Samstag, Mai 04, 2013

இலங்கை அரசு, இனவாத அரசென்பது பொய்யானது.

அசோக்கின் கட்டுரையை முன்வைத்து இலங்கை அரசினது புலத்து லொபிகளைப் புரிந்து கொள்ளல் என்பது...

சோக்கினது கட்டுரையில் பேசப்படும் விடையங்கள் குறித்துத் தொடர்ந்து பேசப்படவேண்டும்.இன்றைய பிளவுவாத அரசியலை வகுத்தியங்கும் சிங்கள அரசு மற்றும் இந்தியப் பிராந்திய நலனும் பரவலாகத் "தலித்துவ" அமைப்புகளையும் , பிரதேசவாதப் பிளவு வாதத்தையும் கூர்மைப்படுத்தும் கருத்தியலைப் பிழைப்புவாதிகளது நலனோடிணைத்துக் கருத்துப் பரப்புரை செய்கிறது.

இதன் வழித் தமிழ்பேசும் மக்களைப் பிளப்பதற்காகவே கருணா-பிள்ளையான் குழுவைக் கட்டிக் கிழக்குப் பிரதேச வாதத்தைத் திறம்படச் செய்தன ,இத்தகைய நலன்கள் -அரசுகள்.

இதன் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்ட  பிரான்சுத் தலித்துவது முன்னணியும் அதன்  உறுப்பினர்களும் மற்றும் கிழக்கைப் பிளப்பதில் தனக்கான ஆதாயத்தைக் கண்டடைந்த பிழைப்புவாதியும் ,ஆட்காட்டியுமான ஞானமும் இதன் உச்சக்கட்டமான இயங்கு தளத்தை நமக்குள் நிகழ்த்திக்காட்டினர்.

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை வியூகம்:

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் ,தமிழ்ப் பிரதேசமெங்கும் ஒட்டுக் குழுக்களை வைத்து மக்களை ஆயுதத்தால் அச்சமூட்டியும், அடிமைப்படுத்தியும் வந்தன.புலிகளது அதே பாணியில் ,இத்தகைய குழுக்கள் மக்களை அச்சமூட்டி அடிமைப்படுத்தியதுமல்லாது சாதிரீதியாகவும்-பிரதேச ரீதியாகவும் பிளந்தனர்.இதன் தொடரில் அராசகம் புரிந்த பிள்ளையானோடு இன்றுவரை கைக் கோற்கும் ஞானம் , பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் என்பதும் ,அந்த அரசியலுக்குக் கருத்தியல் வலுக்கொடுப்பதென்பதும்,  இலங்கை அரசினது தமிழர்கள்மீதான ஒடுக்குமுறைக்கு ஒத்தோடுவதென்பதும் ,அதன்வழியான அரசியலானது முற்று முழுதாக இந்திய நலனுக்குட்பட்டதென்பதும் நாம் அறிந்ததே.

பிள்ளையானது கட்சியின் உறுப்பினனான ஞானம் தேர்தல் பரப்புரை செய்து, அடவாடித்தனமாக மக்களை வெருட்டிய பிள்ளையானுக்குத் தோழமையானவரென்பதும் ,சட்டபூர்வ ஆலோசகரென்பதும் உரறிந்ததே.

இலங்கை அரசுக்கும் அதன்  இராணுவ ஆதிக்கத்துக்கும் ,தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கும் உடந்தையாகவே அரசியலை முன்னெடுக்கும் பிள்ளையான்-கருணா மற்றும் கே.பி. ,டக்ளசு போறோரெல்லாம் இலங்கை அரசினது  அரசியல் செல்வாக்குக்குட்பட்டவர்களானாலும் அவர்கள் அனைவரும் இந்திய அரசினது செல்வாக்குக்குட்பட்ட லொபிக் குறுப்புகளே. இங்கே, இவர்களை மெல்ல இயக்கும் வரதராசப் பெருமாளையும் இனங்காட்ட வேண்டும்அசோக் இந்தத் தளத்திலும் இயங்கும் அரசியலைக் குறித்துப் பேச வேண்டும்.இவர்களனைவருமே ஆபத்தானவர்கள்.

சோபாசக்தி போன்றோரை இந்தப்புள்ளியில் புரியவேண்டுமானால் "வரதாசாப் பெருமாளுக்கு ஈழப்போராட்டத்துள் ஆக்க பூர்வமான வரலாறொன்று இருக்கிறது" என்ற சோபாசக்தியின் கருத்திலிருந்து புரியும் அரசியலானது இந்தத்  தளத்தை மேலும் புரிய வைக்கும்.

அன்று ,இந்திய ஆமிகளோடு கப்பலேறிய அரசியலானது தமிழ்பேசும் மக்களது நலனுக்கான தெரிவில்லை!அது,முற்று முழுதாக இந்திய நலன்களை இலங்கைக்குள் திணிக்கும் ஒரு நிகழ்சியாகும்.

இப்போது,அசோக்கைப் புரியும்போது மிகச் சரியாகவே இத்தகைய பிளவு வாதிகளையும் இந்திய  இலங்கைக் கைக்கூலிகளையும்  கணித்துச் சொல்கிறார்.

இந்தச் சதியாளர்கள்தாம் இலங்கைக்கும்-புலத்துக்குமாகப் பறந்து, பறந்து  அரசியல் செய்வதிலிருந்து இலங்கைக்குப் புலத்து மக்களைக் காட்டிக் கொடுப்பதுவரை இவர்களது தெரிவாக இருக்கிறது.இத்தகைய இலங்கை -இந்தியக் கூலிகளைச் சாதரண நபர்களாக்கும் முயற்சியின் தெரிவாகவே இவர்கள் ,இலக்கியம்-சந்திப்புகள் ,கலந்துரையாடலெனச் செய்து மாற்றுக் கருத்துடையவர்களைத் தமக்குள் கிரகிக்கும் போது இது,சதியை மேலும் அரசியற்றளத்தில் வலுவாக்கிறது.இவர்களோடு வாசுதேவன் போன்றவர்கள்கூட  அரசியல்-கலந்துரையாடல் செய்யும்போது எனக்கு வாசுதேவன் பேசும் தேசியம்-புலிவழியான போராட்டம் புரியும் தளமானது பிழைப்புவாதம் மட்டுமல்ல.இதுவும் ,ஒருவகை இந்திய லொபி அரசியலே!

ஒருவகை  லொபி:





இங்கேயிதை மேலும் விரித்துச் சொல்வதானால் முள்ளி வாய்க்காலுக்குப் பின் யாழ்ப்பாணஞ் சென்ற தேவதாசன்-இராகவன்(முன்னாள் புலிகளது இயக்க-மத்திய குழுவின் முன்னணித் தலைவர்)மற்றும், சுகன் போன்றவர்கள் யாழ்பாணத்திலியங்கும் இந்திய-இலங்கை அரசுகள்சார்  குகதாசனின்   தமிழ்த் தொலைக் காட்சியொன்றில் தோன்றித் தமது பேட்டிகளை வாரி வழங்கினர்.அப்போது, யாழ்ப்பாணத்தில் கந்தோரோடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று ஆவணமான புத்தர் சிலைகள் குறித்துக் கருத்துச் சொன்ன வரலாற்று மேதை இராகவன்: "இவைகளெல்லாம் உறுதிப்படுத்தும் உண்மைகள், சிங்கள மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னமே இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான ஆதாரம்" என்றார்.

இதையும் மீறித் தேவதாசனும்,இராகவனும் அழுத்தமாகச் சொன்ன இன்னொரு கருத்தானது"தமிழ்பேசும் மக்கள்,தமிழர்கள்என்ற அடையாளத்தோடு செயற்படாது நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்-நாட்டை வளர்க்கவேண்டும்-காக்கவேண்டும்" என்றார்கள்.

இஃது, 2010-11 க்குள் நிகழ்ந்த இலங்கை அரசு-இந்திய வியூகத்தினது தயாரிப்பாகவே அன்று நான் பிரித்துடைத்துச் சொன்ன பதில்.இது குறித்துத் தூண்டிலிலும்,ஜனநாயகத்திலும் நான் பதிவுகளைப் பதிந்தே வைத்திருக்கிறேன்.

இந்தப் பல்வேறுபட்ட இலங்கை இந்திய நலன்களுக்குடந்தையான இத்தகைய பிழைப்புவாதிகளைக் குறித்து அசோக் நேர்மையாகப் பேசுகிறார்.மக்கள் நலன்சார்ந்து தோழர் அசோக் பேசுவது மிகவும் வரலாற்றுத் தேவையானது.
ஏனென்றால் நிர்மலா குழுவின் முக்கிய புள்ளி இராகவன் பேசுவதை மேலும் பாருங்கள் .இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும்  மேலும் வடமாகாணம் தனியே தமிழருக்குரியதல்ல அங்கே சிங்களவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்வதாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் பேட்டி வழங்கியதொரு திசையில்"புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென" வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன்  சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!

முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாதத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது இவர்களுக்கு.இந்தச் சந்தர்ப்பவாதமானது காலவோட்டத்தில் தமிழ் மக்களை அரசியலுரிமையற்ற மந்தைக் கூட்டமாக்கும் நரித்தனமான சிங்கள ஆளும் வர்க்கதஇதுக்குத் துணைபோவதே!இது வரலாற்றை மட்டுமா புரட்டும்?-முடிந்தால் சிங்கள இராணுவத்தின் ஒடுக்குமுறைகளைக்கூட  இத்தகைய குழுக்கள் நியாயப்படுத்துவதும் அதன் தளத்தில் இது வேளாளரின் பொய்யென்றும் சிங்கள இனவாத அரசுக்குத் துணைபோவதிலிருந்து தமது இருப்பை உறுதிப்படுத்தும்.

பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம் :

இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?

பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே..ஆனால் இராகவன்-நிர்மலா போன்றவர்களும் இவர்களைப்போலவே பிளவுவாத அரசில் செய்யும் ஊக்கங்கொண்ட மேற் சொன்னவர்கனளும் சந்திக்கும் புள்ளி இலங்கை -இந்திய மற்றும் அந்நிய ஆர்வங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்தலோடு இலங்கையின் புரட்சியைக் காயடித்தலென்பதே இதன் அர்த்தம்!

இத்தோடு புலத்துத் தலித்துவக் குழுக்களது போலித்தனமான கோசத்தை நாம் மேலும் பார்ப்போம்.இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின் கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தள்ளப்பட்ட புலத்துத் தலித்துவக் குழுக்கள் தமது எசமானர்களது நலத்தின் பொருட்டு ,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும் கூடவே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகின்றனர்.இது திட்டமிட்ட சதி!

சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது:





கடந்த 600 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.ஆனாலும், இவர்கள் அதைத் தெரிந்தே செய்கின்றனர்.இதுதாம் இவர்களுக்கான நிகழ்சி நிரல்.இதை வகைப்படுத்தி இயக்கும் ஒடுக்குமுறையாளர்கள் ,தமது இலக்குத் தமிழ் மக்களைப் பிளப்பதென்பதால் இத்தகைய பிளவை அரசியல் ரீதியாக இயக்கவும் ,அதைச் சட்ட ரீதியாக்கவும் முயலும் கருத்துக்களைக் கட்டுகின்றனர்.அதுவே, ஒருகட்டத்துள் சாதியச் சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு அது, "சுதேசி அடையாளமாக" க் கருத்தியற்றளத்தில் ஏற்கப்பட்டுச் சலுகைகளை வழங்குவதிலிருந்து அதை நிலைப்படுத்தவும் ,அதன்வழியில் மக்களை ஒரு குடையின் கீழ் அணி திரள்வதைத் தடுப்பதிலும் கவனமாக இருக்கின்றனர்.

தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்”தமிழீழப் போராட்டம்”குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.

இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.இதிற்றாம் ஞானத்தின்-தேவதாசனின் இராகவனின் ,நிர்மலாவின் பாத்திரங்களைப் புலத்தில் உருவாக்குகிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.இலங்கை அரசானது இந்தியாவின் வியூகத்துக்கமைய தனக்காவும் ஒரு லொபிக் குழுவை உருவாக்கிக்கொண்டாலும், அத்தகைய குழுவானது இந்திய ரோவுக்கும் கூசாத் தூக்கும்  சந்தர்ப்பமானது இயக்கங்களது நலனுக்குட்பட்ட அரசியலோடு பொருந்துவது. இதுவே "வேளாளன்-வேளாளன் ,யாழ் மேலாதிக்கம்"எனத் தொண்டை கிழியக் கத்திக்கொள்கிறது.

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்:

ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதற்குத் தோதாகவே தலித்துவக் குழுக்களைச் சாதியம் பேச வைத்தும் ,வேளாளரின் ஆதிக்கம் என்றெல்லாம்  வகுப்பெடுத்துத் தமிழ்பேசும் மக்களுக்குள் உட்  பூசல்களைத் தொடர்ந்து வளர்த்துவருகிறது  இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கம்.





இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதற்குத் தோதான அரசியலைக் கிழக்கில் பிள்ளையான்-கருணா குழு முன்னெடுக்கும்போது வடக்கில் டக்ளசு சார்ந்து சாதியவாதப் பிளவுகளை நிலைப்படுத்தத் தலித்துவக் குழுக்களைத் தீனிபோட்டு வளர்க்கும் அரசியலானது வடமாகாணத்துள் மக்களைத் தொடர்ந்து பிளவுப்படுத்திக் காலப் போக்கில் பெரும் கலவரங்களைச் சந்திக்க வைக்க முனைகிறது.இது, சிங்கள இனக் கலவரத்துக்கொப்பவும் அல்லது மேலும் பெரிதாகவும் வளர்க்கப்பட்டுச் சிங்கள இனவாதமெல்லாம் வேளாளரின் சாதியவொடுக்குமுறைக்கு நிகரானதல்ல என்றும் , வரலாறுரைக்கப்படலாம். இங்கு, பிரதான முரண்பாடு வேளாளச் சாதிய ஆதிக்கமேவெனும் அரசியல் கருத்தாக்கவும் ,இதுசார்ந்து மெல்ல எழுப்பப்படலாம்.இன்றைய தலித்துவ மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதமெல்லாம் இதை நோக்கிய நகர்த்தப்படுகிறது.

இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.





இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.

மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.

இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.இங்கே, தலித்துக் குழுக்களோ அல்லது கிழக்குப் பிள்ளையான்-ஞானம் மாபியாக்களோ அன்றி இலக்கியச் செம்மல் சோபாசக்தியின் விசமக் கருத்தாடலோ விலக்கல்ல.இது, குறித்து அசோக் பேசுவது ரொம்பச் சுணக்கமென்றாலும் பேசினரென்பது மக்கள் நலன்சார் அரசியலுக்கும் ,அதுசார்ந்து மக்களது உரிமைகளைத்  தூக்கிப்பிடித்து, இலங்கையில் உரிமைகளைப் பல்வேறு தேசியவினங்கள்-சிறுபான்மைச் சமுதாயங்காளக இருந்தபடி வென்றெடுப்பதற்காகவேனும் நாம் மேற்காணும் இலங்கை -இந்திய லொபிகளது பிளவுவாத - மக்கள்விரோத முகங்களைக் குறித்துக் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.இதைவிட வேறொரு தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் ஒடுக்குமுறையாளர்கள் விட்டு வைக்கவில்லையென்பதும் நாம் தரிசிக்க வேண்டிய யதார்த்தமாகும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
03.05.2013

Keine Kommentare: