Donnerstag, Mai 30, 2013

சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம்

பொதுபல சேனவின் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம்:

-சில குறிப்புகள்.

" ன்றைய இந் நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய சிங்கள அரசு இலங்கைச் சிறுபான்மை இனங்களைக் கட்டயாக "இணக்க அரசியலுக்குள்" திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன்னுள்ள எந்தத் தெரிவும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக் கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறு வடிவுள் உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!"

புலிவழிச் செல்நெறியூடாக நிகழ்த்தப்பட்டத் "தமிழீழ"ப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னான இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவே, புதிய குட்டி முதலாளிய வர்க்கத்தின் முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கை மேலும் நிலைப்படுத்தவேண்டிய தருணத்தைச் செல்வ-மற்றும் இயற்கை-மனித வளச் சுரண்டலிலிருந்து தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.

இன்றைய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவே ஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறதென்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நிலவும் அணிச் சேர்க்கை மற்றும் சாதிய அரசியலும் அதுசார்ந்த எதிர்ப் புரட்சிகரவாதிகளான முன்னாள் இயக்க வாதிகளும்,புலிப்பினாமிகளும் இலங்கையின் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தோடு ஒத்த அரசியல் புரிவதுகூட ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்சி நிரலுக்குட்பட்டதாகும்.இது,அபாயகரமான அரசியல் மற்றும், இயக்கப் போக்கை இலங்கையின்  குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும் இயக்க-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களது உரிமைகளுக்கு நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்கிறது.



குறிப்பாகச் சிங்கள இனவாதத்தாலும்-ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத் தத்தமது தலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி பெறுகின்றனர்.இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சி அரசியலுள் மேலுஞ் சிதறுண்டு உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ் சுட்டுகிறது. இதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித் திரட்சியாகும் சூழலோடு உணரத்தக்கதே.அதன்மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ் சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.

இந்த உளவியலின் பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்த தந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதே எமது அச்சம்!

இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.

இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மை என்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை நீங்கள் விட்டாலுஞ்சரி எம்மை இது, அச்சப்படுத்துகிறதென்பது உண்மை.

இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில் மேலும், இராணுவவாதம் மற்றும் கட்சி-இயக்க ஆதிக்கமானது பாசிசப் போக்கில் , வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும்.இதன்வழி,இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அரசியல்-பொருளியல் நெருக்கடியையும் அதுசார்ந்த அடக்கு முறைகளையும் எதிர்கொள்வது உறுதி.பொதுபல சேனவின் உருவாக்கமும்,அரசியலுரையாடலும் அவர்களது அமுக்க அரசியற் செயற்பாடும் மிருகவதைக்காகவுயிர்விடுவதென்ற எல்லைவரையொரு அடையாள எதிர்ப்பு மற்றும், இனவுறுதிப்படுத்தலுக்கானவூக்கத்தின் மூலம் தேசத்தின் உரித்துக் குறிப்பிட்டவொரு இனத்துக்கும், மதத்துக்குமானதென்ற அடையாளப் பலப்படுத்தல் அரசியலாகவுச்சம் பெறுகிறதென்பதை நாம் அவதானித்தாகவேண்டும்.பொதுபல சேனவை வெறும் இனவாத அரசியல் மகுடித்தனமெனவும் அஃது, இராஜபட்ஷவின் தூண்டுதலின் வினையெனவும் குறுக்குவதுகூட ஆபாத்தானது.






இதைச் சற்று விரிவாகப்பார்க்கலாம்.

மகிந்தாவுக்கு எதிரான இலங்கைச் சிறுபான்மை இனங்களது பாரிய எதிர்ப்பு அரசியலது தெரிவில், புலத்துத் தமிழர்களும்,பெரும் பான்மைப் புலிப் பினாமிகளும் மேற்குலக லொபிகளாக மாறியது சிங்களச் சமுதாயத்தின் அடையாள அரசியலை மேலும் வலுப்படுத்தும் என்பதில்:

1: இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மேலும் பிளவுபட்ட-இணைக்கவே முடியாத, இலங்கைப் பெருந்தேசிய உருவாக்கத்துக்கு எதிரான முட்டுக்கட்டைகள்.

2: தமிழ்பேசும் இலங்கையர்கள்,சிங்களம் பேசும் இலங்கையர்களது தேச இறையாண்மைக்கு எதிரான இயங்கு நிலைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் எனும் சமூக அச்சத்தைப் பெரும்பாண்மை மக்களிடம் விதைக்கமுனையும் இனவாதிகளுக்கு ஒத்த அரசியல்-சமூக உளவியற்றளத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்.

3: இலங்கையில் இன்றுவரை சிறுபான்மைச் சமூகங்களைக் கண்காணித்துவரும் சிங்களப் பௌத்தமத மேலாதிக்கம்.மேலும், உறுதுணையாகவிருக்கும் சிங்கள அடையாளத்துடன் பிணையும் மூலதனத்துக்காக, சிறுபான்மை இனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ,அவர்களது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும் இது உந்து சக்தியாகும்.

4: தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் தமது அடையாள அரசியலில்"தமீழம்"சார் சமூக உளவிலோடு நெருங்கியே இருப்பதாகவும்,இதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்களை மேலும் கண்காணிப்பதும் அவர்களது சுயாதீனமான தெரிவுகளை மறுத்து நிற்பதற்கும், இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் பிரிவினைவாத அபாயமும் உள்ளதாகச் சுட்டி மேலும் ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் நிலைக்க முடியும்.

5: பொதுபல சேனவின் உருவாக்கமும்  பேரினவாதத்துக்கிசைவான அரசியல்-அடையாள எதிர்ப்புப் போராட்டங்களும் இலங்கைச் சிறுபான்மை இனங்களைச் சீண்டி அவர்களது எதிர்ப்பரசியலைக் குறுந்தேசிய வாதமாகச் சிதைத்து, அவர்களது உளவியலைப் புரிவதற்கும்,அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அரசியல் புரிவதற்குமான பல தெரிவுகளை சிங்கள ஆளும் வர்க்கத்துக்குப்  "புதிய உத்வேகமாக" வழங்கியுள்ளது.

இத் தெரிவுகளது வலையில் வீழ்தப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள், தமது எதிர்ப்பு அரசியலது தெரிவில் நியமான சக்திகளைத் தெரிந்துகொள்ளாதவரை மேலும் தொடரப்போகும் சில சதிகளைப் பார்த்தால்,அஃது, இலங்கையினது இறைமைக்கு அவசியமேயென ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் அரசியலுக்கு வலுச் சேர்ப்பதில் முடியும்.

இவைகளின்வழி,தமிழ்பேசும் மக்களைப் புலிகளது அழிவுக்குப்பின்பு சோதித்தறியும் ஆசிய மூலதனம் மேலும், தமது மூலதன நகர்வுக்கேற்றவொரு சூழலில் தவிர்க்கமுடியாத சில ஜனநாயக விழுமியத்தினாலான அரசில் முன்னெடுப்பை இனிமேலும் நகர்த்த வாய்ப்பில்லாது போகிறது.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் "புலியழிப்பு"யுத்தத்தைப் போற்றும்-சிறப்புச் செய்யும் வெற்றிவாகைக் கொண்டா ட்டத்தின் வழியிலான பெரும்பான்மை இனத்தின் அகவிருப்பும்(வரலாற்றில் துட்டக் கைமுனுவின் இடம்) அதுசார்ந்த பெருமகிழ்வுங்கூடச்  சிறுபான்மை இனங்களது எதிர்பரசியலது மேற்குலகச் சாயல்- தெரிவுகொண்டு,இலங்கையினது "ஒரே" தேசவுருவாக்கத்துக்கு ஆபத்தான உளவியலைக் கொண்டிருக்கிறதென்ற முடிவில் சிங்கள ஆளும்வர்க்கம் தொடர்ந்த-தொடரும் முதன்மையான அடக்கு முறைகளை மேலும் வலுப்படுத்தும்.

இன்றும், தமிழ்பேசும் மக்கள் இணக்கமற்ற பிரிவினைவாத உளப்பாங்கோடு சமூக வாழ்வைக்கொள்வதென்ற உண்மை தெரியப்படுத்தப்பட்டு, இராஜபக்ஷ தமிழ்பேசும் மக்களது மனங்களில் தோல்வியாவது சட்டரீதியான இராணுவ ஒடுக்குமுறையை மேலும் இருப்புக்குள்ளாக்கி விடுகிறது.

ஆக,இராணுவம் மெல்ல முகாம்களுக்குச் செல்வதும்,பரந்தபட்ட தமிழ் மக்களது வரலாற்று மண்ணில் மக்கள் மன்றம் மன்றும் சமூக நிறுவனங்கள் மீளவும், தோன்றியொரு ஜனநாயகச் சூழல் அரும்பி, இயல்பு வாழ்வு வருவது இதன்வழி தடைப்பட முடியும்.பொதுபல சேன இதை நோக்கியே அரசியலைச் செய்வதென்பதில் எமக்கெந்தச் சந்தேகமுமில்லை!

இன்றைய இந்நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய சிங்கள அரசு இலங்கைச் சிறுபான்மை இனங்களைக் கட்டயாக "இணக்க அரசியலுக்குள்"திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன்னுள்ள எந்தத் தெரிவும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக்கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறுவடிவுள் உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!




தமிழ் நிலத்தின் இன்றைய சிங்கள அரச ஆதிக்கமானது கடந்த மூன்று தசாப்த காலமாவிழந்த தனது "அரச ஆதிக்கத்தை"த் தொடர்ந்து தமிழ் மண்ணிற்றகவமைத்து நிலைப்படுத்துவதற்காகவே வியூகத்து,அதற்கமையவே வன்முறைசார் கருத்தியற் கட்டுமானங்களைத் தொடர்ந்து மேல் மட்டமாக வுயர்த்துகிறது. சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடிக் கட்டுமானமானது சுயாட்சையாகவேனும் ஒரு தேசியத் தெரிவையெடுக்க முடியாதிருக்கும்இலங்கை தழுவியப் பல் தேசியப் பொருளாதாரப் பாச்சலில் குறுக்குவெட்டாய் மேலெழுந்த ஆசிய மூல தனத்தின் இசைவான நட்பார்ந்த கூட்டொத்துழைப்பில் கீழ்காணும் ஆதிக்கத் தகவமைபை அது தொடர்ந்து நிலப்படுத்தவும் முடிகிறது.

அ: தமிழ் பிரதேசங்களில் வலுவான பிரிவினைவாதப் போக்குச்சார்ந்த சமூகவுளவியற்றளம் இன்னமும் அழியவில்லை. எனவே,இராணுவம் இச் சமுதாயத்தை கண்காணித்துப் பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை இல்லாதாக்க அது மேலும் தமிழ்பேசும் மக்களது மண்ணில் நிலைகொண்டு, அச் சமுகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்கும்.

ஆ: தமிழ்பேசும் மக்களுக்குள் இல்லாதான சிவில் சமூக நிறுவனங்கள் மேலும் உருவாகாதிருப்பதற்கான ஜனநாயகவிரோதச் சட்டங்களின்வழி, அவசர காலச் சட்டம் தொடரும் போக்கில் அரச ஆதிக்கமான அரச ஜந்திரத்தின் வழியிலும், பொருண்மிய வழியிலும்மேலெழும்.

இ: தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பும், இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பும் சட்டரீதியான அங்கீகாரத்தோடு தமிழ்பேசும் மக்களது மண்ணில் இராணுவச் சர்வதிகாரதைத் தொடர்ந்து நிலைப்படுத்தும்.

இதுவே, இறுதியானதெரிவாகும் நிலையில், தமிழ்பேசும் மக்களது எதிர்காலம் இருள்மயமானது.

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்"என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி"செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்தால் மட்டுமல்லத் தமிழ்க் குட்டி முதலாளிகளாலுங் கூடத் தமது உரிமைகளை இழந்து அழியவே செய்கின்றனர்.

இத்தகைய அரசியல் நகர்வின் விளைவாய்ச் சிறுபான்மை இனங்களது எதிர்காலமானது இருள்மயமானது.குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களது தலைவிதியே கேள்விக் குறியாகும் என்பதை இங்ஙனம் விளங்கியாகவேண்டும்:


=> தமிழ்ப் பிரேதேசம் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்புக்குள் இருத்தி வைக்கப்படும்.

=>  சிவில் சமூக மன்றங்களது உருவாக்கம் வருவதற்கான ஜனநாயகச் சூழல் மறுக்கப்படும்.

=> தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் தொடர்ந்தும் அச்சத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படும்-பார்க்க வைக்கும் கருத்தியல் மேலாண்மை பெறும்.

=>  பரந்துபட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவக் கெடுபிடிகளுக்குள் தமது பொருளாதார-அபிவிருத்திகளை இழந்து வருவதைத் தடுக்கும் அரசியல் பலம் இல்லாதாக்கப்படும்.இராணுவத்தின் ஒட்டுக் குழுக்களாகவொரு புதிய தமிழ் மாபியப் பொருளாதாரம் உருவாக்கித் தமிழ்பேசும் மக்களை அனைத்து வழிகளிலும் ஆயுத ரீதியாகச் சுரண்டுவார்கள்.

=> பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஒத்துழைப்பை இவைகளுக்காகப் பெறுவதில், தமிழ் ஆளும் வர்க்கம் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு மேலும் நெருங்கிக்கொள்ளும்.

=>  பரந்துபட்ட தமிழ் மக்கள் ஆட்சியிலுள்ள தமிழ் தலைமைகளாலேயே திட்டமிடப்பட்டு பழி வாங்கப்படுவர்.

=> இதன் வழியான அரசியல் நடாத்தையில், மகிந்தா தொடர்ந்தும் தேச பக்தனாகவும்,அதியுத்தமமான சிங்களத் தேசியத்தின் குறியீடாகவும் மாற்றப்பட்டு,; தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படும்.

=> மேற்குலகம் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பயன்படுத்துவதும்,தமக்கான நலனை இலங்கையில் உறுத்திப்படுத்தவும் புலத்துத் தமிழர்களைப் பயன்படுத்தும்.


இது, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இராணுவ ஒடுக்குமுறையை மேலும் விரிவாக்கும்.எனவே, சட்ரீதியான அரசியலாகவும் இதை மாற்றும்.இது,"தமிழ் தேசியம்"உயிர்த்திருப்பதற்கும் அதைக் கையிலெடுத்து அரசியல் பிழைப்பை முன்னெடுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்குமான அறுவடைகளையுஞ் செய்யும்.இதன்வழி ஏமாற்றப்பட்டவர்கள்-படப்போகின்றவர்கள் தமிழ்பேசும் இலங்கையர்களே.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.05.2013


P/S: 
 படங்கள் சோனகர்.கொம்,மற்றும் இனியொருவிலிருந்து எடுக்கப்பட்டது.அவர்களுக்கு நன்றி.

Keine Kommentare: