


மரக் கிளையில்
தமிழீழத்தின் தேசியக் கொடியில் ஏணைகட்டியபடி
குற்றுயிராக் கிடக்கும் மழலையைப்
பறிகொடு ஈழத்தின் பெயரால்
தலைவர்களது கொம்பு சீவிக்
கடைவிரிப்பவன் காசுக்காகச் சுத்தும்போது
உனது மழலை பிணமென வீழ்கிறதா?


பயப்படாதே!
உண்மை எந்த ரூபத்திலும் வரும்
அது,
உன் மழலையைப்
புசித்து உன்னிடம் வருகிறது



மக்கள் நலன்
வழிநெடுக மத்தாப்பு வீசுகிறதாம்
எஞ்சிய மகனைத் தயார் படுத்து
இன்னொரு சுயநிர்ணயப் போருக்கு!


சாவுதானே,
அது,எனது பிள்ளைகளை நாடாதவரை
உனது பிள்ளை சாவது
தமிழர்களின் அடிமைத் தளையறுக்கவே
முடிந்தால்,
முலைகொடுத்தவளையும் சேர்த்தே அனுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில்
ஒத்த தமிழன் செத்துத் தேசம் காக்க

இனியொரு பொழுதில்,
கச்சை கழட்டுவதற்கு முன்னமே
கண்ணீர் குறித்து அறிந்துவிடு!


சாவு வியாபாரிகள் பல ரூபத்தில்
அடுத்த கருவைக் கற்பத்திலேயே கருவறுக்க
ஐரோப்பியத் தெருவில் புலிகொடிக்கு முத்தமிடுவதில்
உன்னைக் குறித்துக் கிஞ்சித்தும்
கவலைகொள்ளாக் கண்ணீரோடு...


தேசியத் தலைவருக்குப் பூசை எடுத்தபடி
தழிழரின் தாகம் தமிழீழமெனக் கொக்கரிக்க ஒரு கூட்டம்
வணங்கா மண் பெயரில்
கப்பலிட்டுச் சாவுக்கென சங்கூதும்!
இதையும் மறந்திடாதே!


ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.09

1 Kommentar:

ஆ.ஞானசேகரன் hat gesagt…

//தேசியத் தலைவருக்குப் பூசை எடுத்தபடி
தழிழரின் தாகம் தமிழீழமெனக் கொக்கரிக்க ஒரு கூட்டம்
வணங்கா மண் பெயரில்
கப்பலிட்டுச் சாவுக்கென சங்கூதும்!
இதையும் மறந்திடாதே//

ம்ம்ம்ம் என்ன பன்னபோரோம்...