நாம் நிறையக் கேள்விகளைக் கேட்டாகணும்.
நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.ஆனால்,இது,எதன்பொருட்டுக் கையிலெடுப்பதென்பதை-சமுதாயத்தில் நிலவும் அமைப்புக்கு எதிரானதென்ற அர்த்தத்தில்-அது பயங்கரவாதமெனப் பூர்ச்சுவாச் சமுதாயத்தில் கருத்துக்கள் கட்டியமைக்கப்படுகிறது.நிலவும் ஒடுக்குமுறை அமைப்பை மாற்றும் சமுக முரண்பாடுகளின்வழி மேலெழும் அரசியல் அமுக்கமும் இத்தகைய நடாத்தையில் பயங்கரவாதமெனும்போது,பூர்ச்சுவா வர்க்கத்தின் பேரளவிலான ஜனநாயகத் தன்மையே வரையறுக்கப்பட்டு,மட்டுப்படுத்தப்படும் இன்றைய சூழலில், தமிழீழக் கோசங் குறித்து நீண்ட கேள்விகள் எழுகின்றன.இதன் வாயிலாக நாம் பெற்ற அரசியல் நிலை பற்றிப் பற்பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ள வரலாறு, பரிசீலனைக்கு உட்பட்டாகவேண்டும்.கோகர்ணன் இது குறித்துச் சிந்திக்கிறார்.நாம் மேலும் அதைத்தாண்டிச் செல்லவேண்டும்.
"தலைவர் வல்லவர்.
தலைவர் அனைத்தையுஞ் செய்து தமிழீழம் காண்பார்.
தலைவர் கரத்தைப் பலப்படுத்தினால் போதும்.
தலைவர் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்-நம்புங்கள்."
தலைவருக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுத்த ஒரு இனம், தனக்குள்ளேயே உள்ளக ஒடுக்குமுறையை மட்டும் "துரோகத்தின்"பெயரில் நடாத்தி முடித்தது.இத்தகையவொரு இனத்தின் சிந்தனையாளர்களில் ஒருவர் உண்மைகளைக் கண்டடைவது குறித்துத் தினக் குரலில் மறுபக்கம் வடிக்கிறார்.இதைக்கொண்டு மேலுஞ் சிலவற்றை நாம் பார்த்தாகவேண்டும்.
நமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய யுத்த அழிப்பைக்குறித்துப் பொத்தாம் பொதுவாகத் தீர்ப்புக் கூறுகிறது.அது, பெரும்பாலும் அரசியல் தவறென்பதை"எட்டப்பன்,துரோகி,காக்கை வன்னியன்"எனும் ஆதிக்க வர்க்கத்தின் திமிர்த்தனமான கருத்தியற் பாசிசத்துடன் மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.
இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்:
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மொழியப்பட்ட வெறும் வாய் வீச்சுத்"தமிழீழக் கோசம்"எங்ஙனம் போராட்டத்துக்கான காரணமாக மாறியது?
இத்தகையவொரு கோசத்தக்குள் மறைந்திருந்த அரசியலின் தெரிவு என்ன?
இதை முன்னெடுத்த அரசியல் தலைமையின் பின்னால் இருந்த அரசியலின் தொடர்ச்சி எது?
தமிழீழம் என்ற கோசத்துக்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பில் நிலவியதா-நிலவுகிறதா,இது சார்ந்த சுயநிர்ணயம் சாத்தியப்படுமா?
சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் தமது பொருளாதார இலக்குகளைக் கண்டடைந்தவொரு வர்க்கம் அவ்வண்ணமே சிங்கள அரச பீடத்தில் தமது சேவைத் துறைசார் அதிகாரத்தைக் கையகப்படுத்தியபடி எங்ஙனம் தமிழீழஞ் சொல்ல முனைந்தது?
இத்தகைய "தமிழீழ"க்கோசத்தை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது அபிலாசையாக்குவதில் எத்தகைய சக்திகள் உடந்தையாக இருந்தன,அவை இலங்கைக்குள் மட்டும் தமது இருப்பைக்கொண்டவையா அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தும் வெளிப்பட்டவையா?
இக் கேள்விகளது அடுத்த நிலையில், சிந்தப்பட்ட குருதிக்குக் காரணமான அரசியலுக்குத் தார்மீகக் காரணம் ஏதாவது உண்டா?
அது, தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் இவ்வளவு பாதிப்புக்குள் உட்படுத்தித் தனது மூர்க்கமான அழிவு யுத்தத்தைத் தமிழினது பெயராலும் அது நிலவும் நிலப்பரப்புக்கடந்தும் நடாத்துவதில் எத்தகைய அரசியல் முதன்மையுறுகிறது?
இது,தமிழ்பேசும் மக்களது விடுதலையைத் தமிழீழத்தின் திசைவழியில் வென்றுவிட முடியுமென்று ஊக்கப்படுத்திய "மாவீரர்கள்"பட்டியலின் தெரிவில் எவரது நலன்கள் முதன்மையுற்றுக் கொலைக் களத்துக்குச் சிறுவர்களைப் பிடித்தனுப்பியது?
இது, குறித்த கேள்விகளோடு,கொல்லப்பட்ட மக்களுக்கு எத்தகைய அரசியல் நடாத்தைகள் சிங்கள-தமிழ் ஆளும் வர்கத்தின் தரப்பிலிருந்து இப்போது முன்வைக்கப்படுகிறது?
இவை மிக அவசியமாகக் கேட்கப்பட்டு விடைகாணவேண்டிய மிகச் சாதாரணக் கேள்விகள்.
மக்களது இன்றைய இழி நிலைக்கு மேலும் "தமிழீழத் தாயகம்" எனும் சமூகவுளவியல் அனைத்தையும் மொழியினதும்,தேசத்தினதும் பெயரால் சமமப்படுத்தி,தலைவரது தியாகத்துக்கு முன் குறுக்கிவிடமுடியாது.
இது குறித்து,தினக்குரலில் இன்று ஞாயிற்றுக் கிழமைக்கான மறுபக்கக் கட்டுரையைக் கோகர்ணன் எழுதுகிறார்.நாம் ஏமாற்றப்பட்ட போலிக் கோசங் குறித்து மிக விரிவாகச் சிந்திக்க வேண்டிய சூழலின் ஒரு பக்கத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு இலங்கையில் கேள்விக்குள்ளான அரசியலில் புலிகளினது போராட்டச் செல்நெறி-அரசியற்பாதை மற்றும் அதன் பாத்திரம் குறித்து நாம் நிறையக் கேட்டாக வேண்டும்.இது,அடுத்தகட்டத்தைத் தகவமைப்பதற்கும் நமது சமுதாயத்தைத் திடகாத்திரமான சமுதாயமாக்குவதற்கும் இது அவசியமான ஆரம்பக்கட்டம்.இதை எவரும் மறுத்தொதுக்கிவிட்டுத் தமிழீழம் என மீளவும் கூட்டாகக் கோசமிடமுடியாது.
புலிகளைச் சுற்றிக்கட்டியமைத்த பிரமைகள் நீர் குமிழி போன்றதென்பதைப் புரட்சியாளர்கள் அன்றும்,இன்றும் கூறியுள்ளனர்.புலிகளது அரசியலைத் தொடர்ந்து தாங்கிப்பிடித்து,அதில் தொங்க முனைவது நம்மை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு இன்னும் சாதகமான அரசியல் ஊக்கத்தை வழங்குவதாகவே இருக்கும்.
நாம்,எமது அரசியல் தலைமைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தாகவேண்டும்.
இதுள், அவர்களது அனைத்து மூலங்களையும் கண்டடையவேண்டும்.இதற்குக் கோகர்ணன் சில தரவுகளைத் தருகிறார்.அதன் அடிப்படையிலாவது நாம் நம்மைக் கண்டடையவேண்டும்.இதுவே, அடுத்தகட்டத்துக்கு நம்மைத் தயார்ப்படுத்தும் அரசியல் விவேகத்துக்கான முதற்படி.இதை மறுத்தொதுக்கும் ஒவ்வொரு பொழுதும் நாம்,நமக்கே குழி வெட்டுகிறோம்!
அந்தவகையில் கோகர்ணனின் கட்டுரையை முழுமையாக உள்வாங்கி, நமது பொய் முகங்களைத் தொலைத்து உண்மைகளைக் கண்டடையவேண்டும்.
இங்கே,தலைவர்-தேசியத் தலைவருக்குப் புகழ் மாலை போட்டது போதும்.அவர் தமிழ்பேசும் மக்களது அரசியலில் அரிச்சுவடியைக்கூடப் புரிந்துகொண்டவரல்ல.ஆதலாற்றாம் ஆதிக்க வர்க்கத்தால் ஆட்டிவைக்கப்படக் கொலை அரசியலைத் தொடர்ந்தார்.இதன் சாதகத்தைப் பலமாகக் கருதிய சிங்கள இனவாத அரசு, தமிழ்பேசும் மக்களது இருப்புக்கே இப்போது வேட்டுவைத்து வருகிறது.இதற்கான அரசியல் தெரிவைப் புலிகளதும் அவர்களது முன்னோர்களும் போட்டதாகக் கொண்டோமானால், இதை வலுப்படுத்தித் துரோக அரசியலுக்குக் களம் அமைத்த சக்திகள் எவை?
இது குறித்த ஆய்வுகள் அவசியம்.
இதன் வழி நாம் சிந்திப்போமா?
உண்மைகளைக் கண்டடைவோமா-போலித் "தமிழீழக் கோசத்தை"இலட்சம் மக்களைது சாவின்வழி புரிந்து கொள்ள நமது அகக் கதவைத் திறந்துகொள்வோமா?
கேள்விகள்.
இவையே எமக்கு அவசியமானது இப்போது.
உண்மைகளைக் கண்டடையக் கேள்விகளே அவசியம்.இதைக் கோகர்ணன் மிகவும் குறிப்புணர்த்துகிறார்.இப்படத்தைக் கிளிக் செய்து வாசித்துத்தாம் பாருங்களேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
03.05.09
2 Kommentare:
சரி.ஆனால் இவ்வளவு நடந்த பின்பும் கூட கோகர்ணன் புலிகளை நேரடியாக விமர்சிக்க தயங்குகிறாரே?!
//சரி.ஆனால் இவ்வளவு நடந்த பின்பும் கூட கோகர்ணன் புலிகளை நேரடியாக விமர்சிக்க தயங்குகிறாரே?!//
அஃது,தயக்கமில்லை;பேராசிரியர்களுக்கேயுரிய தப்பிப் பிழைத்தல்.என்றபோதும், பலவற்றைக் குறிப்புணர்த்துகிறார்.அது, வரவேற்கப்பட வேண்டியதே.இதை சிவத்தம்பி செய்யவில்லையென்பது கவனிக்கத் தக்கது!
Kommentar veröffentlichen