புலத்துத் தலித்துவக் குழுக்களது"நாம் இலங்கையர்கள்"-கேள்விக்குட்படுத்தும் சோபாசக்தி.-சில குறிப்புகள்.
சோபா சக்தி இக்கட்டுரையினூடாகப்(காமனி பாஸ் தவறு செய்துவிட்டார்) பலருக்குப் பதிலளித்திருக்கிறார்.இது தனியே முன்னிலைச் சோசலிசக்கட்சிகானதல்லத் தோழர்களே-அதன் சம உரிமை இயக்கத்துக்குமானதல்ல!இன்று,10.02.2013 ஞாயிற்றுக் கிழமை, முன்னிலைச் சோசலிசக் கட்சியின் பரப்புரைக் கூட்டம் பிரான்சில் நடைபெறும் இந்தப்பொழுதில் இக்குழுக்களும் [இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ]அவர்களோடு தோழமையாக "இன ஐக்கியங் குறித்து"த் தமது தோழமைக் கரங்களை இணைத்துக்கொள்வர்!சோபாசக்தியின் கட்டுரையின் கருத்துக்களை, அவர்களுக்குமான விமர்சனமாக்கி அதை வளர்த்தெடுக்க வேண்டும். பங்குபெறும் தோழர்கள் இது குறித்து நீண்ட விவாதங்களை வைத்து, இவர்கள் செய்யும் மக்கள் விரோத அரசியலையும்,இலங்கைப் பாசிச அரசுக்கான ஒத்துழைப்பையும் பரவலாக அம்பலப்படுத்தவேண்டுமெனக் கோருகிறேன்.
எனவே,சோபா சக்தியின் இக்கட்டுரையின்மீது மிக நேர்த்தியாகக் கவனத்தைக் குறித்து அதைச் செழுமைப்படுத்துவது அவசியமானது. விடுபட்டவை,அல்லது, தவிர்க்கப்பட்டதை நான் ஓரளவு சுட்டிக் காட்டிவருகிறேன்.அத்தோடு,முன்னிலைச் சோசலிசக் கட்சியை முன்னிறுத்திச் சொல்லப்படும் சோபாசக்தியின் இந்தக் கருத்துக்கள் யாவும் இதுவரை புலத்தில் செய்யப்பட்ட "நாம் இனம் கடந்து இலங்கையர்கள்"என்றுணர்ந்து நாட்டைக் காக்கவேண்டும்" என்ற பரப்புரைகள்மீதான அனைத்துக் கட்சிகள்-குழுக்களுக்குமே இஃது தனக்குள் பதிலைப் புதைத்து வைத்திருக்கிறதென நாம் உணரவேண்டும்!
//சம உரிமை இயக்கத்தின்அடிப்படைத் திட்டத்தின் 11வது பிரிவு இவ்வாறு சொல்கிறது. ‘பிறப்புச் சான்றிதழிலும் மற்றும் தேசிய அடையாள அட்டையிலும் இனம்: சிங்களம், தமிழ், முஸ்லீம் மற்றும் இந்தியத் தமிழர் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இலங்கையர் எனக் குறிப்பிடுவதற்காக மக்களோடு சேர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தல்.’
ஆக, இங்கே திட்டவட்டமாகவே இலங்கையில் இனங்கள் என்ற பேச்சே வேண்டாம் நாம் எல்லோருமே இலங்கையர்கள் என்ற முடிவுக்கு சம உரிமை இயக்கம் வந்துவிட்டது. ஆனால் இந்த முடிவை சம உரிமை இயக்கம் வந்தடைவதற்குப் பல வருடங்களிற்கு முன்பே மகிந்த ராஜபக்ச வந்தடைந்து விட்டார் என்ற உண்மையையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இந்த வாரம் திருகோணமலையில் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சனாதிபதி “இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை உள்ளது. இன மற்றும் மொழிரீதியில் பிரிவினைக்கு இந்த நாட்டில் இடமில்லை நாம் எல்லோரும் இலங்கையர்” என்றார். இனவாத மகிந்த ராஜபக்சவின் கூற்றுக்கும் ‘இடதுசாரி’ சம உரிமை இயக்கத்தின் கூற்றுக்கும் இடையில் ஓர் எழுத்துக் கூட வித்தியாசமில்லையே. மகிந்தவின் கூற்றிற்குப் பின்னால் மறைந்திருப்பது பேரினவாதம் என்றால் சம உரிமை இயக்கத்தின் கூற்றுக்குப் பின்னால் மறைந்திருப்பது வேறொன்றா என்ற கேள்வி எழுத்தானே செய்யும். தேசிய இனங்களின் இருப்பை இவர்கள் இவ்வாறு மறுக்கும் போது அதற்கு நேர் எதிராக ‘தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை’ என்ற மார்க்ஸிய அரசியல் கருத்தாக்கத்தையும் இலங்கையில் அதனது பொருத்தப்பாட்டையும் நாம் இவர்களிற்கு நேராக உறுதியுடன் உயர்த்திப் பிடிக்க வேண்டியிருக்கிறது."-சோபா சக்தி(காமினி பாசு தவறு செய்துவிட்டார் கட்டுரையில்...)
புலத்து அரசுசார் குறுங் குழுக்கள்-தனிநபர்கள் மற்றும் அந்நிய அரசுகளது உளவு ஏஜென்டுகள் கட்டவிழ்த்துவிடும் "இன ஐக்கியம்"சார் செயற்கையான அரசியல் கோரிக்கைகள்-தூண்டல்களெனத் தொடரும் பல சதிகளையும் இக்கட்ரையின்வழி சோபா சக்தி மறுத்தொதுக்கிறார்.இதுதாம் சோபாசக்திக்கும்,தலித்துவக் குழுக்களான "தேவதாசன்-சுகன் குழுக்களுக்கும்" உள்ள பாரிய வித்தியாசம்.ஒரு படைப்பாளியெப்போதும் பரந்துபட்ட மக்களுக்குள் கால் புதைத்து அவர்களது நலனுக்காகவே இயங்கவேண்டும்.அப்படி இயங்கும்போதுதாம் நமக்குள்ளும் ஒரு மாக்சிம் கோர்க்கி உருவாக முடியும்.சோபா சக்தி அப்படி உருவாக வேண்டுமென்பது வரலாற்று நியதி.அதையவர் இத்தகைய கட்டரைகளின்வழி ஆற்றுவாரென்று எனது மனதில் ஒரு பொறி தட்டுகிறது.இதைக் காலந்தாம் தீர்மானிப்பதல்ல. அவரது வாழ்நிலைதாம் தீர்மானிக்குமெனவும் நாம் நம்பித்தாம் ஆகவேண்டும்.
இது, இங்ஙனமிருக்கட்டும்.
அடுத்துச் சில குறிப்புகளை பார்ப்போம் தோழர்களே!
முள்ளி வாய்க்காலுக்குப் பின் யாழ்ப்பாணஞ் சென்ற தேவதாசன்-இராகவன்(முன்னாள் புலிகளது இயக்க-மத்திய குழுவின் முன்னணித் தலைவர்)மற்றும், சுகன் போன்றவர்கள் யாழ்பாணத்திலியங்கும் இந்திய-இலங்கை அரசுகள்சார் தமிழ்த் தொலைக் காட்சியொன்றில் தோன்றித் தமது பேட்டிகளை வாரி வழங்கினர்.அப்போது, யாழ்ப்பாணத்தில் கந்தோரோடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று ஆவணமான புத்தர் சிலைகள் குறித்துக் கருத்துச் சொன்ன வரலாற்று மேதை இராகவன்: "இவைகளெல்லாம் உறுதிப்படுத்தும் உண்மைகள், சிங்கள மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னமே இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான ஆதாரம்" என்றார்.
இதையும் மீறித் தேவதாசனும்,இராகவனும் அழுத்தமாகச் சொன்ன இன்னொரு கருத்தானது"தமிழ்பேசும் மக்கள்,தமிழர்கள்என்ற அடையாளத்தோடு செயற்படாது நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்-நாட்டை வளர்க்கவேண்டும்-காக்கவேண்டும்" என்றார்கள்.
இஃது, 2010-11 க்குள் நிகழ்ந்த இலங்கை அரசு-இந்திய வியூகத்தினது தயாரிப்பாகவே அன்று நான் பிரித்துடைத்துச் சொன்ன பதில்.இது குறித்துத் தூண்டிலிலும்,ஜனநாயகத்திலும் நான் பதிவுகளைப் பதிந்தே வைத்திருக்கிறேன்.
இராகவனுக்குத் தமிழ் பேசுபவர்களும் அந்தந்தக் காலத்தில் மிகப்பெரும் பௌத்தர்களாகவும்,அதன் பண்பாட்டாளர்களுமாக வாழ்ந்த வரலாறு தெரியவே இல்லை!. இவர்கள்,கருத்துக்களைச் சிங்கள மேலாதிக்க அரசுக்கேற்ப உதிர்த்து நமது மக்களது அடையாளங்கள் உதிர்ந்த சிங்கள மக்களினங்களோடிணையும் திட்டத்துக்கமைய சிங்கள மேலாதிக்கத்தை மூப்படைய வைப்பதில் அரசோடிணைந்து முனைந்தது இத்தகைய முன்னிலைச் சோசலிசக் கட்சியினது வரவுக்கான ஒத்தழகைபாகவே பார்க்கப்பட வேண்டும்.இதைச் சீனாவினது இனங்களுக்குள் சீனா நிகழ்த்தியதை நாம் அறிய வேண்டும்.இதை அறிய,நான் மொழிபெயர்த்த சீனக் கம்யூனீசக் கட்சின் மத்திய குழுவுறுப்பினருது[இலீ யூன்று (Li Junru பி. 1947) சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (PKKCV) என்ற நிலை குழு நீண்டகால உறுப்பினராக உள்ளார். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி,கட்சி வரலாற்றியல் ஆராய்ச்சி மையத் துணை இயக்குனராகவும்,சீனக் கட்யூனிசக் கட்சியின் உயர் நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் அவர் இருக்கிறார். ] பேட்டியை இங்கே வாசிக்கலாம்.
இன்று,சோபா சக்தி இதையெல்லாம் சோசலிசக் கட்சியை முன்னிலைப்படுத்திக் குறிப்பதென்பது சரியானதே. இத்தகைய கட்சிகள் பெரும் நிறுவனமாகவெழுந்து பெருங் கட்சி ஆதிக்கத்தின்வழி இலங்கை மக்களில் பெரும்பகுதியை நேரடியாகவே இனவாதத்துக்குள்ளும், பேரினவாதத்துக்குள்ளும் முடக்கியவர்களென்பதும்நாம் அறிந்தது. கூடவே, மேற்சொன்ன தலித்துவவாதிகளது இலங்கை சார்"நாம் அனைவரும்" இலங்கையர்களென்பது குறித்துச் சோபா சக்தி இதுவரை அடக்கி வாசித்தது,இதை விரிந்த தளத்தில்புரியமுனைந்கொண்டு,இஃது, அரசின் எடுபிடி வேலைக்கானதென்பதையும், நிறுவனப்பட்ட அமைப்புக்குள் தலித்துவக் குழுக்களது அரசுசார் கருத்தாண்மையைக் கொணர்ந்து விமர்சனத்தை ஆதிக்கச் சக்திகளுக்கான எதிர்ப்பரசியலாக்குவதற்கென்றே நான் நம்புகிறேன்.
பலதரப்பட்ட குழுக்கள்-தனிநபர்கள் உதிர்க்கும் கருத்துக்கள்மீது உடனடி எதிர்க் கருத்தாடலது வினை சந்தர்ப்பத்தில் தனிநபர் வாதமாகவும்,உணர்வு வழிப்பட்ட உரையாடலாகவும் மாறும் அபாயத்தைத் தவிர்த்து இத்தகைய குழுக்கள்-தனிநபர்களுக்குமான பதிலாக இந்தக் கட்டுரையின்வழி சோபா சக்தி பதலளித்துத் தமிழ்பேசும் மக்களதும்,மற்றும் இலங்கைச் சிறுபான்மைத் தேசியவினங்களதும் நியாய உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதென்பது வரவேற்கப்பட வேண்டும்!
அத்தோடு,இலங்கையின் உள்ளக அரசியலது தெரிவினூடாகவுருவாகிய இத்தகைய குறுங்குழுவாத அரசுசார் கோரிக்கைகளை சர்வதேச அரசியலுறவுகள்-ஒத்துழைப்புகளது கடந்த கால நடவடிக்கைகளோடிணைத்து இலங்கைக்குள் மையமுறும் அந்நிய நலன்களது அரசியல்-இயக்க அமுக்கப்போக்குகள்-ஊக்குவிப்புகளையும் இக்கட்டுரையோடு பொருத்திப் பார்த்து, எதிர்ப்பரசியலாக வளர்த்தாகவேண்டும்.
இதுவேதாம்,முன்னிலைச் சோசலிசக்கட்சி,தலித்துவக் குழுக்கள்,மற்றும் அரசுசார் அமைப்பகள்,என்.ஜீ.ஓ.க்கள்,தனிநபர்களது தமிழ்பேசும் மக்கள்மீதான அரசியல் சதியை முறியடிக்கும் முன் நிபந்தனை!.தமிழ்பேசும் மக்களதும்,மற்றும் சிறுபான்மை இனங்களதும் உரிமை மறுப்புக்கான ஜனநாய பூர்வமான எதிர்ப்பரசியலை ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்துக்கான பாதுகாப்புக்கான அரசியல் முன்னெடுப்பாகவும்,அதையே உரிமைக்கான தார்மீகக் குரலாக்கவும்"இங்ஙனம் ஆக்க" முடியும்.
இங்கே, சோபாசக்தி,ஒரு படைப்பாளியாகத் தனது வரலாற்றுக் கடமையைச் செய்துள்ளாரென்பதை மறுக்க முடியாது!
அதுள்,சர்வதேச அரசியலை, இலங்கைக்குள் வன்முறைசார் அரசியலாகப் பிரதிபலிக்க வைக்கும் அந்நிய நலன்களை ஏனோ பொருத்தத் தவறுகிறார்.இதைத் தோழமையோடு நாம்தாம் சுட்டிக்காட்டியாகவேண்டும்.
அந்நியச் சக்திகளது கைக்கூலிகளை மக்கள் முன் இனங்காட்டி நமது மக்களது அரசியற்தலைவிதியைத் தமது நலனுக்காகத் திசை திருப்பிக் கட்சி-இயக்கம் கட்டி நம்மைத் தொலைக்கும் முன்னாள் வரதராஜப் பெருமாள் மற்றும் சகல இயக்கங்கள் போல இனிமேலும் நாம் எவரையும் நமது அரசியலைத் தீர்மானிக்க வைக்க அனுமதிக்க முடியாது.
நமது மக்களே தமது அரசியலைத் தமக்கான திசை வழியில் நகர்த்த வேண்டும்.
"ஆரு குத்தியும் அரிசியானால் சரி " என்ற பழைய மேம்போக்கான விட்டேந்தி மனோபாவத்தை விட்டு, நமது மக்களது எதிரிகளையும்-பிரதான முரண்பாட்டையும் வலியுறுத்தி, எமதுரிமைகளை நாம் வென்றெடுத்தாகவேண்டும்.
இதுள், சோபா சக்தி மிக முக்கியமான தரவுகளை பரந்துபட்ட ஆதாரத்துடன் சொல்லியிருப்பது இந்தக் குறுங்குழுக்களது சப்பைக்கட்டைத் தோலுரிப்பதாகவும் இருக்கிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.02.2013
Keine Kommentare:
Kommentar veröffentlichen