//"கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது"//
ரொம்ப மெலினப்படுத்தப்பட்ட கருத்து.
குருபரனது மௌனம் கலைகிறது தொடர் இயக்க அராஜகவாதம்-உட்கட்சி ஜனநாயகமின்மைசார்ந்த படுகொலை அழிவு, அரசியலை இவ்வளவு மெலினப்படுத்திப்பார்பது மிகக் குறுகிய பார்வையாகும்.
உண்மையாக? பரம்பரைக் காரணிகள்,பண்பாட்டுணர்வு,ஐதீகம்தாம் படுகொலை-அராஜகத்தைத் தொடர்ந்து தீர்மானிப்பது?
புத்தர் அனைத்துக்கும் ஆசைதாம் காரணமென்கிறார்.ஆசை,பொருள் சார்ந்த உணர்வாகிறது.புறம் இல்லையெனில் அகவுணர்வு படிமமாக முடியாதென்பதில் புத்தர் பெருமையான சிந்தனையாளர்.ஆகையால் அவர் சொன்னார்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என.
சமீபத்து மார்க்ஸ் உரைத்தார்: "வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பது"என.
"வன்முறையுணர்வின் வேர்களை "எமது "கலாச் சாரத்திலும், ஐதீகங்களிலும்,பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது" இத்தகைய கருத்தைக்கொண்டிருக்கும் ஒருவர் போராட்ட வரலாறு சொல்லும் அவலம் நமக்கு."பண்பாடு-கலாச்சாரம்" இரண்டும் முதலில் வெவ்வேறானதாகப் புரிந்தும் கொள்கிறார்;விளக்கவேண்டும் குருபரன்!
இதைத் தொடர்ந்து(அவரது கலைந்த மௌனத்தை) வாசித்தபோது, குருபரன் ஒரு பத்திரிகையாளனாகப் பலதரப்பட்ட தளத்தில் அநுபவப்பட்டிருப்பது புரிகிறது.அந்தத் தளம் அனைத்துமே அராஜகத்தால் நிரம்பிய தளங்கள்.இவை, அனைத்துமே பல அந்நியச் சக்திகளது கைகளுக்குக் கட்டுப்பட்ட தளங்களாக இருந்திருக்கிறது.
சுகமாக அவற்றைக் கேள்விகளோடு விலத்திச் சென்றுவிடும் குருபரன் பண்பாட்டிலும்,ஐதீகத்திலும் பழியைப்போட்டு விட்டுக் கலைக்கப்படும் மௌனம் வெறுஞ் செய்திதாம்.
அஃது, அராஜகத்தின் பக்ககங்களையும்,அதன் நிகழ்வுகளையும் தொகுப்பதுதாம்.ஆனால்,நாம் அனைவருமே அறிந்த இலங்கை அரசியற் போக்குகளில் இந்திய-அமெரிக்க உளவு நிறுவனங்களது கைங்காரியம் எங்ஙனம் ஒரு இனத்தின் தலையை இயக்கங்களால் மொட்டையடித்தனவென்பதை "வரரலாற்றில் தடுக்கிக்கொண்டு" குருபரன் இங்ஙனம் பண்பாட்டில்-ஐதீகங்களில் பழி போடுதல் இந்தியப் பார்ப்பனியப் புனைவுக்கு ஒப்பானது சார்!
சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்,அதாவது 1987 ஆம் ஆண்டு ஒரு நாவல் வாசித்தேன். ரா.சு.நல்லபெருமாளது நாவல் அது.
பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் இந்த ஆசிரியரது "கல்லுக்குள் ஈரம்" நாவலை வாசித்துப் பெரும் மதிப்பு வைத்திருந்த நாவலாசிரியர் அவர்.அந்த ஆர்வத்தில் அவரது அனைத்து எழுத்துக்களையும் வாசிக்க ஆரம்பித்தபோது அவருக்கு நாவல் எழுதத்தெரியாதென்பதை உணர்ந்துகொள்ளும் நிலைக்குள் நான் வந்தேன்!; கூடவே,அவர் பெரு நிறுவன பார்ப்பனியத்தின் கோடியில் சாணாக்கியத்தைப் புரட்டும் நாவலாசிரியர் என்பதைப் புரிந்தும் வைத்தேன்.
ரா.சு.நல்லபெருமாளது கயமைமிகு "உணர்வுகள் உறங்குவதில்லை" என்னும் நாவலை 1987 ஆம் வருடம் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில்அந்த நாவலூடாக, பிரமாணனது நச்சு நாக்கை உணரத்தலைப்பட்டேன்.
உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சிதைத்து அவர்களது பரம்பரைக்குணமாகக் கொலையையும்-திருட்டையும்,அராஜகத்தையும் கற்பித்த நல்லபெருமாள்,எவ்வளவுதாம் இந்த மக்கள் கல்வி கற்று உயர்ந்தாலும் அவர்களது பரம்பரைக் குணம் அகலாது.அது, ஒரு பொழுதில் மேலெழுந்து கொலை-கொள்ளையில் ஈடுபடுமென முத்திராமன் என்ற பார்த்திரத்துக்கூடாக வெளிப்படுத்துவார்.அத்தோடு நிற்காது,உயர்ந்த பிரமணர்களால் போராடிப் பெற்ற சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவானது இழி நிலையடைந்ததற்குக் காரணம் இத்தகைய பரம்பரைக் குணமுடைய-ஜீன்ஸ்சுகள் அரசியலுக்கு வந்ததே காரணமெனவும் கூறுகிறார்.
அமைப்பைக் காப்பதற்காகச் சில அரசியல் வாதிகள்மீது பழிபோடும் சினிமாக்கள் நமக்குள் அதிகம்."நல்லவர்கள்-வல்லவர்கள்"ஆட்சிக்கு வந்தால் அகிம்சையும்,அரவணைப்புமே நிலவுமெனவும்,அமைப்பில் குழப்பமில்லையெனவும் வகுப்பெடுக்கும் இந்தியக் கருத்துநிலைகள் உலகு தழுவியதிலிருந்து பின்னப்பட்டதெனினும் பார்ப்பனியத்துக்கான சில சிறப்புக் கூறுகளும் உண்டு.அந்த"நல்லவர்கள்-வல்லவர்கள்"யாரென்று அவர்களே சொல்லும்போது பிரமாணனது பரம குருவான யக்ஞவல்க்கீயனும்-பிரவாஹானும் நம்முன் பிர்மவாதஞ் சொல்வது புரிகிறது.
குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?;கண்டுபிடித்துச் சொல்லுங்கோ!
குறைந்த பட்சமாவது ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றின் தகவல்களைச் சொல்வதற்கு முன்னாவது, சில நூல்களைக் கற்றாய்ந்து பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
"சத்தியத்தின் உரை கல் மூளையல்ல,பொருள்கள்-இயற்கைதாம் அந்த உரைகல்".
இனியாவது,இந்த மௌனம் கலைகிற தொடரைத் தொடர்வதற்குமுன் இராகுல சாங்கிருத்தியானின்"வால்காவிலிருந்து கங்கைவரை" வரலாற்று நூலை-கதைகளைக் கருத்தூன்றிக் கற்றுத் தொடர்வது செழுமையாக இருக்கும் குருபரன்.சமூகத்தின் இயக்கத்தைப் புரிவதற்கு இந் நூல் பெரிதும் உதவுவது.
நிலவுகின்ற சமூக வாழ்நிலைதாம் சமுகவுணவைத் தீர்மானிக்கிறது.புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டிவிடுகிறதென்பதெல்லாம் தற்போது நவகால சமூக-பொருளாதரவியல்-அரசியல் உளப்பகுப்பாய்வில் கெட்டிக்காரரானவர்களுக்குப் புரிந்து போவதில்லைதாம்.எனினும்,நமக்குள் பல ரா.சு.நல்லபெருமாளது சாதியக் கருத்தாளர்கள் நிறையவே உண்டு.
சமூகத்தை வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கண்ணோடு பார்ப்பது காலவாதியாகிப் போய்விட்டதாகப் புசத்தும் "தும்பி"களது இறைக்கை அடிப்பில்மகிழ்வுற்ற சிறார்கள், அந்தத் தும்பிகளுக்குப் பின்னே அணிவகுத்தோடுகிறார்கள்.
முத்துராமன் ஒரு நல்ல-தலைசிறந்த புதுக்கவிதை புனைவாளனாகவும், புரட்சிகரமாகக் கருத்தாடுபவனாகவும்,புரட்சிகரவாதியுமாகக் காட்டப்பட்டு இறுதியில், பரம்பரைக்குணத்தால் கொலைக்காரனாகவும், கள்வனாகவும், அராஜகவாதியாகவும் அவன் தொடர்ந்து-தொடர்ந்து இயங்குவது அவனது பரம்பரை இரத்தத்திலுள்ள குணமே-ஜீன்ஸ்சுகளே காரணமென்று பார்ப்பனிய வேதம் உரைத்த இந்திய அரசியலை குருபரனது கருத்தோடு உரைத்துக்கொண்டால் எங்கோவொரு லிங்கு கண்ணுக்குப் புலப்படுகிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2012
Keine Kommentare:
Kommentar veröffentlichen