Donnerstag, März 18, 2010

இடதுசாரிகளது பாராளுமன்ற எதிர்ப்பு அரசியல்!

மாறிவரும் போராட்டக் களம்:

இடதுசாரிகளது பாராளுமன்ற எதிர்ப்பு அரசியல்!

பாராளுமன்றத்தை போராட்டக்களமாக்கும் தோழர் டாக்டர் கீசி,மிகச் சிறந்த சோசலிஸ்ற்.அவர் ஜேர்மனில் பாராளுமன்ற சோசலிசத்துவக் கட்சிக்குத் தலைவரும்,உலக சோசலிசக் கட்சிகளுக்கு உதாரண புருஷராகவும்-முன்னுதாரணமிக்க போராளியுமாக இருக்கின்றார்.பாராளுமன்றச் சாக்கடையில் நீந்தும் முதலாளித்துக் கட்சிகள் போலன்றி, அவர் எதிர்ப்பு அரசியல் போராட்டத்தை மிகவும் பரந்துபட்ட மக்களது நலனிலிருந்து முன்னெடுப்பவர்.

திரு.கீசி அவர்கள் மிகச் சிறந்த இடதுசாரி அறிஞரும்,சட்ட நிபுணருமாவார்.அவரது கட்சியின் உறுப்பினர்கள்ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் கையளவுவே நிறைந்தவர்கள்.அறுநூறுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் அறுபது இடதுசாரி உறுப்பினர்கள் மிகத் காத்திரமான எதிர்க்கட்சியாக இருந்து மக்கள் நலனுக்காவும்,ஜனநாயகத்தை நிலை நாட்டவும் போராடுகிறார்கள்.

ஜேர்மனியில்பரந்தபட்ட மக்களுக்கெதிரான சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் முதலாளித்து ஓட்டுக்கட்சிகளுக்கெதிராக-ஆட்சிக்கு எதிராக வீரம் நிறைத்து உரையாற்றி, எமது உள்ளத்தில் நிலைக்கிறார் திரு.கீசி அவர்கள்.சமகால உலக யுத்தங்கள்,அவ்கானிஸ்தான் யுத்தம்,ஆயுதத்தளபாடவிற்பனைகள்,தொழில் நிறுவனங்களின் ஊழல்மலிந்த மக்கள்விரோதச் சட்டங்கள் குறித்து மிகக் கறாரான விமர்சனத்தை இதுவரை திரு.கீசியைப்போல் எவரும் அம்பலப்படுத்தவில்லை.



இன்று,ஜேர்மனியானது உலகத்தில் ஆயுத விற்பனையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்ஜேர்மனியானது உலக ஆயுதவிற்பனையிலும் ஆயுதத்தளபாட இருப்பிலும் ஆறுவீதமே பங்கெடுத்தது.இன்றோ அது உலக ஆயுதவிற்பனையில் அமெரிக்கா,இருஷ்சியாவுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் முன் நிற்கிறது.இது,யுத்தத்தை எங்ஙனம் ஊக்குவிப்பதென்பதற்கு அப்பால்,இன்றைய பொருளாதாரத்தில் ஐக்கியமுறும் ஐரோப்பியக் கூட்டணி நாடுகள் குறித்த Confederation புரிதலில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புறம்,லீசபெர்ன் ஒப்பந்தம்(Lissabonner Vertrag) மறுபுறம்,ஆயுதவிற்பனையென இரு துருவ அரசியல் வியூகத்தின் வழியினூடாக ஜேர்மனிய முதலாளிகள் மக்களது ஜனநாயவுரிமைகளை மட்டுப்படுத்தும்போது,



ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைவுகளோடான அரசியல் என்பது வெறுமனவேயான பொருளாதாரக்கூட்டே அன்றி அது மக்களது நலன்சார்ந்த தோழமைக் கூட்டல்ல.மக்களின் வளர்ச்சியில் பங்குபெறும் பண்பாடு மற்றும் அபிவிருத்திசார்ந்த முன்னெடுப்புமல்ல.எனவே,இத்தகைய நாடுகள் தமது பொருளாதாரத் தேவைகளது தெரிவில் "கண்ட அரசியலை" மக்களது நலன்சார்ந்து முன்னெடுப்பதாகச் சொல்வது பொய்யானது.


வங்குரோத்தாகும் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்:


இன்று,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐ(ஸ்)லாந்துக்கு அடுத்ததாக கிரேக்கம் வங்குரோத்தாகிறது.கிரேக்கத்தில் மக்கள் வீதிக்கிறங்கிப் போராடுகிறார்கள்.கிரேக்க அரசானது ஓயவூதியத்திலிருந்து அனைத்தச் சமூகநல மானியத்தையும் வெட்டித்தள்ளுகிறது.இங்ஙனம் இத்தகைய சமூக நலவெட்டுக்களைச் செய்வதற்கான ஆலோசனைகளை உலக வங்கியும்,ஜேர்மனிய அரசும் அழுத்தங்கொடுத்து வழங்குகிறது.

உண்மையிலேயே இந்த அழுத்தம் எதற்கானதெனச் சிந்திப்போருக்கு இந்தக் கீசிஎனும் இடதுசாரித்தலைவரின் பேச்சு மிகச் சரியான புரிதலைத்தரும்.எனினும்,எனது புரிதலின்வழியில் கீசி சொல்வதையுந்தாண்டிமேலும் ஒருவுண்மை கிரேக்கத்தின் வங்குரோத்துக்குக்காரணமாகிறது.

கிரேக்கமானது இன்று, ஆயுதவிற்பனையில் மூன்றாவது இடத்தில் இருந்து செல்வச் செழிப்பில் தமது முதலீட்டார்களுக்குச் சட்டப் பாதுகாப்புக்கொடுக்கும் இந்த ஜேர்மனியின் ஆயுதக்கொள்வனவில் இரண்டாவது பெரிய வாடிக்கையாளனாகக் கிரேக்கம் இருக்கிறது.முதலாவது இடத்தில் துருக்கி இருக்கிறது.மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்கா இருக்கிறது.



இதில் வேடிக்கையான அரசியல் இருக்கிறது.இதுதாம் எனக்கு முக்கியமானது.

இன்றைய அரசியல் விற்பனர்கள் குறித்துரைக்கும் எதிர்கால அரசியலானது ஐரோப்பியக்கூட்டமைப்பின் கொன்பெடரேஷன்(System of confederation) முறைமையிலான அரசியல்-தேசக்கூட்டுக்கள் என்பவை எதிர்கால அரசியல்-யுத்த முரண்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதென்பது அவர்களது குறிப்பு.அதுமட்டுமின்றி உலக மக்களுக்கும்,ஐரோப்பாவுக்குமான உறவில் இக்கூட்டமைப்பு(EU-confederation) மிகப் பெரிய பாச்சலாக இருக்கும் என்றும்,அது,மக்கள் நல அரசியலையும் அதை முன் தள்ளும் பொருளாதார சுபீட்சத்தையும் நோக்கிச் செல்லுமென்றும் உரைத்தார்கள்.ஆனால்,துருக்கியும் அதன் பரம விரோதி கிரேக்கமும் போட்டியிட்டு ஆயுதக் குவிப்பில் வங்குரோத்தாக்கின்றன.கிரேக்கம் ஐரோப்பியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது.இரண்டு தேசங்களும் நேட்டோ(NATO) பங்காளித் தேசங்கள்.இவர்களுக்கெதிற்கு ஆயுதம்?யாரோடு பொருத?

அப்பாவி மக்களை வேட்டையாடும் உலகப் பகாசூரக் கம்பனிகள் இத் தேசங்களை முற்றுகையிட்டுவிட்டு,அவர்களது தேசவுற்பத்தியில் கணிசமான வருமானத்தைத் தமது ஆயுதக்கம்பனிகளுக்குத் தாரவார்க்கும்போது இத்தேசங்களுக்கு அதே ஆயுதத்துக்குக்கொடுத்த பணம் மீளவும்,வட்டியோடு கடனாக உள் நுழைகிறது.இரும்புகளை வேண்டித் தேசம் பூராகவும் நிறைத்தவர்கள் வேளைக்குத் தமது அனைத்து வளத்தையும் அந்த ஆயுதங்களைத் தந்த எஜமானர்களுக்கு தாரவார்க்கும்போது மக்களை பொருளாதாரரீதியாகவொடுக்கும் சூழலை இவர்கள் மூலமாகப் பெற்று விடுகின்றனர்.இது,ஒரு சுழற்சியில் மேற்குலக மூலதனம் விரும்பும் அரசியல் .பொருளாதார வலுவற்ற தேசங்களது இறைமையை இங்ஙனம் கைப்பற்றி அத்தேசங்களைத் தமது அடிமையாக்கும் முயற்சிதாம்.

இங்கே,ஐரோப்பியக் கொன் பெடரோசன் என்பதெல்லாம் மக்கள் நலன்சார்ந்த இணைவினது தெரிவில்லை.மாறாகப் பொருளாதார வலுவுள்ள தேசங்கள் தமக்கான சந்தையை விரிவாக்கிக் கைப்பற்றிக்கொள்வதென்பது மீண்டும் உறுதிப்பட்டுள்ளது.

இதை ஜேர்மனிய இடதுசாரிகள் மிகத் தெளிவாகப் பரந்தபட்ட மக்களிடமும்,பாராளுமன்றத்திலும் மிக நேர்மையாக அம்பலப்படுத்துகிறார்கள்.

பொதுத்தளத்தில் அவர்கள் தமது எதிர்ப்பு அரசியலைமிகத் தெளிவாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கும்போது ஜேர்மனியில் இடதுசாரிகள் வலுப் பெற்றுவருகிறார்கள்.இது நவ மார்க்சிதத் தந்தையென வர்ணிக்கப்படும் அன்ரேனியே நெக்கிறியின் சிந்தாந்தக் கோப்பாட்டு நகர்வுக்கு அண்மித்த அரசியலாக விரிவடைகிறது.



இத்தகைய அரசியல் பரந்தபட்ட மக்களிடம் மிக ஆழமாக எண்ணவூலமாக வளர்ச்சியடைகிறது.ஓட்டுக்கட்சி அரசியலுக்கு மாற்றானவொரு அரசியல் பாதையை இது காலப்போக்கில் மக்கள் நாடிச் செல்வது என்ற தளத்தில் சமூக ஆவேசமாக உந்தித் தள்ளும்போது, நிறைந்த பயனை மக்கள் அடையமுடியுமென்பது ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் இன்றைய நம்பிக்கை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.03.2010

Keine Kommentare: