Mittwoch, Dezember 05, 2012

மனோ கணேசன் வரைத் தொடரும் இரயாகரன் குழுவினது சதி!

//இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்க்க, மனோகணேசனிடம் உள்ள அரசியல் வழிமுறை தான் என்ன? மக்களைச் சார்ந்து போராடும் அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கின்றாரா? இல்லை. மாறாக ஊடகத்தைச் சார்ந்து இனவாத அறிக்கைகள் விடுவதும், தர்க்கங்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டி, தேர்தல் மூலம் பிழைப்பு அரசியல் நடத்துவதை குறிக்கோளாக கொண்டவர். இனப்பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றால், ஆளும் மக்கள் விரோத கூட்டத்தைச் சார்ந்து நிற்பதைத் தாண்டி, மக்களை சார்ந்து வழிகாட்ட எதுவும் அற்றவர். இதைவிட இது போன்ற இனவாதிகளிடம் வேறு மாற்றுவழி எதுவும் கிடையாது.//  -பி.இரயாகரன்

ன்னத்தைச் சொல்ல? இரயாகரனுக்குத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது அழிவிலும்,பாசிசத்துக்குள் அவர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதிலும் ஒரு வசதியான வாழ்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்ததைத் தக்க வைத்தாகவேண்டுமானால் தமிழ்பேசும் மகளுக்கெதிராகச் செயற்பட்டாகவேண்டும்.இதைத்தாம் இரயாகரனது எஜமானர்கள் விரும்புகிறார்கள்."இதைத் தொடர்ந்து மிக நுணுக்கமாகச் செய்யும் இரயாகரன், பலதரப்பட்ட அரசியல் முறைமைகளில் தன்னைப் புரட்சியாளனாகவும்,மார்க்சியவாதியாகவும் காட்டிக்கொள்வதற்குப் படாதபாடு பட்டுக்கொண்டு மக்கள் விரோத அரசியலைத் தொடருகிறார்" என்று, அடித்துக் கூறுவதற்கு மனோ கணேசன் மீதான அவரது காட்டிக்கொடுப்பு-குலைப்பு அரசியல் சாட்சியாகிறது. இத்தகைய, மக்கள் விரோத அரசியலை இவர் கைவிடாதவாறு இவரை வழி நடாத்தும் அந்நிய முகவர்கள் மிக நுணுக்கமாகவே புரட்டுப் புரட்சியை இரயா மூலம் அவிழ்த்து விடுகின்றனர்.இப்போது,இலங்கையில் தோன்றியவொரு "அடுத்த பெயர்ப் பலகை", முன்னிலை சோசலிசக் கட்சியென்ற லொபிக்குழுவை ஆதரித்துக்கொண்டு புதிய முகமூடி தரிக்கும் இராயாவை வினவுதளம் சரியாகவே எடைபோட்டுக்கொண்டதும் வரலாறு.

இதையவர், தொடராத பாதைகளின் வழியெல்லாம் வலிந்து உட்புகுந்துகொள்வதற்கேற்ப எவரையெல்லாம் சிதைக்கவேண்டுமோ சிதைத்துப் புரட்டுசீ பண்ணுவது தொடர்கதையாகிறது.





தமிழ்பேசும் மக்களை ஒடுக்குபவர்களுக்கு ஒட்டுரஞ்சிக்கொண்டு "புரட்சி" பேசிய இந்த அரசியலானது 1986 இல் ஆரம்பமானது. புலிகளால் கைது பண்ணிக் காவலில் இருந்து தப்பியதென்ற ரீல் படச் சுருளோடு இந்த மனிதன் வெகுவேகமாகவே தமிழ்பேசும் மக்களது எதிர்கால விடுதலைக்கெதிரானவொரு பாத்திரத்தைத் தேர்ந்துகொள்கிறார்.அதைத் தொடருவதற்கேற்ப அவரிடம் ஒதுங்கிய பல கோடி இரூபாய் சொத்தானது, யாழ்ப்பாண மக்களது சிறுகச் சேர்த்த செல்வத்தைக் கற்றன் நசனல் வங்கிக் கொள்ளையாகக் கொண்ட "இவரது" இயக்கச் ஸ்ரான்ட்!

கட்ட நசனல் வங்கிக் கொள்ளையின் வழி யாழ்ப்பாண அப்பாவி மக்களது இந்தப்பணத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தந்திரத்தின் வழியாகவொரு காட்டிக்கொடுப்பு அரசியல் புலிகளது பேரத்துள் உருப்பெற்றது.இதன் தொடர் நிகழ்வானது அனைத்தையும் குலைத்தல்,முடியாதபோது உள்வாங்கிச் சிதைத்தலெனும் மரபுக்குட்பட்டது.புலம் பெயர் வாழ்வில் நாம் இவரது அரசியலை வைத்துரைக்கும்போது அதன் இருண்ட பக்கங்களை நாம் பலமாகக் கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளோம்.

இரயாகரனுக்கு நிகராகத் தமிழ்ச் சமூகத்தில் மிகுதியாகப் "புரட்சி" பேசிய பல சுத்துமாத்துப் பேர்வழிகள் இரயாவைக் குறித்து மௌனித்திருப்பது தமது சொந்த நரகல் வாழ்வினது அச்சமாகவே!





இன்று,மாற்றுக் கருத்து,மண்ணாங்கட்டியெனவும்,புரட்சியெனவும் பசப்பும் இந்தக் கூட்டமானது புலம்பெயர் வாழ்வில் சீரழிந்து சின்னா பின்பட்டு நிற்கும் அரசியலுக்குப் பாத்திரமானது.இந்தப் பிசாசுகள் செய்யும் மக்கள் விரோத அரசியலின் அதியுச்ச வடிவமானது இரயாகரனது "புரட்சி" வேசத்துக்குள் மையங்கொள்வதென்பது பலமிழந்து ஒடுங்கிக்கிடக்கும் தமிழினத்துக்கான குரலாகத் தென் இலங்கையில் ஒலிக்கும் ஒரே குரலான மனோ கணேசனைப் பதம்பார்ப்பதிலிருந்து மிக யதார்த்தமாகப் புரியத் தக்கதாகும்.

கடந்த 25 ஆண்டுகளாக இரயாகரனெனும் குறியீட்டுப் பெயருக்குள் ஒளிந்திருக்கும் பெருஞ் சதிகாரக் கூட்டமானது ஒரு தனிநபரை முன்தள்ளிக்கொண்டு தமது ஒற்றன்-குழுச் சதியை மறைத்து வருகிறது.தனிநபர்களது அரசியற் தன்னார்வத்துள் முடுக்கிவிடப்படுவதுமாதிரியானச் சதி அரசியலானது உலக ஒடுக்குமுறை ஜந்திரங்களது ஒரு உறுப்பாகவே இருக்கிறது.இது பேசும் புரட்சியானது வெறும் புரட்டு."தமிழீழ" ப் போராட்ட வரலாற்றுள் ஒடுக்குமுறையாளர்களால் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒற்றர்களது நயவஞ்சக வலையே இந்த இரயாகரன் எனுங் குறியீடாகும்!இஃது,தன்னால் தூற்றப்பட்டவர்களையே பின் தூசு தட்டிப் புரட்சியாளர் "தோழர்" என்று கயிறு திரிக்கும்.சமீத்து உதாரணம்: "பேராசிரியர்" சி.சிவசேகரம் என்று நான் குறிபிடத் தேவையிருக்காதென்று எண்ணுகிறேன்.

கிழக்கைப் பிரிக்கக் கருத்தியல் வலுக்கொடுத்த ஞானத்தையோ அல்லது, தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சாதி வெறியர்களாக் காட்டித் தமிழ்பேசும் மக்களுக்குள் நிலவிய-நிலவும் சாதி முரண்பாட்டைக் கூர்மைப்படுத்திய தேவதாசன்,சோபாசக்தி போன்றவர்களையோ இதற்கும் மேலாக இரயாகரனையோ அம்பலப்படுத்தி, மக்கள் நலன்சார்ந்த அரசியலைச் செய்யும் தகுதி எந்த " மாற்றுக் கருத்தாளருக்கும்" இல்லாதிருப்பது தற்செயல் நிகழ்வல்ல!

புலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களாகவிருந்தாலுஞ்சரி அல்லது தேசிய விடுதலைப் போராட்டஞ் செய்த புலிப் பாசிசமானாலுஞ்சரி மக்களுக்கு விரோதமாகவே தமது அரசியலை வகுத்துக்கொண்ட புள்ளில் ஒன்றுபடும்போது எவரை,எவர் அம்பலப்படுத்த? இதுதாம்,இன்றைய அனைத்து மோசமான சூழலுக்கும் காரணமானது.





நமது மக்கள் இலட்சக்கணக்காக இவர்களாலும்,சிங்கள இனவாத அரசாலும் அழிந்து நாசமான பின்பும் இவர்கள் செய்யும் குழுவாத அரசியலும் அதுசார்ந்த கயமைக் காட்டிக்கொடுப்பும்,குழப்புதல்-குலைத்தல் எனும்அந்நியச் சக்திகளது நரித்திட்டமாகும்.இது, நமது மக்களைத் தொடர்ந்து அநாதைகளாக்குவதாகும்.இவர்கள்,எங்கு திரும்பினாலும் "புரட்சி,புரட்சி,புதிய ஜனநாயகயகம் " என்பதெல்லாம் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் அந்நியச் சக்திகளது லொபி அரசியல் நிகழ்ச்சிக்குட்பட்டதென்று நாம் கணித்தாகவேண்டும். எனவேதாம், தமிழகத்து மக்கள் கலை இலக்கியக் கழகமானது இவர்களது உறவைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி, இவர்களைத் தள்ளி வைத்திருக்கிறது.ஆனால்,புலம் பெயர் தளத்தில் அத்தகைய அரசியலைச் செய்யுந்தறுவாயில் எவரும் இல்லாதிருப்பதென்பது எல்லோருமே, மோசமான இயக்க வாதத்துக்குட்பட்ட மாபியாத் தனமான அரசியலுக்கும், அந்நிய ஆர்வங்களது அரசியல் நிகழ்ச்சிக்கும் உட்பட்டுக் கிடப்பதனாலாகும்.இவர்களே,தொடர்ந்து மாறி மாறிப் புரட்சி புடலங்காயென வகுப்பெடுத்து, நிலத்து மக்களைத் தொடர்ந்து இலங்கையரசின் இராணுவக் காட்டாட்சிக்குள் இருத்தி வைக்க முனைகின்றனர்.

இந்தப் புள்ளியை உடைக்கும் அரசியலை மனோ கணேசன் மிக நிதானமாக நகர்த்துகிறார் என்றே இன்றைய சூழலுள் நம்பியாக வேண்டியிருக்கிறது.வெளிப்படையானவொரு அரசியலை அவர் மட்டுமே வெளிப்படுத்துகிறார்.நேரடியான எதிர்புக் குரலை இராணுவ ஒடுக்குமுறைக்குட்பட்ட மக்களது அடிப்படையுரிமையின்வழி தொடரும்போது எங்கே இனவாதம் வருகிறது?





அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களது குடிசார் அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் பரந்துபட்ட மக்களை அண்மித்துக்கொள்வதென்பது இவர்களது நரித்தனமான திடீர் புரட்சிகர வர்க்கஞ்சார்ந்ததல்ல!அந்நியச் சக்திகளாலும்,சிங்கள இனவாத அரசாலும் பாதிப்படைந்த பலதரப்பட்ட வர்க்கத்தின் நலன்களும் இதுள் கலந்தே இருக்கும்.இத்தயைவொரு சூழலானது யுத்தத்துக்குப் பின் பல தேசத்துள் நாம் பார்த்ததுதாம்.இரயாகரன் போன்றவர்களது எஜமானர்கள் இப்போது அச்சமடைகின்றனர்.இந்த மனோ கணேசனது அரசியலானது பிளவுபட்ட உலக மூலதனத்துள் எந்தப் பக்கஞ் சாயுமென்பதிலுள்ள நெருக்கடியே இப்படிப் "புரட்டுசீ" பேசி அவரை விமர்சிக்கிறது.

மனோ கணேசனுக்குப் புரட்சிகர முகம் அவசியமில்லை. சமவுடைக் கோட்பாட்டுத் தத்துவமும் தேவையில்லை!அதற்கவர் உட்பட்டாகவேண்டுமென விரும்புபவர் மனோ கணேசனது வர்க்கவுணர்வையும் ,அவரது அரசியல் வருகையையும் புரியாதவராகவே இருப்பர்.

என்றபோதும்,ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது குறைந்த பட்சக் குரலாகவிருக்கும் மனோ கணேசனது அரசியற் பாத்திரமானது இன்றைய சூழலில் அதி முக்கியமானதென்பது பாதிக்கப்பட்ட-பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது தெரிவாகும்.இந்தப் பாத்திரம் அதே மக்களுக்கெதிராகவும் மாறிக்கொள்ளும் அல்லது மக்களைச்சார்ந்து முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்கட்காக நகர்ந்து கொள்ளும்.இதைத் தீர்மானிப்பது மக்களது குடிசார் அமைப்பாண்மைக்குட்பட்ட பொருண்மிய வாழ்வாகும்-அதன் நிலையாகும்!பஞ்சப் பரதேசிகளான தமிழ்பேசும் மக்கள் தமது வலயத்துள் அனைத்து வாழ்வாதாரத்தையுமிழந்து, தொடர்ந்திருக்கும் பல்லாயிரம் இராணுவத்துக்கேற்ப உற்பத்தியைச் செய்து, அதை இராணுவத்துக்கே தாரவார்க்கும் "உறுப்புகளாக" வைத்திருக்கும் இலங்கையின் அரச ஆதிக்கத்துள் மக்களது வாழ்நிலை "இராணுவப் பொருளாதாரவுற்பத்திச் சக்திகள்-உறவுகளெனும் நிலைக்குள்" முதலாளிய வர்க்க விளக்கம்-உணர்வு-உறவுகள் குறித்த உரையாடல்கள் புரட்டுத் தவிர வேறென்ன? இது, கடைந்தெடுத்த கயமைத்தனம்.

புலிகளது அழிவுவாத அரசியலது தெரிவில் இலங்கையரசானது பல மடங்கு அராஜகவாதக் கட்சியாதிக்கத்தை இலங்கைக்குள் சாத்தியமாக்கியது.புலி வழியான போராட்டமானது இலங்கைக் கட்சி, அரசியல் வரலாற்றில் அனைத்துப் பூர்ச்சுவாக் கட்சிகளையும் பெரும் நிதி மூலதனதைக்கொண்ட கட்சிகளாக்கி விட்டது.ஆயுதக் கொள்வனவிலிருந்து போராட்ட-எதிர்ப்போராட்ட அரசியல்வரைப் பல பில்லியன் இரூபாய்கள் வருமானமிக்க அரசியலாக இலங்கை அரசியல்நிலவரம் மாற்றப்பட்டபின் அனைத்துக் கட்சிகளும்,அமைப்புகளும், பிளவுபட்ட உலக நிதி மூலதனத்தோடான தமது சமரசத்துக்குட்பட்ட அரசியலது தெரிவில் தொடர்ந்து மக்களை ஒட்ட மொட்டையடிக்கும்போது மனோ கணேசனது பாத்திரம் எங்ஙனம் அமைய வேண்டுமெனப் புலம் பெயர் மண்ணிலிருந்து புரட்சி, நிதிவைத்துப் பிரசுரங்கள்,கட்சி நிதிகளெனச் செய்துவரும் ஒரு மாபியாக் கூட்டமானது வகுப்பெடுப்பது எவ்வளவு மோசடியானது?





இலங்கைப் பாசிச இராணுவத்தால் சூழப்பட்ட இலங்கை மக்களது குறைந்த பட்ச ஜனநாயத்துக்கான குரலாகவும்,அவர்களது நலன்களையுயர்த்திப்பிடிப்பதற்கான தெரிவில் அன்றாட நெருக்குதலைத் தடுத்து, உலகுக்கு அம்பலப்படுத்தும் சிறு பொறியாவிருக்கும் மனோ கணேசனைப் பிழைப்புவாதியெனப் பாயும் இரயாகரனை என்னவென்பது?

 இப்படி எத்தனை மனிதர்களைக் குலைத்துச் சிதைத்துத் தமது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்களது எதிர்காலத்தையே நாசமாக்கினர்?, இந்தக் கூட்டம் புலியினது சதி அரசியலுக்கு மகுடஞ் சூட்டவில்லையா?,முள்ளி வாய்க்காலில் புலி - அரச போர் ஜந்திரங்கள் மக்களை வேட்டையாடியபோது அதைத் தியாகமெனப் பறைகொட்டிய பிழைப்புவாதிக்கு நிகராக இன்னொருவர் உண்டா?

முட்டாள்த்தனமாக மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு,இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதாரப் பொறிமுறைகளையும் அதன் உட்பிரிவுகளுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும் புரியாதவொரு பின் தங்கிய புரட்டல்வாதிக்குத் தனது எஜமானர்களது கட்டளைக்கேற்ப இயங்குவது அவசியமாகிறது. மக்களுக்கான குரலை-மக்களது இயலாமைச் சூழலின் முன் நகர்த்தும் நிலத்து அரசியற் சிறு பொறிகளையும் சீரழித்துச் சிதறிடிப்பது அவசியமாகவிருக்கிறது.இந்த இரயாகரனது பினாமித்தனமான செயற்பாடானது மக்களைத் தொடர்ந்து அடிப்மைப்படுத்தும் அந்நிய வியூகங்களால் வழி நடாத்தப்படுவதென்பதை நாம் எப்போது புரியப்போகிறோம்.

இன்னும்,எத்தனை விதமான வேட்டைகள் மூலம் நமது மக்களது குறைந்த பட்ச அரசியற் குரல்களை இந்த இரயாகரன் வேட்டையாடப் போகின்றார்?

புலிவழி நிர்க்கதியாக்கப்பட்ட நிலத்து மக்களும்,புலத்து மாற்றுக் கருத்தாளர்களென்ற இயக்கவாத மாபியாக்களால் பழிவாங்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட புலத்து அகதித் தமிழர்களும் திடீர் புரட்சிக்குத் தயாராகி, மகிந்தாவைச் சாய்க்க வேண்டுமோ?புலத்தில்,அனைத்தையும் குழப்பி, அதி வேகத்தில் குழுவாதப் பெயர்ப் பலகைக் கட்சிகட்டிய( புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ) தேவையே அந்நிய எஜமானர்கள் தம்மைத் தொடர்ந்து ஏஜென்டுகளாகக் கருதிக்கொள்வதற்கும், எதிர் புரட்சிக் கோட்டாவைத் தம்மிடமே தந்து நம்பியிருக்கவுமென்பது நாம் அறியாததா?

30 ஆண்டுகால நரவேட்டைக்குட்பட்டவொரு இனமான தமிழ்பேசும் மக்கள் தம்மை நிலைப்படுத்திக் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களையே தரிசிக்கவிடாது புரட்சி, யுத்தம் எனப் படம் காட்டி இலங்கைப் பாசிச இராணுவத்தின் இருப்புக்காகக் காரியமாற்றும் இந்தக் கபோதிகள் மனோ கணேசனைக் குறித்துப் பேசும் அரசியல் தார்மீகந்தாமென்ன?

இரயாகரனால் பிழைப்புவாதிகளெனச் சொல்லப்பட்டவர்கள் பலர். குறிப்பாகப் பேராசிரியர் சிவசேகரம் இப்போது, இரயாகரனது நிதி வழங்கலுக்குட்பட்டவொரு தோழராகியுள்ளார்.அவரோ இரயாவின் எஜமானர்களுக்கு " இரயாகரன் தொடர்ந்து செய்யும் சதி அரசியாலானது பலரை உட்கொண்டு சிதைக்கும் தொழிலை (இரயாகரன் குழுவினது எதிர்ப் புரட்சி ) மிகச் சாதுரியமாக நடாத்துகிறார்" என்று, அந்த எஜமானர்கள் நம்புவதற்கானவொரு குறியீடாகிப்போனார். இதன்வழி, இரயாகரன் குழுவினது எஜமானர்கள் தொடர்ந்து தமது சதி அரசியலைச் செய்ய இராயாவுக்குத் தொடர்ந்து பட்டயமெழுதிக்கொடுத்திருப்பதற்கு மேலாக இவர்களென்ன புரட்சியா செய்யப் போகின்றனர்?அதே குலைப்புச் சிதைப்பு-மக்கள் விரோதச் சதி அரசியல்!,பாதி வழிவரை கூட்டிச் சென்று கொலை செய்யும் இந்தக் கூட்டமா புரட்சிக்குரிய புற நிலவரத்தைப் புரிந்து நடக்கும்?

"மக்கள் விரோதிகளைத் தொடர்ந்தும் மௌனிப்பதால் நாம் வளர்த்து வடிவமெடுக்க விடுகிறோமென்பதைப் புரியும்போது அனைத்தும் ஓர் நாள் அம்பலத்துக்கு வரும்.அப்போது,வரலாற்றில் இத்தகைய சதியாளர்கள்,மக்களைக் காட்டிக்கொடுப்போர் இருந்த இடமே தெரியாது மறைந்து போவார் " களெனச் சொல்லும் காலமும் தொலைந்தே போச்சு-இதுதாம் இன்றைய அவலம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.12.2012
   

Keine Kommentare: