Sonntag, April 29, 2012

மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...

மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...

வரும் மே 1-2012  ஊர்வலத்துள்பாசிச இலங்கையை அரசை அம்பலப்படுத்துவதோடு ,மதம்,இனஞ் சார்ந்து ஒடுக்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தையும் அதன் கூட்டணிகளையும் மேற்குலக மக்கள் முன் அம்பலப்படுத்துவது அவசியமானது.

இன்று, இலங்கைத் தீவெங்கும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குள் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் அநாதவராக விடப்பட்டுள்ளனர்.

மாறிவரும் ஆசியப் பொருளாதாரச் சூழலுள்ஆசியப் பொருளாதாரக் கூட்டணியோடு சிங்கள ஆளும்வர்க்கம் கண்ட சமரசங்கள்,விட்டக்கொடுப்பு,வெற்றிகள் என்பது இலங்கைச் சிறுபான்மை இனங்களை வெறி கொண்டு, ஒடுக்கும் வழி முறைகளைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு " இலங்கையை தென்னாசியாவில் இன்னொரு இஸ்ரேலாக" மாற்றும் சகல உரிமையையும் வழங்குகிறது.

இந்த வழங்கலை இந்தியா-சீனா,இருஷ்சியா போன்ற நாடுகள் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற  "Shanghai Cooperation Organisation or SCO" கூட்டணித் தலைமை வழங்கி விடுகிறது.

அண்மைக் கிழக்கு வலயத்துள் மேற்குலக-அமெரிக்க " NATO "ஒத்துழைப்போடு இஸ்ரேல் எங்ஙனஞ் செயற்படுகிறதோ அங்ஙனமே இலங்கையும் செயற்படுகிறது.இதுவொரு ஆபத்தான சூழலுக்குள் இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தள்ளி விட்டிருக்கிறது.


இன்று தம்புள்ளப் பள்ளி வாசல் பிரச்சனைக்கு முன்னமே முஸ்லீம் மக்கள் தொடர்ந்து சிங்கள மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.எனவே,இன்றைய முஸ்லீம் மக்களது இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான இந்த எதிர்ப்புப் போராட்டத்துக்கு துணை நிற்பது இலங்கையின் பிரதான சிறுபான்மை இனமான தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானதும்-தார்மீகக் கடமையாகவும் இருக்கிறது.

வரலாற்றுத் தவறுகளைத் தள்ளி வைத்து, நாம் ஒன்றுபடும் நேரம் நெருங்குகிறது.இந்தச் சூழலுள் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் கருத்தரங்குகளை நடாத்தும்படி கோருகிறோம்.அதுசார்ந்து அடையாளப் போராட்டங்களைச் செய்வதும்,இதன் வாயிலாகச் சிங்கள ஆளும் வர்க்கத்தை வரும் மே 1 இல் உலகு தழுவி அம்பலப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

இந்த அறைகூவல் ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனத்துள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் நாம் என்ற அடிப்படையிலேயே நாம் முன்வைக்கும் உரிமையோடும், அவசியத்தோடும் விடப்படுகிறது.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.04.2012

Keine Kommentare: