Freitag, März 12, 2010

மார்க்சினது முதிசம்(Kapitales Erbstueck).

மார்க்சினது முதிசம்(Kapitales Erbstueck).

(1)

ல்லோருக்கும் வாய்க்காத அருமையான உறவுகள் சிலருக்கு வாய்த்துவிடுவது.அத்தகையவுறவுகள் நண்பர்களாகவும்,காதலர்களாகவும்-ஏன் பிள்ளைகளாகவும் வாய்த்துவிடுவது.

எனக்கு அப்படி எதுவும் வாய்த்திருக்கவில்லை.

காதலித்தபோது தோல்வி.

கவிதை புனைந்து நேசித்தபோது அபரிதமான பாலியற் தூண்டல்,நடாத்தைப் பிறழ்வென...

எல்லாந்தொலைந்தபோது குடும்பம்.

கவிதையாகப் பாசம் மலர்ந்திருப்பதாக நான் நினைக்க வைக்கும் தருணங்களில் பொய்துப்போய் இருக்கும் எனது புவியுலகத்துள் பலதும்,பத்தும் எங்கோவிருந்து இரைச்சலாக எனது செவிகளுக்கிடையில் துள்ளி விளையாட நான் மௌனித்துத் தியானிக்கிறேன்.

வாழ்வு.அது ஒரு தேடுதலோடும் அந்தத் தேடுதல் தன்னைச் சுற்றிய பெருவிருப்போடு அசைந்தபடியேதான் அள்ளிவரும் அநுபவங்களை.அந்த அநுபவங்கள் என்றுமே அறிவுத் தேடுதலைக் குன்றப் பண்ணியதாக இருந்ததுமில்லை.அப்படித் தேடுகிற ஒரு உணர்வு எதிர்ப்பால் வினையாகும்.

இந்தப் பாலுணர்வுதான் தன்னைப் பராமரிக்க வைக்கிறது.தான் என்பதன் பொருளுணரப்படும் இந்த உணர்வு தனக்காக ஒருத்தியை-ஒருவனைத் தேடிக் கண்டுகொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் தன் கனவுகளைச் தனக்குள்ளே சொரிய வைக்கும் பால் வினையை நம் வசதிகேற்ப பயன் படுத்துகிறோம்.

உயிரின் வலியாக நீண்டுவிடுகிறதா காதல்?அப்போ நானோ இல்லை நீங்களா என்னை-உங்களை உணர்வு பூர்வமாக மதிக்கிறேன்-மதிக்கிறீர்களெனக்கொள்வதில் தப்பு நிகழாது.அப்படித்தாம் அனைவரும்.

அருமையான காலங்களது குரல் வளைகளை முறிப்பதற்காக நான் புனிதக் காவடியைக் காவித் திரிகிறேன்.அதை எவர்மீதும் இறக்கி வைத்துக் ஆட்டம் பார்ப்பதில் இந்தக் காலம் எனக்கு வஞ்சம் புனைந்து "சூனியம்" வைத்திருக்கிறது.

(2)

பதின்ம வயது-அது பருவ வயதே ஆவதற்கான திரிவு நிலைப் பருவம். அற்புதமான அறிவின் வேட்கை மிகு வயதாகும்.


இந்த வயதைத் தாண்டுகிறபோது வாழ்வை அதன் இயல்போடு-இயற்கை தகவமைத்த எல்லாச் சுகத்தோடும் நுகர வேண்டும்!அந்த நுகர்வு அழிக்கப்படும்போது சமூகம் ஆரோக்கியமாக உருவாகுவதாக எந்தத் தகவலும் இல்லை.

நோயுற்ற சமூகமாக மனித சமூதாயம் இருக்கிறது.அதன் இருப்புப் பலவீனமான-அறிவுக்குப் புறம்பான கற்ப்பிதங்களால் நிரம்ப்பிப் போயுள்ளது.இது மனிதவுறகளை எவ்வளவு கேவலப் படுத்துமோ அவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருக்கிறது.இதன் இருப்பு வெறும் தகவல்களாலும் அது சார்ந்த பொய்மைப் பண்புகளாலும் நிறைத்து தலைமுறைக்கே ஆபத்தான முறையுள் வைக்கப்பட்டுள்ளது.

இது அசலான உணர்வை அகற்றிய கையோடு எனக்குள் போலியான மனிதனையூன்றிவிடுகிறது.நான் வானுக்கும் தரைக்கும் எனது தலையை அறுத்து உருட்டி விளையாடுகிறேன்.அந்த விளையாட்டில் எனது புனிதம் வெற்றிக் கோப்பையாக எனது விழிமுன் தோன்றி என்னைப் பொய்மைக்குள் வாழ வைப்பதை நான் எப்போதுமே புரிந்ததாக இல்லை.

என்ன செய்யலாம்?

காதல்.


வாழ்வின் உயிர்த்துடிப்பான எதிர்ப்பாலுணர்வு!


இந்த உணர்வே சமுதாயத்தின் அதிபெரும் கண்டுபிடிப்புகளுக்கும் தியாகத்துக்கும் காரணமாக இருந்திருப்பதை நாம் கண்டுணரமுடியும்.இந்த உணர்வின் பெரு வெளியில் சஞ்சரிக்காத எவரும் உயிர்த்திருக்க முடியாது.

அம்மாவைக் காதலிப்பதிலருந்தும் அப்பனை நேசிப்பதிலிருந்தும் பின் எனது மொழியை-தேசத்தைக் காதலிப்பதிருந்தும் எனக்குக் காதல் சொல்லத் தெரிந்திருக்கிறது.என் பாலுணர்வை நான் உணர வைத்தவள் ஜென்னி.

(3)

அவள் ஒரு மகுடம்.

அவளைக் காணாத பொழுதுகள் எனக்கு நரகத்துக் கற்ப்பிதமாக இருந்திருக்கிறது.அவளைப் பாடசாலையில் சேட்டை விட்டே பைத்தியக்காரியாக்கி இருக்கிறேன்.ஒரு நிலையில் எடுத்த எடுப்பிலேயே அவளது விரல்களில் மோதிரமிட்டு மௌனமாகக் காதலுறுதிசெய்தேன்.அப்போது எனக்கு வயது 17.அவளுக்கு 21 வயது.எனது இருபத்தி ஐந்தாவது வயதில் நான் தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்று ஜென்னியை முறையாகவே கரம்பிடித்து மகிழ்ந்தேன்.

இடையினில் எதிர்ப்பட்டாள் நங்கை ஒருத்தி.அவள் மெல்லெனப்பாயும் நீராகவும்,நான் கல்லாகவும் இருக்கக் காலம் நீரினின் அமைதியில் என்னைக் கரைத்தது.அந் நீர் ஹெலேனா டெமுத் என்று நான் சொல்வதற்குள் உலகம் அவளது புத்திரனில் எனது முகத்தை ஒட்டிக்கொண்டது.

நாம் காதலிக்கத் தெரிந்த காலத்தில் கனவுகளைத் தொடரவும் அதைச் சொல்லத் தெரியவும் பின்னாளில் அதன் ஏதோவொரு ஓரத்தில் குந்தியிருந்து இரசிக்கவும் பின் அதையே வாழ்வின் அத்திவாரமாக்கவும் இந்த ஜென்னி-ஹெலேனாக் காவியங்கள் வழி செய்தவை.ஓராயிரம் காதல் மடல்களின்வழி நாம் அழகான ஜேர்மனிய மொழிக்கு அழியாத இலக்கியஞ் செய்தோம்.

அந்த இலக்கியத்தின்வழி ஜேர்மனிய மொழி வாழ்வதென்று இன்றைய இளைஞர்கள் சொல்வதையும் அன்றே கண்டோம்.


ஒவ்வொரு மனிதரும் வாழ்வை-தன்னை உணரும் சந்தர்ப்பம் காதலிக்கத் தெரிந்துகொள்ளும் தருணங்கள்தான் என்பேன்.இதைக்கடந்த எல்லா முன்னேற்றங்களும், இறக்கங்களுக்கும் இந்த உணர்வே மிகவும் காரணமாக இருக்கிறது.வயிறுக்குள் விமானம் பறக்க வைக்கும் எதிர்பால் வினை மிக உயர்ந்த மனிதத் தருணங்களைச் சொல்பவை.

அப்படிச் சொன்னதாற்றாம் நான்வறுமையில் வீழ்ந்து வீழ்ந்து விடுதலைக்காய் எனது மழலைகளை விதைத்தேன்.எத்தனையோ முறைமைகளில் புறைசிஸ்சிச(In 31 Maerz 1843 Die Preussischen Behoerden versuchen Marx zu Kaufen,Sie bieten ihm den Posten des Chefredakteurs bei der konservativen "Preussischen Staatszeitung an.Marx lehnt ab. அரசு என்னை வேண்ட முனைந்தபோதும் நான் வறுமையோடு வாழ்ந்து காதலில் எழுந்து கவித்துமாய் மூலதனமிட்டேன் உங்கட்கு.

(4)

காதல் உயிர்ப்பினது சுவாசம்.உள்ளத்தில் உதிரும் ஒவ்வொரு திசைநோக்கிய கனவும் அதன் துடிப்பில் எதிர் வினையாற்றத் தவறுமானால் எனது மொழிக்கு எல்லை இருந்திருக்கும்.

ஆகக் காதெலென்பது ஒரு உணர்வு என்பதைத் தாண்டி இயற்கைத் தகவமைப்பு என்பதின் மிக விரிந்த வளர்ந்த படைப்பின் சூட்சுமம் என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது!

எனவேதான் எனது காதற்கன்னிக்குக் கடிகரமாக இருந்த என் முதிசமும் காணிக்கையாகிறது.வில்கெம் வோல்f(Wilhelm Wollf) எனக்களித்த உயரிய பரிசு எனது காதலின் உச்பச்சச் சீவியத்துக்கு-உயிர்த்திருந்து என்னைச் சீராட்டிப் பராமரித்த தாய்க்குத் தாயான ஹெலேனாவுக்குச் சொத்தாகிறது...

ஆயுள்பூராகம் போரிட்டு,புரட்சிக்குப் பாடம் சொன்ன எனது முதிசமாக இதைத்தவிர வேறெதை நீங்கள் எதிர்பார்க்கலாம்?

வீடும் வாசலும் மருண்டு போகும் திசையில் பல்லாக்கு வாகனம் தரித்திருக்க நான் வேதாந்தம் பேசிய பூசாரியல்ல.நான் புதிய யுகத்தின் விடிவெள்ளி.

இளவயதின் இந்தச் செல் நெறி சமுதாயத்தை அதன் உள்ளிருப்போடு இணைக்கும் மிக நேர்த்தியான மனிதவுறவுகளைச் செய்வதின் தொடக்கப் புள்ளியென்பது எதிர்ப்பால் வினையாகும்.

அந்த உணர்வு வாழ்வின் மதிப்பீடுகளை உருவாக்கும் கால அவகாசத்தை மனித மூளைக்குள் பல் கலர்களாக் விரித்து வைத்து இந்த உலகத்தை இயக்குவதில் மிக விரித்தியான உணர்வு நிலையாகவும் அதுவே ஒரு கட்டத்தில் அனைத்துமாகச் சிறப்பெய்கிறது.இங்கே,ஜென்னியும்,ஹெலேனாவும் எனக்குள் தவித்த இரண்டு திசையாய் வடக்கும்-தெற்குமென...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.03.2010

Keine Kommentare: