Sonntag, April 01, 2012

ஜனநாயகம்,பன்முகத்தன்மை பேசும் புலிப்பிரமுகர்கள்.

[இக்கட்டுரையானது பரவலாகப் பேசுவது அரசியல்-அராஜகம் குறித்து,இயக்கஞ்சார்ந்த தனிநபர்களது பயங்கரவாதச் செயற்பாடானது கருத்தியல்ரீதியாகவும் புரியப்படவேண்டியது.ஆயுதமெடுத்துப் பயங்கரம் புரிவதென்பதும்,பேனாவெடுத்து அத்தகைய பயங்கரத்தை-அராஜகத்தை நியாயப்படுதுவதென்பதும் வெவ்வேறானதில்லை.இரண்டினது வினையும் அழிவு அரசியலே.இங்கே,புலத்தில் அதிகமாக ஜனநாயக வகுப்பெடுக்கும் புலிப் பிரமுகர் நடராஜ முரளிதரனது கபடி விளையாட்டிலிருந்து ஓரளவு பேச வேண்டிய தார்மீகக் குரலாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.]


புலத்தில்,முன்னாள் சுவிஸ்ட்சர்லாந்து-இந்நாள் கனேடியப்புலிப்பிரமுகர் முரளிதரன் நடராஜா அவர்கள்,இப்போது ஜனநாயகம் குறித்தும்,பன்முக உரையாடல்குறித்தும் நிறையவே கூக்குரலிடுகிறார்.நிலத்தில்புலிப் பிரமுகர்களாக இருந்து மக்களைத் துவசம் செய்த கருணாகரன்,திருநாவுக்கரசு,நிலாந்தன் வகையறாக்களும் அவர்களது சர்வதேசத் தலைவர் கே.பி.யுங்கூட ஜனநாயகங் குறித்து நிறையவே பேசுகின்றனர்.இத்தகைய புலிப்பினாமிகளது கடந்த காலப் புலிப்பிரச்சாரகப் பரப்புரைகளையும் இப்போது விறாக்கியிலிருந்து தூசுதட்டிப் படிக்கிறேன்.ஈழநாதம் ஒலித்தவர்கள், அதை மூடி வைத்துவிட்டு மக்களுக்குள் மக்களாக ஜனநாயகத் தாகமெடுத்துத் தொடர்ந்து அழுகின்றனர்.எல்லாம் கருப்பு-வெள்ளை,சாம்பலெனவும் அவர்களால் நிறப் பகுப்புஞ் செய்து பேசப்படுகிறது.இவர்களது கடந்தகால அரசியல்-அந்நியச் சேவையும்,இந்நாள்வரைத் தொடர்ந்து உயிரோடு உலாவும் இவர்களது இருப்பினது அரசியலும் மிகுந்த சந்தேகத்துக்குரியது.

எட்டாம் வகுப்புக்கு அண்மித்த பாலகர்களெல்லாம் புலியாகப்பட்டத்துக்கும்,இவர்களுக்கும் பாரிய தொடர்புண்டு.வன்னிப் படுகொலையுள் அத்தகைய பால்குடிப் போராளிகளெல்லாம் பயங்கரவாதிகளெனக் கூறப்பட்டு, இலங்கைப் பாசிச இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.ஆனால்,இந்த முதிர்ந்த-முற்றிய புலிப் பிரமுகர்களெல்லாம் முன்னைவிடவும் துடிப்பாக நிலத்தில் உலாவர முடிகிறது.பாலகப் போராளிகளைக்கொன்ற சிங்கள-இந்திய அரசுகளுக்கு அந்தப் பாலகர்களைக் களத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்த இந்தப் பிரமுகர்களைக் குறித்துச் செஞ்சோற்றுக் கடனுக்கான நன்றியை மீளவும் எதிர்பார்த்து இயங்க, அனுமதிப்பதில் வெட்கமோ-வேதனையே இல்லை!அப்பாவிகளது குரல்வளைகளை நசித்த கயவர்கள் கருத்தியல்ரீதியாவொரு இனத்தைக் காயடித்தவர்கள் இப்போது நிறப்பிரிப்புத் தத்துவஞ் செய்கின்றனர்.

என்னவொரு அநியாயமான உலகம்!

இதுவரை தாம் சொல்வதே சரியானது.தாம் மட்டுமே தூய போராட்ட அமைப்புவெனக் கூறிக்கொண்டு,மாற்று அமைப்புகளைத் தடைசெய்து "துரோகிகள்"என்று கொன்று குவித்தார்கள்-இரயர் போட்டுக் குவியலாகக் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளை எரித்தார்கள்.அதையும்,தமிழீழத்தின்பெயரால் ஜனநாயகத்தன்மை என்றார்கள்.

யாழ்ப்பாண முஸ்லீம்களை, அவர்களது பிறந்த மண்ணைவிட்டு ஓடோட வெருட்டியடித்தார்கள்-கொன்றார்கள் புலிகள்!இதையும், நாம் புலம் பெயர்ந்து வாழும் மேற்குலகில் "சரியானது,முஸ்லீம்கள் சிங்கள அரசின் கைக்கூலிகள்"என்றும், அதையும் ஜனநாயகத்தின்பாலானதெனச் சொன்னார்கள் புலிகள்.

முரளிதரன் இவற்றை 2009 ஆம் ஆண்டுவரை நியாயப்படுத்தி, மக்களுக்குள் பிரச்சாரஞ் செய்தவர்.இப்போது,இவர்கூறும் "ஜனநாயகம்"இந்த வகையிலானதெனப் புரிந்துகொள்வதைத்தவிர வேறெதுவையும் முரளிதரனுக்கு வகுப்பெடுக்க முடியாது!

தமது காலடியில் அதிகாரம் இருந்தபோது,தாம் சொல்வதே "ஜனநாயகம்" என்ற புலிப்பிரமுகர் முரளிதரன் போன்றோர் இன்னும், மற்றவர்களுக்கும் இதைப் போதிப்பது அபத்தமானது.இவரே வலிந்து தமது புலிப் பாசிசச் சேட்டையை ஆதரித்த பால்குடிகளது(குறிப்பாகச் சயந்தன் கதிர்) தற்போதைய"நாவல்-சிறுகதை" தொகுப்புகளைத் தமது செலவில் பிரசுரஞ்செய்து, பினாமிப் பெயர்களுடாக அவற்றை தனிப்பட்ட நிறுவனத்தின் பதிப்பாகக் காட்டியபடி,அவற்றை வெளியீடு செய்வதென மக்களுக்குள் மீளப் புலிப் பாசசத்தை மென்மையான முறையில் தொடர்ந்து நகர்த்துகிறார்கள்.மக்களிடத்தில் தமது பாசிசச் சேட்டையை குறித்து விளக்கமளிக்கமுடியாத பாசிசப் புலிகள்-தம் வரலாற்றுப் பழியை,தவறை ஓத்துக்கொள்ள மறுத்தபடி தியாகமாக்கும் முயற்சியின்வழியில்,தற்போது மக்களது வாழ்வைத் தமது எழுத்துக்கேற்ப நீட்டியும்,முடக்கியம் இயற்கைவாதத் தன்மையுடன் நொந்தவர்களது விழிகள்முன்னே நகர்த்திக்காட்டித் தொடர்ந்து புலிமீதான ,அநுதாபத்தை வளர்த்துத் தம்மைத் தக்கவைக்கும் வியாபாரத்துக்குப்பெயர்"ஆறா வடு"மசிர்!

இது,மிக வலுவாக இனங்காணவேண்டிய நிகழ்ச்சி நிரல்.இதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த மக்கள்பாரா முகமாக இருந்து அநுமதிக்கும்போது,புலிகள்மீது செய்த அதே தவறைத்தாம் இந்த மக்கள் செய்து முடிக்கப் போகின்றனர்.

புலிகளது புதிய-புதிய போலி வடிவங்களை இனங்கண்டு,இவர்களை ஓடோட வெருட்டி அடிக்க வேண்டும்.இவர்கள் ஆபத்தானவர்கள்.

தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சிங்கள-அந்நிய அரசுகளுக்குக் காட்டிக்கொடுத்த கயவர்கள். இவர்களால் நமது மக்கள் இழந்த இலட்சக்கணக்கான பாலகர்களின்"ஆன்மா"நம்மை இன்னும் புலிகளை மன்னிக்காதே எனக் கூறிக்கொண்டே இருப்பதற்காக, அவர்களது பெற்றோரது கண்ணீரோடு நம்மெல்லோரையும் இறந்தவர்கள் அண்மிக்கின்றனர்.

எவரை மன்னித்தாலும் பாசிச ஈழ அராஜக இயக்கங்களையும்,குறிப்பாகப் புலிகளையும் எவரும் மன்னிக்கமாட்டார்கள்.அப்படி மன்னித்தால் தமிழ்பேசும் மக்களும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களும் இறுதியில் இலங்கை வரலாற்றிலிருந்து துடைத் தெறியப்பட்டுவிடுவர்!

புலிப் பிரமுகர் முரளிதரனைக் குறித்து மிகக் கவனமாக இருக்கவேண்டிய கட்டத்துள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்துள்ளனர்.ஏனெனில்,கடந்த காலத்தில் புலிகளையும்,அந்த அமைப்பையும்,ஜனநாயகப்படுத்திப் புரட்சிகரமான அமைப்பாக மாற்ற நாம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும்,எழுத்துக்களையும் "துராகிகள்-எட்டப்பர்கள்"எனக்கூறியபடி அந்த அமைப்பைத் தொடர்ந்து பாசிச அமைப்பாகவும்,மக்களது சுய நிர்ணயப்போரை,அராஜகப் போராட்டமாகவும் மாற்றியபடி, அந்நியத் தேசங்களுக்கும் ,சிங்கள அரசுக்கும் காட்டிக்கொடுத்த புலிப் பிரமுகர்கள் இவர்கள்.

இவர்களே, அந்த அமைப்பின் அப்பாவிப் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்க உடைந்தயாகச் சிங்கள-இந்திய அரசுகளுக்குள் இருந்துவிட்டு இப்போது,இந்திய-சிங்கள அரசுகளால் கண்டும் காணாமற் விடப்பட்டுள்ளனர். இவர்களே,கருணாகரன்,திருநாவுக்கரசு, நிலாந்தன்,முரளிதரன் போன்ற முகமூடிகளாவர்.இந்த மோசமானவர்கள்,புலியமைப்பை ஜனநாயகப்படுத்தும் எம்மெல்லாரதும் முயற்சியையும் எட்டப்பர் செயலெனப் பிரபாகரனுக்கு வகுப்பெடுத்தபடி அந்த அமைப்பையும்,பல்லாயிரக்கணக்கான தேசபக்த புலி அடிமட்ட இளைஞர்களையும் திட்டமிட்டுக் கொன்று குவித்த நயவஞ்சகர்கள்.

இவர்களை வரலாறு மன்னிக்குமா?

ஒரு கட்டத்துள் புலியமைப்பை தமது கைக்குள் வைத்துச் சிதைத்த திருநாவுக்கரசு,கரணாகரன்,கே.பி. , நிலாந்தன்,நடராஜா முரளிதரன் போன்ற பிழைப்புவாதக் கயவர்கள் (இவர்களது பட்டியல நூற்றுக்கணக்கானது.தலை மறைத்தபடி மக்கள் சொத்தோடு முதலாளிகளாகியவர்கள் பலர்.அவர்களை இனங்காட்டத்தக்க சூழலொன்று மிக விரைவில் வரும்.உண்மைகளை எவரும் மறைக்கமுடியாது!) ஒன்றுந் தெரியாத மனிதர்களாக உலாவருவது எவ்வளவு கபடமானது!

நாம்,முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவெனில்,சிங்கள அரசினது பாசிச இராணுவமானது எதுவுமே சரியாகத் தெரியாத பச்சைப் பாலகப் போராளிகளையெல்லாம் படுகொலை செய்தது. அந்தப் பாலகர்கள், வேள்விக்கு வளர்த்த கடாவாகப் புலி அமைப்பின் கட்டளைக்கமையப் போராடியவர்கள்.அவர்களே, சிங்கள இனவாதவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துள் கணிசமாக எதிர்ப்புக் குணாம்சமுடையவர்களாக இருந்தார்கள்.இவர்களே களத்தில் அநியாயமாகப் பலிகொடுக்கப்பட்டவர்கள்.அதுபோன்றே சரணடைந்தபோதும்,இத்தகைய கயவர்களால் காட்டிக்கொடுக் கப்பட்டுச் சித்திரவதைக்குட்பட்டுக் கொல்லப்பட்டவர்கள்.

ஆனால்,புலியினது பிரமுகர்களாக வலம்வந்த இந்தக் கே.பி. திருநாவுக்கரசு, கருணாகரன்,நிலாந்தன்,நடராஜ முரளிதரன் போன்றோர் இலங்கை அரசால் கண்டுகொள்ளாதவர்களாக விடப்படும் மர்மத்தைப் புரிவது கடினமானதா?

எனவே,இவர்களது தயவில் இலக்கியம்-ஜனநாயகம் வளர்ப்பதென்பது மீளவும் எமது மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் பலியாக்குவதாகவே எடுக்கப்படவேண்டும்!அதைப் பல முனைகளில் நிகழ்த்தும் விசும்பு நிலையுள் இவர்கள் இருக்கின்றனர்.

இவர்களது,இன்றைய குரல் மக்களது எதிர்ப்புணர்வை மீளத் தமது பக்கம் தொடர்ந்து தகவமைப்பதற்கே!இதன்வழி தொடரும் அந்நியச் சேவையை திறம்பட நடாத்தி முடிக்க முனையும் முரளிதரன் போன்ற பெரும் புலிப்பிரமுகர்களைப் பார்த்து " கேடு கெட்ட கயவர்களே" நமது மக்களைவிட்டு தள்ளிப்போங்கள் என்கிறேன்.

உங்களுக்கென்ன அருகதையுண்டு "ஜனநாயகம்-பன்முகத் தன்மைகள்" குறித்துப்பேசுவதற்கு?

உங்களது பாசிச அதிகாரம் சிதைந்து சின்னாபின்னமாகும் இந்தத் தருணத்தில் அரும்பும் மக்களது சுய மேலாண்மையைத் தொடர்ந்து அவர்களது குரலாக வெளிப்படுவதைத் தட்டிப்பறித்து உங்களுக்குள் உருவகப்படுத்தி, உங்களையும் மக்களது குடிசார் அமைப்புகளாக்கும் முயற்சியா இது?

நீங்கள் யார்?

மக்களையும்,அவர்களது குழந்தைகளையும் தொடர்ந்து "தமிழீழம்"சொல்லிக் கொலை செய்தவர்களல்லாவா?

இறுதிவரை மக்களைச் சுயமாகச் செயற்பட முடியாது தண்டித்த அராஜகவாதிகள் நீங்கள்!உங்களுக்கும் பன்முகத் தன்மைக்கும்,ஜனநாயகத்தும் என்ன தொடர்பு?

புலிப் பாசிஸ்டுக்காளாகிய உங்கள் அகராதியில், ஜனநாய வாடையே இல்லையே?

இரத்தம் படிந்த உங்கள் கரங்களையும்,பிழைப்பைக் குறித்தே இயங்கும் உங்கள் மூளைகளையும்,வஞ்சகத்தையே சுமக்கும் உங்கள் இதயங்களையும் காலம், ஒரு நாள் நிறுத்தியே தீரும்!

உங்களை,அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களும்,உயிராயுதமெனக் கண்டிப்பாகக் கொலைக்கு அனுபப்பட்ட அப்பாவி இளைஞர்களது துஷ்ப் பிரயோகஞ் செய்யப்பட்ட உயிரும் சும்மா விடாது!அந்த ஆன்மா உங்களது பரம்பரைகளையே தண்டிக்க முனையும்.

இஃது, சத்தியத்தின்பார்ப்பட்ட வரலாற்று நியதி, முரளிதரன் நடராஜா!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.04.2012


Keine Kommentare: