Mittwoch, Oktober 24, 2007

ஆருக்காய் அழிந்தீர்?

ஆருக்காய் அழிந்தீர்?


தேகம் நோகிறது
திரண்டவென்னுறுதி குலைகிறது
உயிரே,உறவே,என் தெவிட்டாத தமிழே!
இந்தத் தேகம் ஆடுதே,அதிருதே
ஆருக்காய் அழிந்தீர்?

போருடல் யார்த்த புது மொழியே
துன்பப் பெருவெளியில் தோற்காத உயிரே
தோள் முறியா என் தேசமே,
தூணே,துயரறியாத் துணிவே!

நான் தோற்கிறேன்
தொலைவில் சென்றவரே
தோன்றீரோ மீள
என் தேசக் கருப்பையில்?

என்னிருப்பே,
ஏழ்மைதாங்கிய திடமே
தீனுக்காய் உயிர்த்திருக்கும் எனக்குள்
தீயாய் சுடும் தீபங்களே!

விழுப் புண்காவிச் சோர்ந்த உடலுரியச்
சொரியும் பூவில் உடல் மறைத்துங்களை
தோள் கூடிக் காவத் தெருவில் நிற்க
புதைத்தனரோ புத்தர்கள் புதை சேற்றில்?

பொல்லாத பேயரசு
பெயருக்கும் மனிதமற்ற
மடை நிலமாய் மாறிய இலங்கை
கடை நிலையாய்க் கண்ணீரற்ற மண்

புலம்பெயர்ந்த மனங்களின் மகிழ்ச்சி
விலையுயர்ந்த விமானத்தின் அழிவுக்கா?
என் விலை மதிப்பற்ற வீரத் தேச பக்தர்களே
உங்கள் மரிப்பில் மகிழ்வு தொலைய
மார்பெல்லாம் வலியதிகம்
விழிகொட்டும்,வாய் புசத்தும்

என் மகனே,மகளே!
எதற்காக இந்த வேள்வி?
மனம் முடங்கிய எமக்காக
மெல்ல நாமிட்ட பிச்சைக்காய்?

வேண்டாம்!
இத்தகைய வேதனையில்
வெற்றியொன்று வேண்டாம்!!
வீரர்களே விலங்ககற்ற
வேளையொன்று கூடும்
வேல்காவித் தோள் சேர
நூல் காவும் உங்களுறவும்!

தேசம் தொலைத்து
நேசம் அழித்து
தொலை தூரம் சென்று
சருகாய்ச் சாகும் என் உயிருள்
அதிர்வாய்,அக்கினியாய்
உதிர்ந்த உங்களுடலம்!

மெய்யே,மேன்மையே
மிகப் பெரும் வலுவே-என்
விருட்சமே,விழுதே-வீரமே!
துயரத்துள் என் மனம் பாரீர்!

கார்த்திகைக் கரும்பே
கண்ணீரின் பெருமிதமே
காலத்தால் அழியாக் காவியங்களே
காதலித்த மண்ணுக்காய்
வீழ்ந்தீரோ வீர முத்தத்துடன்!

தீராத சோகத்தில்
திக்கற்ற இந்த இழி மனிதன்
தானாடாதபோதும்
தன் தசையாடக் கவி பாடித் தமிழ் நோக
உணர்விட்ட பாதையொன்றில் தனி மரமாய் வான் நோக்கி

வாறீரோ என் வசைகளுக்குள்
ஒரு வாழ்த்துக் கேட்க?
வதங்குகிறேன்,
வாயெடுத்து ஓவென்ற ஓலத்தோடு
சளி சிந்தும் நாசித் துடைப்பிலும்
இந்தக் கிழட்டு விரல்கள்
தமிழழுத்தத் தரணம்வைத்த என் வாரீசுகளே
வாருங்கள் தேசத்து விடியலுக்குள்!

வர்க்க நிலைக்குளென்னுணர்வை வைத்து வதைக்காதீர்
தேசியத்தைச் சொல்லியும்
என்னைத் தாழ்த்தாதீர்!
இதுவென் சுயமாக்கப்பட்ட வலி.
சொன்னாலும் புரியாத தொப்புளுறவு.

தேசத்துக் குழந்தைகளின் உதிர்வோடு
அரசியற் சடுகுடுவா,
சாணாக்கியமா?-வேண்டாம்!

விடியலுக்கான வீரப்போரொன்றைப்
பொழுதோடு போற்றிக்
களமாடும் நிலையொன்றில்
புரட்சிக் கீதமொன்று ஓலத்தை மறைக்க
சீலத்தில் தேசமகள் திளைக்கத் தோன்றுக மீள!

உங்கள் புதுவரவுக்காய்
உழைப்பவர் மகிழ்வார்
உயிரினுள் வைத்துத் துதிப்பார்
தோன்றுக எம்தோள் சேர்ந்து
தேசத்தைக் காக்க

அதுவரையும்
சென்றுவாருங்கள் என் செல்வங்களே!
சோகச் சுமையாய்
துயிலுரிந்த உங்கள் உருவங்கள்
நெஞ்சில் கீறிய வலி ஆறுவதற்குள்
வாருங்கள் புரட்சிக் கீதம் இசைத்து!


ஜனநாயகம்
24.10.2007
இரவு மணி:22.16

10 Kommentare:

சயந்தன் hat gesagt…

செய்தியறிந்த சில மணித் துளிகளில் இராணுவ இணையங்களில் இவர்களின் வித்துடல்களைப் பார்க்க நேர்ந்த பிறகு..

பூரிப்பும் இல்லை
பெருமிதமும் இல்லை
மகிழ்வும் இல்லை..

இவர் பற்றிச் சிந்தியாது அடிச்சாங்கையா அடி என இனிப்புக் கொடுத்து மகிழ்ந்தோரை என் நாவால் திட்ட முடியாத ஆதங்கத்தில்

அமைதி மட்டுமே காக்க முடிகிறது.

theevu hat gesagt…

நன்றி

P.V.Sri Rangan hat gesagt…

நன்றி,சயந்தன் மற்றும் தீவு.என் வலியைச் சொன்னேன்-அழுகையைப் பகிர்ந்து கொண்டேன்.

Anonym hat gesagt…

/வேண்டாம்!
இத்தகைய வேதனையில்
வெற்றியொன்று வேண்டாம்!!/
இப்படித்தான் எனக்கும் தோன்றியது.
..........
இப்படியான ஒரு அந்தரமான பொழுதில்தான், 'தனிமையென்பது சொற்களோடு இடையறாது போரிட்டுத் தோற்றுக்கொண்டிருப்பது'ங்கூடஎனவென்னை எழுதவைத்தது. நன்றி.

P.V.Sri Rangan hat gesagt…

//...இப்படியான ஒரு அந்தரமான பொழுதில்தான், 'தனிமையென்பது சொற்களோடு இடையறாது போரிட்டுத் தோற்றுக்கொண்டிருப்பது'ங்கூடஎனவென்னை எழுதவைத்தது//

அன்பு டி.ஜே. கருத்துகளுக்கு நன்றி!என் நிலமையும் அதுவே!

Anonym hat gesagt…

ஜனநாயகம்,
//.....வர்க்க நிலைக்குளென்னுணர்வை வைத்து வதைக்காதீர்
தேசியத்தைச் சொல்லியும் என்னைத் தாழ்த்தாதீர்!.......//
உண்மையான வரிகள்.
மனித நேயத்துக்கு எக்கட்டுக்களாலும் கட்டுப்போட முடியாது தான்.
அது அவர்களை தாழ்த்துவது போலாகிவிடும்.
இறந்து போனவர்களின் கருதுகோள்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் அப்பால் அவர்கள் என்ன நினைத்து கொண்டு இறந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது தான் மிகவும் கஸ்டமாக இருக்கிறது. கருத்துக்களை மீறிய யதார்த்தம் அவர்களை போராடச்சொல்லிற்று. அவர்கள் நிச்சயமாக தம் மக்களை நினைத்துகொண்டே களம் புகுந்திருப்பார். பல்வேறு தெரிவுகள் கொண்டியங்கும் வாழ்வு தனது ஏதோ ஒரு புள்ளியில் தனக்கான மனவெளியில் இவ்வாறான தெரிவை அவர்களுக்கு வழங்கிப்போயிற்று. அவர்கள் சந்தோசமாகவே தமது தெரிவைக் கையகப்படுத்திக் கொண்டார்கள்.
தற்கொலைப் போராளிகளை நிராகரிப்பவர்கள், என்றைக்குமே தற்கொலைப்போரளிகளுக்கு முன்னால் உள்ள தெரிவைபற்றி யோசிப்பதே இல்லை. அவர்களுடன் உரையாடும் போது தான் அவ்வலியை உணர்ந்து கொள்ள முடியும். கருத்தியலைக் கட்டிக்கொண்டு அழுகிறவர்களால் எந்த வலியையும் உணர்ந்து கொள்ளவே முடியாது.

-அமீபா-

P.V.Sri Rangan hat gesagt…

அன்பர் திவாகர் கவனத்துக்கு,

அன்பரே தங்கள் பின்னூட்ட எதிர்விiயானது இக்கவிதையின் உட்பொருள்காணாக் குதர்க்கத்தோடு இருக்கிறது.தற்கொடைப் படை குறித்து நாம் மிகவும் அறிவோம்.அது குறித்து விவாதத்தைப் பிறதொரு சந்தர்ப்பத்தில் வைப்போம்.மற்றும்படி...விமானங்கள் அழிந்தால் அவர்கள் வேண்டலாம்.அதைக் கொடுப்பதற்கே இந்தியாவே முதலிடத்திலிருக்கும்போது சிங்கள இனவாத அரசுக்கு என்ன குறை?

அடுத்து,மனிதாபிமானமென்பதும் வர்க்கம் சார்ந்ததுதான்.

ஒடுக்கப்படுபவர்களுக்கும் ஒடுக்குபவர்களுகக்குமிடையில் பாரிய இடைவெளியுண்டு.

இன்றுவரை ஈழத் தேசியவிடுதலைப் போராட்டத்தில் புலிகளின் அடிமட்டப் போராளிகள் தேசத்தை நேசித்தே போராடுகிறார்கள்.அது, குறித்து அவர்களைத் தேசபக்தர்கள் என்பது எனது பார்வை.இதுள், இருவேறு கருத்து என்னிடமில்லை.


சிங்கள ஒடுக்குமுறைக்கு முகம்கொடுக்கும் வறிய தமிழ்பேசும் மக்களின் குழந்தைகள் அவர்கள்.


உங்களது 21 தர 14 கணக்குச் சரிதான்.

ஆனால்,அந்தப் 14 கின் பக்கம் நியாயமில்லை.அவர்கள் 21 இன் பக்கத்தை ஒடுக்கும்போது, எங்கே இருக்கிறது மனிதாபிமானம்?


கோணேஸ்வரியின் கவட்டுக்குள் குண்டு வைத்தவர்கள் மரணிக்கும்போது வெளியிலிருப்பவர் அனுதாபப்படலாம்.ஆனால்,கோணேஸ்வரிகளோ அல்லது அவர்களின் குடும்பமோ சிங்கள வன்கொடுமை இராணவத்தின்மீது இரக்கப்படுமா அல்லது வெறுக்கப்படுமா என்பதை நீங்களோ அல்லது நானோ அல்ல தீர்மானிப்பது.அது அன்றைய ஒடுக்குமுறைச் சூழலே தீர்மானிப்பது.இது புரியாததல்ல உங்களுக்கு.எனினும்,இந்தத்தரணத்தில் நீங்கள் செய்வது என்னவென்றறிவதில் எனக்குச் சிக்கலில்லை!

எனவே,உங்கள் பின்னூட்டத்தை வெளியட முடியாது!அதாவது,அப்பின்னூட்டம் கவிதை மீதான எதிர்வினையல்லாததும் ஒரு காரணமே.

P.V.Sri Rangan hat gesagt…

அமீபா,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி-வணக்கம்!

Unknown hat gesagt…

NghuhLtJ tho;tjw;Nf. tho;tNj NghuhLtjw;F vd;w Nfhl;ghil gpwu; kPJ Rkj;jp nfhiyfisAk;> kuzq;fisAk; jaT nra;J nfhz;lhlhjPu;.

P.V.Sri Rangan hat gesagt…

Thaksha hat gesagt...
//NghuhLtJ tho;tjw;Nf. tho;tNj NghuhLtjw;F vd;w Nfhl;ghil gpwu; kPJ Rkj;jp nfhiyfisAk;> kuzq;fisAk; jaT nra;J nfhz;lhlhjPu;.//

11:23 AM

போராடுவது வாழ்வதற்கே. வாழ்வதே போராடுவதற்கு என்ற கோட்பாடை பிறர் மீது சுமத்தி கொலைகளையும், மரணங்களையும் தயவு செய்து கொண்டாடாதீர்.

தாக்சாவின் எதிர்வினையானது யுனிக் கோட்டுக்கு மாற்றித் தரப்படுகிறது.